பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

ஜார்ஜ் சாண்ட்

நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா

கதாநாயகி. நூல் வாங்க

ஜார்ஜ் சாண்ட் என்னும் இலக்கியவாதியை நான் கேள்விப்பட்டதே இல்லை, சைதன்யாவின் கட்டுரையை நீலி இதழில் பார்ப்பது வரை. அக்கட்டுரை ஒரு திகைப்பை அளித்தது. அதில் பேசப்பட்டிருக்கும் நாவலும் சரி, மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகளும் சரி ஒரு முதன்மையான பேரிலக்கியவாதி அவர் என காட்டுகின்றன. அவர் அக்காலத்தில் புகழுடனும் இருந்திருக்கிறார்.

ஐரோப்பாவில் கொண்டாடப்பட்ட பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை நாடகத்தன்மை கொண்டது. கதைகளாக அதை விரித்து விரித்து எழுதுவார்கள். தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய், காஃப்கா ஆகியோரின் வாழ்க்கைகள் இன்றும்கூட மீள மீள எழுதப்படுகின்றன. அந்த வாழ்க்கையைக்கொண்டு அவர்களின் புனைவுலகங்கள் விரித்தெடுக்கப்படுகின்றன.

அவ்வகையில் பார்த்தால் ஜார்ஜ் சாண்டின் வாழ்க்கையும் மிகத்தீவிரமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. மீறல் ,அதன் விளைவான மோதல், அதன் துயர்கள், தன்னழிவுகள் என அன்றைய யுகத்தின் உச்சப்புள்ளியில் ஒன்று அது. அன்றைய காலகட்டத்தின் ஆன்மிக, அற, அறிவுக்கொந்தளிப்புகளையே அவர் வாழ்க்கையை வைத்து எழுதிவிடமுடியும்.

இருந்தும் ஏன் ஜார்ஜ் சாண்ட் மறுக்கப்பட்டார்? ஒருவர் கூட அவரைப்பற்றி நம்மிடம் சொல்லவில்லை?

இந்த அனுபவம் முன்னரே எனக்குண்டு. நான் என் வாசிப்பில் கண்டடைந்த ஒரு ‘மாஸ்டர்’ மேரி கொரெல்லி. உலகளவிலேயே மேரி கெரெல்லி என இணையத்தில் தேடினால் எனது இணையக்குறிப்புகளே கிடைக்கும் என்றுகூட கேலியாகச் சொல்வார்கள் நண்பர்கள். முழுக்க மறைந்துபோன ஒரு படைப்பாளி. ஆனால் நான் என் ஆன்மிக அலைக்கழிப்பின் நாட்களில், 1984ல் அவரைக் கண்டடைந்தேன். காஸர்கோடு நூலகத்தில். அங்கே 1920ல் பணியாற்றிய ஏதோ பிரிட்டிஷ் டாக்டரின் சேகரிப்பு அந்நூல்தொகை.

மேரி கொரெல்லி

என் அம்மாவுக்கு பிடித்த எழுத்தாளர் மேரி கொரெல்லி என்பது அந்த அட்டையை பார்த்ததும் ஞாபகம் வந்தது. அன்று என்னை ஆட்கொண்டு, பல வாரங்கள் உடனிருந்த பெரும்படைப்பு அது. அதன் பின் அதைப்பற்றி மிக விரிவாக பல கட்டுரைகள் தமிழிலும் மலையாளத்திலும் முன்பு வந்துகொண்டிருந்த ஆங்கில இலக்கிய இதழ் ஒன்றிலும் எழுதியிருக்கிறேன்.

ஆனால் சுந்தர ராமசாமி நான் வாயில் நுரைதள்ள பேசியதைக் கேட்டும் மேரி கொரெல்லியை நிராகரித்துவிட்டார் – படிக்காமலேயே. ‘அப்டி ஒரு காலகட்டத்தோட ரைட்டர்ஸ் பலபேர் இருக்காங்க. எல்லாரையும் நம்மாலே படிக்க முடியாது. கிரிட்டிக்ஸோட அங்கிகாரம் பெற்று காலத்தை தாண்டி வர்ரவங்களை மட்டும்தான் படிக்கணும். அதான் சாத்தியம்’ மேரி கொரெல்லிக்கு விமர்சன ஏற்பு அறவே இல்லை.

எடித் வார்ட்டன்

ஸ்வீடிஷ் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ் எழுதிய கெஸ்டா பெர்லிங் நாவலை க.நா.சு சுருக்கமாக மதகுரு என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார். அவருடைய மொழியாக்கங்களில் எவருமே கவனிக்காதது அது ஒன்றுதான். அவருக்கே அது தெரிந்திருந்தது. ’செல்மாவை ஒரு நல்ல படைப்பாளியாக விமர்சகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது’ என க.நா.சு எழுதினார்.

அன்றைய பொதுவான வாசிப்புப்பண்பாட்டால் பதப்படுத்தப்பட்ட நானும் மதகுருவை வாசிக்கவில்லை. இத்தனைக்கும் நானே பழைய புத்தகக்கடையில் வாங்கிய பிரதி என்னிடமிருக்கிறது. செல்மா ‘மரபான கிறிஸ்தவ மதிப்பீடுகளை மரபான முறையில் சொல்லும் எழுத்தாளர்’ என்று பொதுவாக மதிப்பிடப்பட்டார். ‘ஒரு மாதிரியான பாட்டி இலக்கியம்’ என்று சுந்தர ராமசாமி அதை மதிப்பிட்டார்.

செல்மா லாகர்லொவ்

இர்விங் வாலஸின் ‘The Prize’ என்ற நாவல் நோபல்பரிசின் நடைமுறைகள் பற்றியது. அந்நாவலில் வேறொரு பெயரில் செல்மா வருகிறார். ‘தவறுதலாக’ நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்ட ஒரு பாட்டி. அந்த குற்றவுணர்ச்சியால் நோபல் விழாக்களில் ஒருவகையான மன்னிப்புகோரும் பாவனையுடன், செயற்கையாகப்பேசி வளைய வருகிறார்.

நான் மேலும் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு மொழியாக்கத்தில் செல்மா லாகர்லெவ் எழுதிய தேவமலர் என்னும் கதையை வாசித்தேன். அக்கதையின் அபாரமான கவித்துவம் என்னை மின்னதிர்வு போல தாக்கியது. அதன்பின் செல்மாவை ஆங்கிலம் தமிழ் என தேடி வாசித்தேன். செல்மா முன்வைப்பது மதப்பிரச்சாரத்தை அல்ல, அறம் திகழும் மானுடக்கனவு ஒன்றை. அதை முன்வைக்க உள்ளம் சிறகு கொண்டு மேலெழுந்திருக்கவேண்டும், அதற்கு கள்ளமின்மையின் எடையின்மை இருந்தாகவேண்டும்.

செல்மாவை வாசிக்கையில் ஓர் இடத்தில் செல்மா லாகர்லெவ், இசாக் டெனிசன் போன்ற எழுத்தாளர்கள் என போகிறபோக்கில் ஒரு நையாண்டியை நியூயார்க்கர் இதழின் இலக்கியவிமர்சகர் நழுவவிட்டிருந்தார். இசாக் டெனிசனை தேடி வாசித்தேன். அதே பறந்தெழல், தேவதைகளும் சிறுமிகளும் சென்றடையும் மகத்தான உலகமொன்றை இசாக் டெனிசன் எனக்குக் காட்டினார். நான் அருண்மொழியிடம் கதைகளை அளித்து மொழியாக்கம் செய்யச்சொன்னேன். அவள் மொழியாக்கம் செய்த நீலஜாடி என்னும் கதை 1995 ல் சுபமங்களா இதழில் வெளிவந்தது.

இசாக் டெனிசன்

ஒரு நாடோடிக்கதை, ஒரு தேவதைக்கதை போல அழகானது நீலஜாடி. இசாக் டெனிசனின் அதேபோன்ற சிலகதைகளை மொழியாக்கம் செய்ய எண்ணினேன். அப்போது சொல்புதிது வெளிவந்துகொண்டிருந்தது. அதில் நான் எம்.எஸ். அவர்களை ஒரு மொழிபெயர்ப்பாளராக மறுஅறிமுகம் செய்திருந்தேன். அவருக்கு கதைகள் தெரிவுசெய்து அளித்து மொழியாக்கம் செய்யவைத்தேன். பல அழகிய கதைகளை மொழியாக்கம் செய்த எம்.எஸ். இசாக் டெனிசன் கதைகளை மட்டும் ‘பொறவு பாக்கலாம்’ என புன்னகையுடன் ஒதுக்கிவிட்டார். பிறகு புன்னகையுடன் ‘குழந்தைக்கதை மாதிரி இருக்கு’என்றார்.

அண்மையில் சுசித்ராவுக்கு இசாக் டெனிசன் பற்றி சொன்னேன். சுசித்ராவை ஆட்கொண்ட படைப்பாளிகளில் ஒருவராக இசாக் டெனிசன் ஆனார். ‘அது மாதிரி ஒரு கதை எழுதிட்டாப்போரும் சார்’ என அவர் பெரும் பரவசத்துடன் சொன்னார். சில கதைகளை மொழியாக்கம் செய்தார்.

அப்படி மறைக்கப்பட்டுவிட்ட பல படைப்பாளிகள் உண்டு. உதாரணமாக எடித் வார்ட்டன். (என் பேய்க்கதைகளில் எடித் வார்ட்டனின் நுண்செல்வாக்கு உண்டு. எனக்குத்தெரிந்து எந்த வாசகரும், விமர்சகரும் சொன்னதில்லை). என் எழுத்தில் , குறிப்பாக உளவிவரணைகளில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய படைப்பாளி ஜார்ஜ் எலியட். குறிப்பாக உணர்வுகள ‘அடக்கி வெளியிட’ வேண்டியதில்லை என எனக்கு கற்பித்தவர். ஜார்ஜ் எலியட் பற்றியும் தமிழில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

எடித் வார்ட்டன்

அப்படி என்னை ஆட்கொண்ட பல பெண் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ஃப்ரான்ஸெஸ் பர்னி. அவருடைய உலகை மிக அணுக்கமாகத் தொடர்ந்து சென்று அவர் எழுதியிருக்கக்கூடியவற்றையும் என் கதாநாயகி நாவலில் எழுதியிருக்கிறேன். 1840ல் மறைந்த  ஃப்ரான்ஸெஸ் பர்னி அப்படி நூற்றி எண்பதாண்டுகளுக்குப்பின் அவர் கேள்வியே பட்டிருக்காத ஒரு மொழியில் மறுபிறப்பு எடுப்பதில் இலக்கியத்திற்கே உரிய பெரும் மர்மம் ஒன்று உள்ளது. முற்றிலும் புதியசூழலில் எழுந்து அவர் வந்து நின்றிருப்பதில் இலக்கியத்தின் அழிவின்மை வெளிப்படுவதாக எண்ணிக்கொள்கிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்று, சில ஆங்கிலேயர்களாவது வாசிக்கவேண்டுமென நான் விரும்பும் நூல்களிலொன்று கதாநாயகி.

இந்திய எழுத்தாளர்களிலேயே கூட குர்ரதுல்ஐன் ஹைதர், ஆஷாபூர்ணாதேவி இருவரும் பெரும்படைப்பாளிகள் என 35 ஆண்டுகளாக நான்தான் திரும்பத் திரும்பச் சொல்லி நிறுவினேன். வெங்கட் சாமிநாதனோ, சுந்தர ராமசாமியோ, வேதசகாயகுமாரோ அல்லது பிற விமர்சகர்களோ வாசகர்களோ அன்று சொன்னதில்லை.

ஜார்ஜ் எலியட்

சைதன்யாவின் கட்டுரை அவளுடைய ஆளுமையை நன்கறிந்த எனக்கு வியப்பூட்டவில்லை. அழுத்தமான, மென்மையான, பிரியத்திற்குரிய இயல்புகளுக்குள் திட்டவட்டமான ஒரு மீறலும் தனிப்பார்வையும் கொண்டவள். அவள் தலைமுறையில் தமிழில் அத்தனை தீவிரமான இலக்கியவாசிப்பு கொண்ட பெண்களை நான் கண்டதில்லை.மிகுந்த தெளிவுடன், ஓர் இலக்கியப்பேராசிரியரின் குரலில் பேசவும் அவளால் இயலும். இன்று அவள் பேசுவதன் வழியாகவே நான் இலக்கியத்தை புதியதாக அறிகிறேன். ஆனாலும் அவளுடைய கட்டுரைகள் எனக்கு புத்தம்புதியவையாகவே உள்ளன

இக்கட்டுரையில் சைதன்யா ஒருவகையில் western canon என்று சொல்லப்படும் இலக்கியத்தொகுதியையே நிராகரிக்கிறாள். அவை ஆண்களின் பார்வையில் உருவாக்கப்பட்டவை, ஆண்களுக்கு உகந்த உலகை உருவாக்குபவர்கள் மட்டுமே அதில் இருக்கிறார்கள் என்கிறாள்.

பதினெட்டு ,பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆண் இலக்கியவாதிகள் ஓர் உலகை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டார்கள். அது புரட்சிகள், புரட்சியின் வீழ்ச்சிகள், போர்கள் ஆகியவற்றாலான காலகட்டம். அதிலிருந்து நம்பிக்கை, நம்பிக்கைச்சரிவு, சோர்வு, இருண்மைநோக்கு, பொருளின்மையுணர்வு என அவர்கள் அடைந்த உணர்வுநிலைகளும் தீவிரமானவை. ஆனால் இவையே உலக உண்மை என அவர்கள் கற்பனைசெய்துகொண்டார்கள். இவற்றை முன்வைப்பதே உயரிலக்கியம் என்று வரையறை செய்துகொண்டார்கள். அதற்குள் வருவனவற்றையே முன்வைத்தார்கள்.

ஃப்ரான்ஸெஸ் பர்னி

ஆகவே பெண்படைப்பாளிகள் பலர் அவர்களின் உலகுக்குள் நுழையவே இல்லை. அவர்கள் உலகில் இடம்பெற்ற பெண்கள் இரண்டு வகையினர். ஒன்று, அவர்களால் காதலிக்கப்படும் தகுதி கொண்ட பெண்கள். அதாவது நுணுக்கமான பெண்மையுணர்வுகள் என ஆண்கள் எண்ணிய சிலவற்றை வெளிப்படுத்திய பெண் எழுத்தாளர்கள் – உதாரணமாக எமிலி புராண்டே போன்றவர்கள். பெரும்பாலும் ஆண்பெண் உறவின் நுட்பங்களை, மிகையற்ற நாடகத்தன்மையுடன் எழுதியவர்கள் இவர்கள்.

இரண்டாவது வகையினர், பெண்ணியம் உருவானபிறகு எழுதவந்தவர்கள். சிமோன் த பூவாவின் வழித்தோன்றல்கள். ஆண்களின் உலகைச் சீண்டுபவர்கள், உடைக்க முயல்பவர்கள். இவர்களை ஆண் எழுத்தாளர்கள் கொண்டாடுவதற்கு இரு காரணங்கள். ஒன்று ‘நாங்களும் முற்போக்குதான்’ என காட்டிக்கொள்வது. (ஆம், சாட்டையடி பதிவு தோழி, ஆணாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன் தோழி வகை வெளிப்பாடேதான்) இரண்டு, பெண்களின் இந்த வகை சீண்டல்கள் ஆணின் ரகசிய பால்விருப்பையும் தூண்டுகின்றன. தன்னைச் சீண்டும் பெண்மேல் விருப்பு கொள்வது ஆண்களின் ரசனைகளிலொன்று. அது விலங்குகளிலும் வெளிப்படும் காமம்.

எவர் புறக்கணிக்கப்பட்டார்கள்? ஆண்களைப்போலவே அதே நிமிர்வுடன், அதே விரிவுடன், பலசமயம் அதைவிட தீவிரத்துடன் உலகை, வரலாற்றை, ஆன்மிகத்தை ஆராய்ந்த பெண் எழுத்தாளர்கள். அவர்களே உண்மையான பேரிலக்கியவாதிகள். ’பேரிலக்கியமெல்லாம் ஆண்கள் எழுதிக்கொள்கிறோம். நீ போய் பெண்ணிலக்கியம் படை’ என்று ஐரோப்பிய விமர்சன மரபு பெண் எழுத்தாளர்களிடம் சொல்லியது. இன்றும் பெண் எழுத்தாளர்களில் பலர் செய்வது அதைத்தான். ‘நீ ஒன்று பணிவாக செல்லமாக இரு. அல்லது சீண்டு, துள்ளிக்குதி. ஆழ்ந்த படைப்புகளெல்லாம் நீ எழுதமுடியாது. அதை முயற்சி செய்யாதே’ இதைத்தான் இந்த ஐரோப்பிய விமர்சகர்கள் பெண்களிடம் சொல்கிறார்களா?

சைதன்யா ஃப்ளாபர்ட், தஸ்தயேவ்ஸ்கி முதலிய நவீன இலக்கிய முன்னோடிகளை முழுமையாகவே ‘நிலவறை மனிதர்கள்’ என்கிறாளா? அவர்களால் தங்கள் அன்னையென நிலைகொண்ட பெரும் பெண்படைப்பாளிகளை புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அவர்களிடம் அடைக்கலம்புகாமலும் இருக்க முடியவில்லை.

எனக்கு எப்போதுமே இந்த ‘நோயுற்ற’ எழுத்தாளர்கள் மேல் ஒவ்வாமை உண்டு. நான் ஃப்ளாபர்ட் முதல் காஃப்கா வரையிலானவர்களை பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் நான் அவற்றை வாசிக்கையில் ஒரு நிலவறை மனிதன். இருளில் இருந்து ஒளிக்காகத் துழாவியவன். ஒளியை அளித்தவர்களே எனக்கு முக்கியமானவர்கள். எவருடைய நோய்விவரணை அறிக்கையையும் படிக்க எனக்கு மனமில்லை. எனக்கு ஆஷாபூர்ணாதேவிதான் அணுக்கமானவர்.

சைதன்யாவின் கட்டுரை வழியாக செல்லும்போது இவ்வெண்ணங்களே என்னை ஆட்கொள்கின்றன. இத்தனை ‘ஒதுக்குபுறமான’ ஒருமொழியில் இந்த பெரும்படைப்பாளிகள் மீண்டெழுவதை ஐரோப்பாவில் எவரேனும் என்றேனும் காண்பார்களா? அவ்வப்போது எனக்கும் சைதன்யா ஓர் ஆணாதிக்க முத்திரை அளிப்பதுண்டு. ஆனால் இக்கட்டுரையை ஒட்டி யோசிக்கையில் நான் கொஞ்சம் தப்பிவிட்டேன் என்றே தோன்றுகிறது. ஒரு பக்கம் விசாலாட்சியம்மாவும் மறுபக்கம் சைதன்யாவுமாக என்னை முழு ஆணாதிக்கவாதியாக ஆகவிடாமல் காத்துவிட்டிருக்கிறார்கள்

முந்தைய கட்டுரைஇந்து பாக சாஸ்திரம்
அடுத்த கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் படிக விழாவில் கலந்துகொள்கிறேன்