யோகம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்

பதம் பணிதல் என்பதற்கான வரையறை நம் மரபில் இலக்கிய மரபில் சாதுக்கள் சன்னியாசிகளுக்கு ஆனது ஏனையோருக்கானது அல்ல என்ற கருத்து யோக முகாம்  மூலமாக நிறைவு நாளன்று அருகில் இருந்த அந்தியூர் மணி அண்ணன் மூலம் எனக்கு  பகிரப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிகச் சிறந்த ஆளுமைகளுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். யோக முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனியாக விதம் விதமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உடல் மனம் புத்தி ரீதியான மாற்றத்திற்கு வித்திட்ட உன்னத நிகழ்வு ஒரு கூட்டு முயற்சியே குழு செயல்பாடே, அதனால் தான் நாம் அனைவரும் அனைவருக்கும் நன்றி உள்ளவர்கள்  ஆகிறோம்.

கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் குறைந்த நேரத்தில் அதிக பாடத்திட்டம் மற்றும் நடைமுறை விளக்கம் என  மிகுந்த கண்டிப்புடன் வேறு சில யோக முகாம்களில் கலந்து கொண்ட என் போன்ற சிலருக்கு தொடர்ந்து முகாம் நிகழ்வுகள் ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்து கொண்டே இருந்தது என்பது உண்மைதான் இது ஒரு ஏமாற்றம் போல் அந்த நேரத்தில் இருந்தாலும் பரிசு என்னவோ சமமாக எளிதாக அனைவரும் யோக சாதகராய் ஆக வேண்டும் என்பதே இலக்காக கொடுக்கப்பட்டது. வனம் என்றாலே தானாகவே  தன் இயல்பாய் வளமாக தானே இருக்கிறது. நித்திய வனமும் எங்களது ஒவ்வொருவரின் உள்ளத்தையும் வளமாக்கியது என்பதில் எள்ளளவும் எவருக்கேனும் ஐயம் இருக்காது என்பது என் சிறு கருத்து.

அவரவர் தம் இயல்பில் பண்பில் பழக்க வழக்கத்தில் இருந்து கொண்டே உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த உயர்ந்த விழிப்பு நிலை சார்ந்த பயிற்சிகளை தொடர்ந்து நடைமுறையில் பழக்கப்படுத்திக் கொண்டே வருவதன் மூலமாக தானாகவே அவரவர்களுக்கு எது தொடர வேண்டும் எது விலக வேண்டும் என்ற குழப்பத்திற்குள் நாம் சிக்காமல் நம் முயற்சியால் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அதுவே (உடல் ,மனம்,அறிவு.)தன் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் என்ற உயரிய கருத்தை முத்தாப்பாய் நல்கிய யோகா ஆசான் சௌந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இத்தகையான குருகுல சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

கண்டிப்பும் கடுமையும் அவசியம்தான் அதுவே குருகுலத்தில் கரிசனமாக மாறி அனைவருக்கும் வழங்கப்பட்டது. குருவின் குருவான நித்திய சைதன்ய யதிக்கும் மற்றும் நம் அனைவரின் குரு பரம்பரையில் உள்ள அனைத்து குருமார்களுக்கும் நாம் தினசரி முயன்று செயலாற்றும் பயிற்சிகளையே குரு காணிக்கை ஆக செலுத்தி மகிழ்வோம். உளத்தில் பெற்ற வளம் காப்போம். வனம் காப்போம். நன்றி.

அன்புடன்

ஆறுமுகம்

***

அன்புள்ள ஆறுமுகம்,

மகிழ்ச்சியளிக்காத எதும் நீண்டநாள் தொடராது. யோகமே ஆனாலும் செய்யுந்தோறும் நிறைவும் மகிழ்வும் அளிக்கவேண்டும். அது நோன்பு அல்ல. ஒரு பயணம். அதில் எல்லா காலடிகளும் இனிதாக அமையவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஆவணம்,கலை -கடிதம்
அடுத்த கட்டுரைஒரு வரம் – கடிதங்கள்