அழைப்பை எதிர்நோக்கியா?
அய்யா, வணக்கம்.
அழைப்பை எதிர்நோக்கியா? என்ற தங்களின் பதிவைப் படித்தேன்.
யாரும் தூக்கிப் பிடித்து நீங்கள் முன்னேறியவர் இல்லை. விருது ஒளிவட்டத்தால் புகழ்பெற்றவரும் இல்லை. முழுக்க முழுக்க உங்களின் உழைப்பும் ஆற்றலும் வாசிப்பும் எழுத்தும்தாம் உங்கள் உயர்வுக்குக் காரணங்கள்.
அந்தக் கடிதத்தை எழுதியவர் திமுக காரராக இருப்பார் என்று நான் கருதவில்லை. திராவிட முன்னேற்றம் கழகம் ஆளும் அரசின் சில செயல்களைக்கூட நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்ற எண்ணம் உடையவராகவே அவர் இருப்பார் என்று கருதுகிறேன்.
“இலையைப் போட்டுக்கொண்டு நீங்கள் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது ; என் அனுதாபங்கள்” என்று, உங்களைக் கீழ்மைப்படுத்தி அவர் எழுதி இருப்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தோரணம் கட்டி, பொன்இலை பரப்பி பத்மஸ்ரீ விருது அளிக்க முன்வந்ததையே மறுத்து ஒதுக்கியவர் நீங்கள் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
எந்தத் தரப்புக்கும் இன்னொரு எதிர்த்தரப்பு இருக்கும். பொதுவாக நீங்கள் திராவிடவியல் சிந்தனைக்கு எதிர்நிலையில் இருப்பவராகவே அறியப் படுகிறீர்கள். அதனால்கூட அரசு உங்களை அழைக்கத் தயங்கும். அரசு உங்களுக்குச் சிறப்புச் செய்ய நினைத்தால், நீங்கள் வர மறுப்பீர்கள் என்றும் கருதக்கூடும்.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த அரசு நல்ல செயல்களைச் செய்து வருவதை நீங்கள் நடுநிலையோடு பாராட்டி இருக்கிறீர்கள். உங்களின் பாராட்டும் இந்த அரசுக்கு நற்பெயரைத் தந்துள்ளது.
நீங்கள் பாராட்டியது உங்களுக்காக அல்ல. எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும். உலக அளவில் தமிழ் இலக்கியம் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். அதை யார் செய்தாலும் நீங்கள் மனம் திறந்து ஆதரிப்பீர்கள்.
நீங்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் அறவே இல்லை. ஆனாலும் உங்களுக்கு அரசு சிறப்புச் செய்ய வேண்டும் என்பது என் தனிவிருப்பம். அரசுகள் கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும், காலம் உங்களைக் கொண்டாடும்.
பணிவுடன்
கோ. மன்றவாணன்