குமரி – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க 

வணக்கம் மதிப்பிற்குரிய திரு ஜெ அவர்களே,

தங்களது குமரித்துறைவி என்ற மங்கல நாவலை நான் சென்னை புத்தக திருவிழாவில் வாங்கினேன். வாங்கிய பின் படிக்க நேரம் ஒதுக்காமல் சிறிது காலம் தாழ்த்தினேன். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் படிக்கலானேன். படித்தேன் என்பதை விட வாழ்ந்தேன் என்பதே சாலத்தகும்.

குறிப்பாக அதன் நாயகனாக வரும் செண்பகராமனை நான் திரு ஜெ வாகத்தான் பார்த்தேன். நானும் நாகர்கோயில் நகரை சார்ந்தவன் என்பதால் அதில் வரும் இடங்களில் மிக மிக எளிதாக என்னை தொடர்பு படுத்திக்கொள்ள இயன்றது.இதுவரை இப்படி ஒரு மங்கல நாவலை படித்தது இல்லை. மீனாட்சி சுந்தரேஷஸ்வரரை தரிசனம் தந்தமைக்கு கோடி நன்றி.அந்த திருமண வைபோகத்தில் கலந்து கொள்ள செய்தமைக்கு மீண்டும் வணக்கத்தை சொல்லி கொள்கிறேன். அது எப்படி உங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்பது புரியவில்லை. இன்றுவரை அந்த திருமண நிகழ்வு என் கண்முன் நிழலாடுகிறது. குறிப்பாக அட்டை படம் வெகு சிறப்பு. தங்களிடம் மேலும் பல விந்தை மிகு கதைகளை எதிர்பார்க்கின்றோம். ஒரு சில கேள்விகள் உங்கள் பார்வைக்கு

குமரித்துறைவி எழுதிய பின் உங்களின் கருத்து என்னவாக இருக்கின்றது?இதே போல் வேறு ஏதேனும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு மங்கல நாவல் இடம்பெற்றதுண்டா? யாரேனும் மாற்று கருத்துகளையோ அல்லது விமர்சங்களையோ கூறி இருக்கின்றனரா குமரித்துறைவிக்கு ?

நன்றி

க ராஜாமணி

***

அன்புள்ள ராஜாமணி,

குமரித்துறைவிபோன்ற அதே மனநிலை கொண்ட நாவல்கள் உலகமெங்கும் உண்டு. நம்பிக்கையும் ஒளியும்கொண்டவை. க.நா.சு சுருக்கமாக மொழியாக்கம் செய்த, செல்மா லாகர்லெவ் எழுதிய மதகுரு (Gösta Berling’s Saga) ஓர் உதாரணம். இதைப்போல வரலாற்றுத் தொன்மப்பின்னணியில் எழுதப்பட்ட படைப்பு என்றால் க.நா.சு மொழியாக்கம் செய்த பரபாஸ் (அன்புவழி என்றபெயரில் முதலில் வெளிவந்தது). பார்லாகர்க்விஸ்ட் எழுதியது.

எழுதுவது ஓர் உச்சநிலை. எழுதிய பின் அந்த மலையில் இருந்து இறங்கிவிடுகிறோம். வாசகர்கள் ஏறிச்செல்வதை பார்த்துக்கொண்டு நான் கீழே நின்றிருக்கிறேன். கீழே நின்றுகொண்டு விமர்சனம் செய்பவர்களைக் கண்டால் புன்னகைதான்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

ஆங்கிலத்திலேயே 99 சதவீதம் வாசிக்கிறேன். அரசியல், பொருளியல் கட்டுரைகளை மிகுதியாக வாசிக்கிறேன். என் தொழிலே வாசிப்பைச் சார்ந்ததுதான். தமிழில் வாசிக்கவேண்டுமென்ற உத்வேகம் பல ஆண்டுகளாக இல்லை. அண்மையில் ஒரு நண்பர் குமரித்துறைவி நாவலை பரிசாகத் தந்தார். மூன்றுமாதம் என் மேஜையருகே கிடந்தது. நேற்றிரவு  ஏதோ ஒரு மனநிலையில் கொஞ்சம் படித்தேன். அப்படியே உள்ளே கொண்டுசென்றுவிட்டது. பரவசம், கண்ணீர். எல்லாமே எனக்கு நிகழும் என நானே நினைத்துப்பார்த்திராதவை. அப்படி என்ன அதில் பரவசமான, கண்ணீர்வரும் விஷயங்கள் உண்டு என்றால் ஒன்றுமில்லை. அதிலுள்ளது goodness தான். அந்த விஷயம் நம்பகமாகச் சொல்லப்பட்டு நமக்கு நேரடியாகக் கடத்தப்படுகிறது. வாழ்க்கையை அடிப்படையில் நிலநிறுத்தும் ஒரு விஷயம் அதிலுள்ளது. ஏன் தமிழில் வாசிக்கவேண்டும் என்றல் இதனால்தான் என்று மனைவியிடம் சொன்னேன். என் மொழியிலே இதை வாசிக்காமல் எனக்கு இந்த அனுபவம் கிடைக்காது. உலக இலக்க்கியங்களை வாசிக்கலாம். இதுதான் அசல் அனுபவம். நன்றி

ஜி. ஆர். ராகவன்

முந்தைய கட்டுரைஆற்றின் கதைகள்
அடுத்த கட்டுரைகண்மணி