நண்பர்களுக்கு,
டால்ஸ்டாய் குறித்த இந்தக் கட்டுரை என்னைச் சிந்திக்க வைத்தது. குழப்பியது என்று கூடச் சொல்லலாம்.
http://www.owlnet.rice.edu/~ethomp/Tolstoy%20and%20the%20Idea%20of%20a%20Good%20Life.pdf
குறிப்பாகப் ’போரும் அமைதியும்’ நாவலில் வரும் பியர் மற்றும் பிளாடோன் கராடேவ் போன்றவர்களைப் பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள். இது பற்றி நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.
கராடேவ் சாயலில் உள்ள பாத்திரங்களை ஜெயின் நாவலிலும் பார்க்கலாம். உ.ம். ரப்பரில் வரும் கண்டன் காணி. (இன்னும் சொல்லப் போனால் ரப்பர் நாவலில் உள்ள பல இடங்கள் போரும் அமைதியும் நாவலுக்கு ஒரு சல்யூட் வைப்பது போல எனக்குத் தோன்றியது. (குறிப்பாக நாவல் முடிவில் ஃபிரான்சிஸ் காரின் போனெட்டில் படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி ‘அங்கு எத்தனை அமைதி’ என்று சொல்லும் இடம்).
கராடேவ் போன்ற, கண்டன் காணி போன்ற, குட்டப்பன் போன்ற பாத்திரங்கள் ஓரிருவர் இந்த உலகத்தில் நிஜமாகவே இருக்கலாம். இன்றும் இருப்பார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் என்னைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இதுதான். பொன்னு பெருவட்டர் போன்றவர்களோ அல்லது கீரைக்காதனை பாடம் செய்து போடும் அந்த ஆசாமி போன்றவர்களோ (காடு – பெயர் ஞாபகமில்லை) உண்மையாகவே வெந்து, புழுத்துதான் சாகிறார்களா? உண்மையாகவே எனக்கு இது பிடி கிடைக்கவில்லை. படிக்கும் போது அவை உண்மைக்கு அருகில் இருப்பது போல் தோன்றினாலும், இப்போது நிஜமாகவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இவர்களைப் போன்றோர் தான் மனசாட்சிக்கு எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் எல்லோரையும் வணிக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுகமாக சுரண்டி, சுகமாக வாழ்ந்து, சுகமாக மடிகிறார்கள்.
இந்த ’நல்லவனாக இருப்பதில் வரும் பாரமின்மை’, ’தீமையில் உழல்பவனில் கடைசியில் கூடும் வெறுமை’ எல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் வெறும் கற்பிதங்கள் தானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கற்பிதங்கள் தவறில்லை. சமூக ஒழுங்குக்கு அவை முக்கியம். ஆனால் அவை வெறும் கற்பிதங்கள் தான் என்ற நினைப்பு இல்லையென்றால் கடைசியில் டால்ஸ்டாய்க்கு ஏற்பட்டது போல் ஒரு பெரிய நெருக்கடி (crisis) ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.
அர்விந்த்
[தல்ஸ்தோய்]
அன்புள்ள அர்விந்த்,
இவ்வரிசையில் நிகாஸ் கசந்த்சகிஸின் சோர்பா தி கிரீக்கை- யும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இயற்கை மனிதன், பிரபஞ்ச மனிதன், கட்டற்ற மனிதன் என சோர்பா உருவாக்கப்பட்டிருக்கிறான்.
தல்ஸ்தொயைப் பொறுத்தவரை அவரது முதல்நாவலான கொஸாக்குகளிலேயே அந்த வேட்டைக்காரக் கிழவர் எரோஷ்கா [ Eroshka] இந்தக் கதாபாத்திரங்களுக்கான ஒரு முதல் வடிவம். இயற்கையில் கலந்து கிட்டத்தட்ட மிருகமாக வாழும் தூயமனிதர். அதன்பின் பல கதைகளை நாம் உலக இலக்கியத்தில் காணலாம்.
இக்கதைகள் அனைத்துக்குமான கோட்பாட்டு முன்வடிவம் என்பது இயற்கைவாதம் என்று அழைக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு சிந்தனை அலைதான். இயற்கையே கடவுளின் பருவடிவம் என்ற நம்பிக்கை. கடவுள் என ஒரு ஆற்றல் இருந்தால் அது இயற்கையில் உள்ளுறையாகப் பொறிக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை அதன் சாரம். கடவுளுடன் இணைத்துப்பேசப்படும் அறம் அன்பு கருணை எல்லாமே இயற்கையிலும் இருக்கும் என்று அவர்கள் வாதிட்டார்கள்
[வேர்ட்ஸ்வெர்த்]
ஆகவே மிக உயர்ந்த வாழ்க்கை என்பது இயற்கையுடன் கலந்து வாழ்வதே என்று இயற்கைவாதிகள் எண்ணினார்கள். இயற்கையுடன் இணைந்த மிகச்சிறந்தவாழ்க்கை என மேய்ச்சல் வாழ்க்கையைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களில் நம் இயற்கைவாதம் பெரும் வீச்சுடன் வெளிப்படுகிறது. குறிப்பாக வேர்ட்ஸ்வர்த். அக்கவிதைகள் வழியாக அது உலகமெங்கும் சென்றது.
இயற்கைவாதத்தைக் கோட்பாடாக விரித்தவர்கள் என ரூஸோ முதல் எமர்சன், தோரோ வரை பலரைச் சொல்லமுடியும். அவர்கள் அக்காலகட்டத்தின் சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பைச் செலுத்தினார்கள். அவர்களில் பலர் ஏற்கனவே தொழிற்புரட்சியின் எதிர்விளைவைக் கண்டு மாற்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தவர்கள். காந்தியில்கூட அப்பாதிப்பைக் காணலாம். பின்னரும் அரைநூற்றாண்டுக்காலம் புனைவுகளில் அச்சிந்தனை எதிரொலித்தது.
[ஹெர்மன் ஹெஸ்ஸி]
உலக அளவில் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கணிசமான படைப்புகளில் இச்சிந்தனையின் செல்வாக்கைக் காணலாம். இன்னொரு உதாரணம் ஹெர்மன் ஹெஸ்ஸி. சித்தார்த்தா சொல்லும் மீட்பு என்ன? இயற்கையுடன் மிச்சமில்லாமல் இணைந்திருத்தல் அல்லவா? அதைத்தானே கடைசியில் சித்தார்த்தன் கங்கைக் கரையில் கண்டடைந்தான்?
என் இளமையில் நான் வாசித்த இந்நாவல்கள் எனக்களித்த அடிப்படை தரிசனம் என் அனுபவமாகவும் விரிந்தது. நான் இயற்கையின் மடியில் பிறந்தவன். இயற்கையை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பவன். இயல்பாகவே இவர்கள் என் படைப்பாளிகளாக ஆனார்கள்.
[நிகாஸ் கசந்த்ஸகிஸ்]
ஹிப்பி இயக்கத்தில் அச்சிந்தனையின் செல்வாக்கு அபாரமானது. சோர்பா என்ற கதாபாத்திரத்துக்கும் ஹிப்பி இயக்கத்துக்குமான உறவைப்பற்றி நித்ய சைதன்ய யதி ஓர் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய சூழியல் சிந்தனைகள் அனைத்திலும் இயற்கைவாதம் ஆழமான தொடக்க விசையைச் செலுத்தியிருக்கிறது.
தர்மம் வாழும், அதர்மம் அழியும் என்ற எளிய வாக்கியமாக இந்தக் கதைகளைக் காணமுடியாது. போரும் அமைதியும்போன்ற மாபெரும் ஆக்கங்களின் மையம் அதல்ல. அதர்மத்தின் வீச்சை, மானுடத்தீமையின் விஸ்வரூபத்தையே இந்தப் பெரும்படைப்புகள் சொல்கின்றன. ஒரு காவியம் என்பது தீமையின் முடிவின்மையைச் சொல்லியாக வேண்டும் என்பது கூல்ரிட்ஜின் கூற்று. மகாபாரதமும் ராமாயணமும் கூட அதற்கான உதாரணங்களே.
[எமர்சன்]
இந்திய சிந்தனையை வைத்து நோக்கினால் இயற்கை மட்டும் அல்ல, பிரபஞ்சமே பிரம்மத்தின் தோற்றமே. ஆனால் பிரம்மம் நன்மையால் அழகால் ஆக்கமும் மட்டுமே ஆனதல்ல. குரூரமும் குரூபமும் அழிவும் அதுவே. இயற்கையில் இருந்து ஒருவன் பெறச்சாத்தியமானது அழகையும் அன்பையும் அறத்தையும் மட்டும் அல்ல. இருளையும் ஒளியையும் கொண்டு பின்னப்பட்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் நெசவைத்தான். அது அளிக்கும் சமநிலையையே இயற்கையனுபவம் என நாம் சொல்லத் துணிவோம்.
ஆனால் கூடவே ஓர் ‘ஆனாலும்’ உள்ளது. அந்த ஆனாலும் கலைஞனின் இலட்சியக்கனவாக இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு கனவு கூட இல்லாமல் இருக்கும் படைப்புக்குப் படைப்புக்கான நியாயம் உருவாவதில்லை. எல்லாவற்றுக்கும் அப்பால் வென்றுமுன்செல்லும் மானுட மேன்மையை, இலட்சியக்கனவைக் கலைஞன் சொல்லும்போதுதான் அவன் எழுதுவதன் நோக்கம் நிறைவேறுகிறது. ஏனென்றால் அப்படி ஒரு கனவு இல்லையேல் அவன் எழுதுவதே தேவையற்றதல்லவா? இலக்கியமென்பதே தன்னளவில் ஒருஇலட்சியநாட்டம் அல்லவா? தீமையே முழுமுற்றானது என்றால் அதனாலேயேஅதைப்பற்றி எழுதுவது தேவையற்றதாகிவிடுகிறதல்லவா?
[ரூஸோ ]
ஆகவே தான் படைப்பாளிகள் அறம் பற்றிப் பேசுகிறார்கள். அறம் என்பதை ஒரு கனவாக எல்லாவற்றுக்கும் மேலே நிறுத்துகிறார்கள். அறம் உண்மை வாழ்க்கையில் இருக்கிறதா என்பதை விட இருக்கவேண்டும் என்பதே அதற்கான பொருளாகஇருக்கிறது. எல்லாப் பெரும்படைப்பாளிகளும் அடிப்படையில் மாபெரும்அறப்பிரச்சாரகர்களே என தல்ஸ்தோய்,தஸ்தயேவ்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் ப்ளூம் எழுதி வாசித்த நினைவு.
ஆனால், கடைசியாக உண்மையிலேயே அறம், நீதி என்ற ஒன்று உண்டா? வெற்றிபெற்றபோக்குகள் எப்போதும் கவனத்தைக் கவர்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமானுடவரலாற்றின் போக்கை எடுத்து நோக்கினால் அறமும் நீதியுமே மானுட இனத்தை மேலும் மேலும் கொண்டு செல்கின்றன என்பதையே நான் காண்கிறேன். அதற்குக் கடவுள் காரணமல்ல. அறம் நீதி போன்றவை மண்வெட்டி போல, சக்கரம் போல, தீ போல- மனிதன், தான் தங்கி வாழவும் சகவாழ்வை அமைக்கவும் மேலே செல்லவும் வேண்டிக் கண்டுபிடித்தவை, மெல்ல மெல்ல உருவாக்கிக்கொண்டவை. அவை இல்லாமலிருப்பதைவிட இருப்பதே உதவியானது என அவன்மீண்டும் மீண்டும் காண்கிறான். ஆகவே தேன்கூட்டைக் கலைக்கக் கலைக்க மீண்டும்கட்டிக்கொண்டே இருக்கும் தேனீ போல மனிதன் அறத்தின் அடிப்படையில்சமூகங்களை மேம்படுத்திக் கட்டிக் கொண்டே இருக்கிறான்.
[தேவதேவன்]
தமிழில் இரு படைப்பாளிகளிடம் இந்த இயற்கையான மானுட அறம் பற்றிய ஆழமான நம்பிக்கை இயல்பாகவே வெளிப்படுவதைக் காணலாம். ஜெயகாந்தனின் ஒருமனிதன் ஒருவீடு ஓர் உலகம் அதற்குச் சிறந்த உதாரணம். ஹென்றி ஒரு இயற்கையின் குழந்தை. தேவதேவன் அவரது பெரும்பாலான கவிதைகளில் இயற்கையில் இருந்து அறமும் கருணையும் வெளிப்படும் தருணங்களையே தொட்டு எடுக்கிறார்
நித்யாவின் மேற்கோள். இன்றுவரை இந்த பூமியில் தீமையின் பொருட்டுத் தீமைமுன்வைக்கப்பட்டதில்லை. அப்பட்டமான தீமைகூட நன்மையின் முகமூடியுடன் மட்டுமே மானுடம் முன்புவந்து நிற்க முடியும். ஏனென்றால் தீமையை ஒருபோதும் மானுடம் ஏற்றுக்கொள்ளாது.
[ஜெயகாந்தன்]
ஒரு தீய சமூகத்தை, ஓர் அறமற்ற சமூகத்தை அமைக்க அறைகூவும் ஒருவர் எத்தனை பிரஜைகளை இந்த மாபெரும் உலகில் கண்டடைய முடியும்? தீமையில் ஊறியவன்கூடத் தன் பிள்ளைகளுக்கு அறம் மிக்க உலகில் ஓர் இடத்தை அல்லவா தேடுகிறான்? எங்கோ ஓர் எல்லையில் அறத்தின் பெயரில் அல்லவா அவன் சத்தியம் செய்கிறான்? ஒரு கையறு நிலையில் அறத்தை அல்லவா தனக்காகக் கோருகிறான்?
அதுவே பேரிலக்கியங்களில் நாம் காணும் மானுட அறம். அந்த அறத்தையே கரட்டோவ் அல்லது சோர்பா அல்லது கண்டன் காணி அல்லது குட்டப்பன் போன்றோர் பிரதிநிதித்துவம்செய்கிறார்கள்.
ஜெயமோகன்
[குழும விவாதத்தில் இருந்து]