அக்னிசாட்சி- கடிதம்

அக்னிசாட்சி வாங்க

வணக்கம். நாவல் அக்கினிசாட்சி வாசித்தேன்.. தமிழாக்கம் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.. இந்நூலை முன்பே வாசித்திருந்த ஒரு வாசகருடன் இந்நூலை பற்றி கூறியதும் எழுதியது அந்தர்ஜனம் தானே என்றார்.. மலையால மூலம் எழுதியவர் லலிதாம்பிகா அந்தர்ஜனம்.. நெடுநாள் நினைவில் நிற்கும் ஏதோ வொரு தனித்துவம் அந்தர்ஜனத்தில் உள்ளது… இது சாகித்ய விருது பெற்ற படைப்பு..

சமீப கட்டுரையொன்றில் தொடர்ந்து வாசித்தது  தங்கள்  துணைவியாரிடம் சிடுசிடுப்பைக் குறைத்துள்ளதாக கூறி இருந்தீர்கள்.. இந்நாவல்  வாசிப்பு என்னுள் சன்னமாகப் படிந்து வந்திருந்த கோப தாபங்களை கரைத்து ஒரு சமநிலை தந்ததை உணர்கிறேன்..

மானம்பள்ளி இல்லத்து தேவகியின் வாழ்க்கைத் துன்பம், எனது துன்பங்களை ஒற்றி எடுத்துக் கொண்டது.. நூலாசிரியர் உண்ணியண்ணன் பாத்திரம் முழு கற்பனை என்கிறார்.. அப்படி கற்பனையாக மட்டுமே உருவாக்க முடியாது என்றாலும் உண்ணியண்ணன் மனதில் தங்குகிறார். பொன்னியின் செல்வன்  நந்தினி (கற்பனைப் பாத்திரம்)  போல.

அன்றைய பெண்களின் கடின நிலைகளை இரு பெண்களின் பெயர்களே  சொல்லி விடுகின்றன.. பைத்தியக்கார சின்னம்மா.. தண்ணீர் பிசாசுப் பாட்டி.. இவைகள் காரணப் பெயர்களே.. முதல் பெயருக்கு காமமும், இரண்டாவது பெயருக்கு தீட்டும் காரணங்களாகின்றன…

அப்பன் நம்பூதிரி இறந்து கிடக்க வேற்று சாதி மனைவி நேத்தியாரம்மாவும், மகள் தங்கமும் உடனே இல்லம் விட்டு நீங்க வேண்டும் எனும் இடம்,  பழக்கங்கள் எத்தகைய நெருக்கடியை ஏற்படுத்துகின்றன என்பதை சொல்கிறது..

மற்றொரு இடம் கணவன் மனைவியிடம் தனித்து இருக்க நல்ல நேரம் பார்த்தே செல்வது.. பெண்களின் சிரமங்கள் பேசப்பட்டாலும் ஆண்களும் சிரமமே அடைகின்றனர்.. சம்பிரதாயங்கள் இருபாலர் கழுத்திலும் தொங்கிய வண்ணம் நெறிக்கிறது…

காலமும்.. விதியெனவும் கூறலாம். இவைகள் தான் மனித வாழ்வை எண்திசை நோக்கி சிதறடிக்கின்றன.. நீர் வழி படூஉம் புணைபோல் ஆருயிர்…
நூல் முடிவில் நூலாசிரியர் கட்டுரை ஒன்று பின்னினைக்கப்பட்டுள்ளது.. அது படைப்பைக் கூடுதலாகப் புரிந்து கொள்ள உதவுகிறது…

நாவலில் கங்கையும், இமயமும் முக்கிய இடம் பெறுகின்றன. இயற்கையின் புருவத்தை உயர செய்யும் படைப்புகள் அல்லவா இவைகள்.. அதனால் நாவலின் உயரம் இன்னும் கூடுகிறது.. நன்றி..

வேதாரண்யம் முத்தரசு

முந்தைய கட்டுரைஒலிநூல்கள்
அடுத்த கட்டுரைமண்ணின் மைந்தர்கள்- கடிதம்