அன்பு ஜெ,
நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா எழுதியுள்ளனர். ஒளவையாரின் பாடல்கள் பற்றிய ரசனைக்கட்டுரைத் தொடரை இசை எழுதியுள்ளார். பிறமொழி பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி பார்கவி, பா.கண்மணி எழுதியுள்ளனர். ஆஷாபூர்ணாதேவியின் ஒரு சிறுகதை சுசித்ரா மொழிபெயர்ப்பில் அவரின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. புதிய முயற்சியாக எழுத்து இதழில் வெளிவந்த வெங்கட்சாமிநாதனின் விமர்சனக் கட்டுரை சுவாரசியமான முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.
ஒரு கட்டுரை இன்னொரு கட்டுரையோடு முயங்கும் ஒன்றைக் கண்டடையும்போது கிடைக்கும் பரவசமும், இங்கிருந்து சரடை முன் வந்த இதழிலுள்ள கட்டுரைகளோடு இணைக்கும்போது அடையும் திறப்புகளும் மகிழ்வையும் நிறைவையும் அளிக்கிறது. நண்பர்கள் இணைந்து செய்யும் தொகுத்தல் பணியிது. மீண்டும் நல்ல கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
பிப்ரவரி_2023 நீலி இதழ்
அன்புள்ள ரம்யா,
ஓர் இணைய இதழ் இன்று ஏராளமான படைப்புகளுடன் வருவது பெரிய விஷயம் அல்ல. ஆசிரியரின் உழைப்பு, ரசனை வெளிப்படும்படி தேர்வுசெய்யப்பட்ட படைப்புகளுடன் வருவது முக்கியமானது. அதன் எல்லா படைப்புகளும் ஒரு பொது இலக்கைக்கொண்டிருப்பது, அவ்விதழுக்கு ஒரு முதன்மைநோக்கம் இருப்பது அதைவிட முக்கியமானது.
வெளிவந்த சில இதழ்களிலேயே நீலி மின்னிதழ் தமிழின் முக்கியமான ஒரு பெண்ணிய இதழாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. தமிழில் வெளிவந்த பெண்ணிய இதழ்களில் ஓர் இடம் நீலி இதழுக்கு உண்டு.
இங்கே பெண்ணிய இலக்கியத்திற்கான இதழ்கள் வெளிவந்ததில்லை. பெண்ணியம் என்ற பெயரில் ஏற்கனவே பொதுவெளியில் பேசப்படும் சாதாரண அரசியலை திரும்பப் பேசுவதே இங்குள்ள வழக்கம். பெண்ணிய இலக்கியத்தின் முகங்கள் நீலி இதழில் தீவிரமாக வெளிப்படுவது நிறைவளிக்கிறது.
ஜெயமோகன்