ஒரு வரம் – கடிதங்கள்

புனைவுக் களியாட்டுச் சிறுகதை தொகுதிகள் வாங்க

புனைவுக் களியாட்டு மின்னூல்கள் வாங்க

அன்புள்ள ஜெ ,

நலம் தானே.

நேற்று தை வெள்ளிக்கிழமை. கற்பகாம்பாள் சன்னதியில் நுழையும் போது நடைதிறந்து தீபாராதனை நடந்தது. அம்மா  தங்கக் காசுமாலை  அலங்காரத்தில், தீப ஒளியில் ஜொலிக்க  விழிநீர் மல்கி , மெய்ப் புளகம் அரும்பி சுயத்தை மறந்த நிலை . உடனே ‘வரம்’ கதையில் ஸ்ரீதேவிக்கு திருடன் பரிசாக அளித்த மேப்பலுர் பகவதி தரிசனம் நினைவுக்கு வந்தது. எப்பொழுதும் எங்களை இப்படி கண்ணீரில் மிதக்க வைக்கிறீர்களே. இது நியாயமா ?

இன்னுமொரு நூற்றாண்டு இரும் .

வாழ்த்துக்களுடன்

சுந்தரம் செல்லப்பா

***

அன்புள்ள ஜெ

சென்ற செப்டெம்பரில்  எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. எலும்பு முறிவால் மூன்றுமாதம் படுக்கை. வெளியுலகமே இல்லை. முதலில் நான் சென்றிறங்கியது சமூக வலைத்தளங்களில்தான். வாசிக்க வாசிக்க ஒரு எரிச்சல், நமைச்சல். ஆனால் விட்டுவிடவும் முடியாது. ஒருநாளில் நூறுதடவை உள்ளே செல்வது, வாசிப்பது, எரிச்சலடைவது. இரண்டுமூன்று தடவை தேவையில்லை என வெளியே வந்தாலும் மீண்டும் உள்ளே இழுத்தது. (அந்த செட்டப்பே அப்படித்தான். டிலிட் செய்து வெளியே வந்தால் மீண்டும் உள்ளே வர அழைத்துக்கொண்டே இருக்கும். மின்னஞ்சல்கள் வரும். ஒரு கிளிக் பண்ணினால் அப்படியே உள்ளே போகலாம். எதுவுமே கேட்காது. மீண்டும் இன்ஸ்டால் ஆகிவிடும். அப்படி ஏராளமானவர்கள் நாள்தோறும் வெலியே வந்து மீண்டும் உள்ளே போகிறார்கள் போல)

ஃபேஸ்புக் என்பதே ரிட்டயர்ட் ஆனவர்கள், ஐம்பது வயது கடந்தவர்கள் அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த அரசியலைப் பேசிக்கொண்டிருக்கும் இடம். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாதிமத அரசியல் வன்மங்கள்தான் வெளிப்படுகின்றன. அதைத்தாண்டி ஒரு வேடிக்கை வெளியாவதுகூட மிகமிகக்குறைவுதான். இந்த கஷ்டத்தை ஏன் வாங்கி வைத்துக்கொள்கிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஆனால் வெளிவருவது கஷ்டம். அப்போதுதான் உங்களுடைய வரம் என்ற கதை வாசித்தேன். அது எனக்களித்த ஒரு பெரும்பரவசமும் நிறைவும் அற்புதமானது. அந்த நாளே ஒளியாக ஆகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த நாளை கழித்தேன்.

அதன்பின் உங்கள் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். புனைவுக்களியாட்டுச் சிறுகதை தொகுதிகளை வாங்கி வாசித்தேன். எல்லாவற்றையும் வாசித்தேன். இன்னும்கொஞ்சம் கதைகள் மிச்சமுள்ளன என நினைக்கிறேன். அந்த நூல்கள் எனக்கு அளித்த நிறைவு என்னை மீட்சி அடையவைத்தது. சலிப்பு கிடையாது. சோர்வு கிடையாது. வாழ்க்கையே இனிமையாக ஆகிவிட்டது. செயற்கையான இனிமை அல்ல. ஒரு அற்புதமான மனநிலை. வாழ்வது இனிது என்று அக்கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தன. புனைவுக்களியாட்டு கதையின் சிறந்த மெடபரே வரம் கதைதான். கதவைத்திறந்து தெய்வத்தை காட்டிவிட்டீர்கள். நன்றி ஜெ

விருத்தகிரீஸ்வரன் எம்.ஆர்

முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைசூறாவளி