வணக்கம், தாங்கள் நலம் தானே?
இன்று தங்களது ‘வைணவங்கள்’ உரை கேட்டேன். வெண்முரசு வாசிக்கும் சமயம் இளைய யாதவரை சுற்றி சில கேள்விகள் எழுந்ததுண்டு. விவேகியும், ஞானியும், பேரரசரும், மகத்தான ஆற்றல்கள் பொருந்தியவருமானவர் ஏன் இவ்விடத்தில், இவ்வடிவத்தில் மட்டும் தோன்றியிருக்கிறார். உலகனைத்தையும் காப்பவன் தானே அவன். மக்கட்செறிவு மிக்க உலகம் மிக விரிந்தது. அதில் எத்தனையோ இனங்களும், அவற்றில் சிக்கல்களும் இருக்கின்றன. பேரழிவின் விளிம்பில் நிற்கும் இனங்களும் உண்டு. திருமால் அங்கெல்லாம் தோன்றியிருக்கலாமே. ஆழியும், வெண்சங்கும், சக்கரமும் எதற்காக ஒரு இந்துவிற்கு மட்டும் பொருள் படவேண்டும் என எண்ணற்ற கேள்விகள். இவையானைத்திற்கும் விடை தங்கள் உரையில் கிடைத்தது.
மேலும் தங்களது இக்கட்டுரை ‘முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3’ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதுநாள் வரை அதை நான் வெறும் அறிவு என்ற கோணத்தில் மட்டும் வைத்து பார்த்தேன். இதன் சாரம் தங்கள் உரையில் பலவாறாக வெளிப்பட்டது. அதை நான் மிகமுக்கியமாக கருதுகிறேன்.
ஆசிரியருக்கு நன்றி,
சூர்ய பிரகாஷ்
அன்புள்ள ஜெ
வைணவங்கள் உரை கேட்டேன். இன்றைய நவீன மனதுக்கு மரபார்ந்த மதவிளக்கங்கள் நிறைவளிப்பதில்லை. அவை ஒருவகை புராணங்களாக மட்டுமே தெரிகின்றன. கடவுள், மதம், ஆன்மிகம் பற்றிய புதிய விளக்கங்கள் தேவையாகின்றன. அவை விளக்கங்கள் அல்ல, உண்மையான கண்டடைதல்கள். வைணவங்கள் உரை அவ்வகையில் மிக அற்புதமான ஒன்று. ஆனால் ஒலிப்பதிவு சுமார். எவராவது பின்னணி ஓசைகளை நீக்கி போட்டால் நல்லது.
ஸ்ரீனிவாஸன் எதிராஜன்