ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தங்கள் எழுதிய ‘ஆலயம் எவருடையது?’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். என் மனதில் எழுந்த ஆலயம் சம்பந்தமான பல்வேறு கேள்விகளுக்கு தாங்கள் அளித்த விடை பொருத்தமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் நான் ஆலயத்தைப் பற்றி புரிந்து வைத்த ஒரு சில கூறுகளுக்கும் வலு சேர்த்தது இப்புத்தகம்.
இதைப் படித்து முடித்த பிறகு என் மனதில் இரண்டு ஐயங்கள் தோன்றின. ஒன்று தற்போதைய தமிழக அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தாங்கள் குறிப்பிடும்படி இருக்கிறதா?
இரண்டாவது, சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் (தாங்கள் பார்வையிட்டவையில்), இந்த ஆலயம் தான் ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்ட ஆலயம் என்று உங்களுக்கு தோன்றியது உண்டா?
ரஞ்சித் சின்னுசாமி
***
அன்புள்ள ரஞ்சித்
ஆலயம் எவருடையது என்னும் நூல் ஆலயங்கள் பற்றி இங்கே என்னிடம் கேட்கப்பட்டு, நான் சொன்ன விடைகளின் தொகுதி. இத்தகைய நூல்களுக்கு நூல் அமைப்பு ஒருமையுடன் இருக்காதென்றாலும் ஒருவகையான சமகாலத்தன்மை இருந்துகொண்டிருக்கும்.
ஆகமமுறையில் முழுமையாக நீடிக்கும் இந்துக் கோயில்கள் எவையுமே இன்றில்லை என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் அலுவலகக் துணைக்கட்டிடங்கள், குட்டி கான்கிரீட் கோயில்கள், பிராகராங்கள், கோபுரங்களுக்கு முன் ‘போர்ட்டிகோ’க்கள் போன்ற பல அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆலயங்களின் ஒட்டுமொத்த சிற்ப அமைப்புகள் பலவகை கம்பிக்கட்டுமானங்களால் சிதறடிக்கப்பட்டுள்ளன.
இந்துக்களுக்கு ஓர் அரிய பழக்கம் உள்ளது. நானறிந்தவரை தனி இல்லங்களுக்கு வாஸ்து பார்ப்பது மரபில் வழக்கமில்லை. பார்க்கவும் முடியாது. பெரும்பாலும் எல்லா கோயில் நகரங்களிலும் ஆலயத்தைச் சுற்றி அமைந்த தெருக்களில் வீடுகள் எல்லா திசைகளை நோக்கியும் அமைந்துள்ளன. கிழக்குநோக்கி வீடு கட்டவேண்டும், வடக்கு நோக்கி வாசல் இருக்கக்கூடாது என்ற விதிகளெல்லாம் செல்லுபடியாவதில்லை. பழைய இல்லங்கள் வாஸ்துபடி அமைந்தவை அல்ல.
ஆனால் மரபான நோக்கில் நகரங்கள் வாஸ்துபடி அமையவேண்டும். கோட்டைகள், அரண்மனைகளுக்கு வாஸ்து தேவை. முக்கியமாக ஆலயம் ஒரு கட்டிடம் அல்ல. அது வாஸ்துசாஸ்திரத்தின்படி க்ஷேத்ரபுருஷன், அதாவது ஆலயமானுடன். ஒரு மானுட உடல் போல தன்னியல்பான முழுமை கொண்டது அது. அதில் ஒரு புதுக்கட்டிடத்தைச் சேர்ப்பதென்பது முதுகு சொறிய வசதி என்று நம் முதுகில் ஒரு சின்னக்கையை அறுவைசிகிழ்ச்சை செய்து பொருத்துவதுபோல.
தமிழ்மக்களுக்கு இன்று நகரம் எந்த முறையுமில்லாமல் கண்டபடி அமைவதில் கவலை இல்லை. எல்லா நகரங்களும் கட்டிடங்களெனும் குப்பைகள் குவிந்த இடமாகவே உள்ளன. எந்த ஒழுங்குமில்லை. ஆலயங்களை அவற்றின் அத்தனை அமைப்புகளையும் சிதறடித்து மாற்றிக்கட்டுவதை நம்மவர் வரவேற்கிறார்கள்.
இன்று தமிழகத்தில் பழைய வாஸ்து முறைப்படி ஆலயங்கள் எதுவும் கட்டப்படுவதில்லை. நான் எவற்றையும் பார்த்ததில்லை. ஓரளவுக்கு ஆலயங்களுக்குரிய ‘டிசைன்’ கான்கிரீட்டில் சில இடங்களில் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த முறையான தத்துவ அடிப்படையும், சிற்ப நெறியும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. அதற்கான அறிஞர்கள், சிற்பிகள், உபாசகர்கள் இன்றில்லை.
ஓர் ஆலயம் வாஸ்துமுறைப்படி புதியதாக அமையவேண்டுமென்றால் அதற்கு ஐந்து படிநிலைகள் தேவை. தரிசனம், தத்துவம், அழகியல், சிற்பம், வழிபாடு ஆகிய நிலைகள் என சொல்லலாம். (கலைச்சொல் தவிர்த்து தமிழில் சொல்கிறேன்)
ஆலயம் என்பது முதலில் ஒரு தரிசனமாக நிகழ்கிறது என்பார்கள். தரிசனம் என்பதை நேரடியாக ‘பார்ப்பது’ என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். ஓர் இறையுணர்தல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஞானிகள், யோகிகள், உபாசகர்களே பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட இயல்பில், ஓர் இறையிருப்பை உணர்கிறார்கள்.அங்கே தன்போக்கில் ஒரு தெய்வத்தை நிறுவுகிறார்கள்.
பலசமயம் வேடர், இடையர் போன்ற எளியமக்களுக்கும் அந்த இறையறிதல் நிகழ்ந்து ஆலயங்கள் உருவாகியுள்ளன. பல ஆலயங்கள் மிக எளியவடிவில் ஒரு மரத்தடியில் தூக்கி வைக்கப்பட்ட வெறும் கற்களாகவே எழுந்துள்ளன. பின்னர் அவை வளர்ந்து பேராலயங்கள்கூட ஆகியுள்ளன. ஓர் ஆலயம் ‘எப்படியோ’ உருவாகி வந்துவிடுகிறது என்பதே பெரும்பாலும் நிகழ்கிறது.
அவ்வண்ணம் நிகழ்ந்த ஓர் ஆலயமே பின்னர் தத்துவார்த்தமாக முறைப்படுத்தப்பட்டு ஆலயவடிவை அடைகிறது. அந்த இறையெழுகை நிகழாவிட்டாலும்கூட தத்துவார்த்தமாக உருவகம் செய்து ஆலயத்தை உருவாக்கலாம். ஆலயம் என நாம் எண்ணும் அமைப்பின் வெளிப்படையான முதல் தொடக்கம் தத்துவமே. அதில் தாந்த்ரீக மரபின் செல்வாக்கு எப்போதுமுண்டு. கேரளத்தில் அதைச்செய்பவர் தந்த்ரி என்றே அழைக்கப்படுகிறார்.
அந்த ஆலயத்தின் தத்துவம் என்ன என்பதை தத்துவஞானியே வரையறை செய்கிறார். அந்த தெய்வம் சுத்தசத்வ குணம் கொண்டதா (உதாரணம் விஷ்ணு) ரஜோகுணம் கொண்டதா (உதாரணம் முருகன், ராமன்) தமோகுணம் கொண்டதா (உதாரணம் காளி) என அவர் வகுக்க வேண்டும். ஒரே தெய்வத்துக்கே இம்மூன்று நிலைகளுமுண்டு. விஷ்ணுவே பள்ளிகொண்டபெருமாளாக சத்வரூபமாகவும், வீரராகவப்பெருமாளாக ரஜோ குணத்திலும், அகோர நரசிம்மராக தமோகுணத்திலும் வெளிப்படலாம். எல்லாமே இறைவடிவே.
ஒவ்வொரு தெய்வத்திக்கும் அதற்கான நிறுவுகை முறைமைகள் உண்டு. அவை இன்று நூல்களாகவே எழுதப்பட்டுமுள்ளன.சம்ஸ்கிருத நூல்கள் பல மலையாளத்திலும் கிடைக்கின்றன. அங்கு எழுவது எந்த தெய்வமோ அதற்கேற்ப அந்த ஆலயத்தின் இயல்புகள் அனைத்தும் உருவாகின்றன. சிற்பமுறை, வழிபாட்டு முறை எல்லாமே அதனடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். உதாரணமாக ஒரு சத்வ குணமுள்ள தெய்வமிருக்கும் ஆலயத்தில் தமோ குணமுள்ள தெய்வம் இருக்கலாகாது, இருந்தால் அதற்கான தனி அமைப்புகளும் வழிபாடுகளும் தேவை.
அதன்பின் அந்த தலத்திற்கான தலபுராணம் உருவாக்கப்படவேண்டும். அதை கவிஞர்கள் செய்யவேண்டும். அங்குள்ள தொல்கதைகளின் அடிப்படையில் அதை உருவாக்கவேண்டும். அந்த தலத்தின் வரலாறு அங்குள்ள மலை, ஆறு மற்றும் இயற்கைவெளிப்பாடுகள் ஆகியவற்றுடன் இணைந்ததாகவே இருக்கும். அங்குள்ள தொல்குடிமக்களின் வரலாறும் அதனுடன் இணைந்திருக்கும். தலபுராணப்படித்தான் ஆலயமரம், துணைத்தெய்வங்கள் ஆகியவை உருவாகின்றன. அவையே அந்த ஆலயத்தில் சிற்பங்களாக அமையவேண்டும்.
மூன்றாவதாகவே சிற்பி வருகிறார். தத்துவவாதியும் கவிஞனும் தியானம் வழியாகவும் கற்பனை வழியாகவும் உருவாக்கி நுண்வடிவில் நிறுவிவிட்ட ஆலயத்தை அவர் கல், மண் , மரம் ஆகியவற்றால் உருவாக்கவேண்டும். அந்த ஆலயத்தின் வடிவம், துணைச்சன்னிதிகள், சிற்பங்கள் எல்லாமே அந்த நுண்வடிவை ஒட்டியே உருவாகவேண்டும்.
அதன்பின் அந்த ஆலயம் உபாசனை மூலம் தெய்வநிலையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். வேள்வி என்பது உபாசனையின் ஒரு பகுதி. தொடக்கம் என்று சொல்லலாம். பிற பூசனைகள் எல்லாமே உபாசனையில் வருவன. உபாசனை என்பது ஆலயத்தின் பூசகர்களாலும், அங்குள்ள துறவிகளாலும், பக்தர்களாலும் செய்யப்படுவது. தத்துவம் உருவாக்கிய நெறிகளின்படி உபாசனை அமையவேண்டும். அதன் வழியாகவே கட்டிடம் என்பது ஆலயமாக ஆகிறது. இதுவே முறையான ஆலய நிறுவுதல்.
இவ்வண்ணம் இன்று ஆலயங்கள் நிறுவப்படுகின்றனவா என நீங்களே பார்க்கலாம். நானறிந்து அவ்வாறு எந்த புதிய ஆலயமும் உருவாக்கப்பட்டதில்லை. அவ்வாறு நிறுவியே ஆகவேண்டும் என்பதுமில்லை. எவ்வகையில் வழிபடப்பட்டாலும் அங்கே பக்தி நிகழுமென்றால் அது ஆலயமே ஆகும். பெரும்பாலான நாட்டார் ஆலயங்கள் ஆகமமுறைப்படி அமையாதவைதான். அங்கே இறைநிகழ்வு இல்லை என நம்மால் சொல்லமுடியுமா என்ன?
சிற்பமுறையிலேயே பல புதிய வினாக்கள் உள்ளன. உதாரணமாக மரபான ஆலயங்கள் செங்கல் (இஷ்டிகை) கல் (ஸிலா) மரம் (தாரு) ஆகியவற்றில் அமையலாம். ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்க சிற்ப இலக்கணம் வேறுபடும். கான்கிரீட்டில் கட்டப்படும் ஆலயத்தை கல் என கொள்வதா செங்கல் எனக் கொள்வதா? அதை செங்கல் என்றே கொள்ளவேண்டுமென எனக்குப் படுகிறது. ஆனால் பெரும்பாலும் கான்கிரீட் ஆலயங்கள் கல் ஆலயங்களின் வடிவை நகல்செய்தே கட்டப்பட்டுள்ளன. இப்போது கல், மரம் இரண்டிலும் எவரும் ஆலயம் அமைப்பதில்லை.
இன்று நம்மால் ஆகம முறைப்படி ஓர் ஆலயத்தை அமைப்பது மிகக்கடினம். சிற்பவியல் இன்றுமுள்ளது. ஆனால் தாந்த்ரீகமுறை மிகமிக பலவீனமாகி விட்டிருக்கிறது. அதில் நான் காணும் குரல்கள் 90 சதவீதம் போலியானவை, இணையம் வழியாக தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் பலர் பணம் ஏமாற்றும் அறிவிலிகள். ஆலயம் அமைப்பதில் இன்று கவிஞர்களை எவருமே உள்ளே கொண்டு செல்வதில்லை. உபாசனை உண்மையாக நிகழவேண்டும் என கவனம் எடுத்துக் கொள்வதில்லை. பூசகரை ஓர் ஊழியராக மட்டுமே பார்க்கின்றனர்.
நாம் புதிய ஆலயங்களை அமைக்கவேண்டுமா, பழைய ஆலயங்கள் ஏராளமாக உள்ளனவே என கேட்கலாம். ஒன்று, பழைய ஆலயங்களில் திரளும் பெருங்கூட்டம் தவிர்க்கப்படவேண்டும். அப்படி பெருங்கூட்டம் கூடுவதனால்தான் ஆலயங்களின் நெறிகளும் வாஸ்துமுறையும் சீரழிகின்றன. ஆகவே புதிய ஆலயங்கள்தேவை.
அத்துடன் இன்று காலம் மாறிவிட்டிருக்கிறது. இன்றைய வாழ்க்கைக்குரிய தெய்வ வெளிப்பாடுகள் உருவாகி வரவேண்டும். சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் போர்த்தன்மை கொண்ட தெய்வ உருவகங்கள் உருவாயின. பேரரசுகள் நிலைகொண்டபோது கல்யாணசுந்தரர் போன்ற மங்கலத் தெய்வங்கள் ஓங்கின. இன்று கல்வியை, சகவாழ்வை நமக்கு அருளும் தெய்வங்கள் எழவேண்டியிருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் கலைமகளுக்கு மட்டுமேயான ஆலயங்கள் இல்லை. நாராயணகுரு கேரளத்தில் வற்கலையில் சாரதாதேவி (கலைமகளின் ஒருவடிவம்) ஆலயத்தை நிறுவினார். அத்தகைய ஆலயங்கள் ஊருக்கு ஒன்று உருவாகவேண்டும்.
அதற்கு ஓர் ஆலயம் எப்படி அமையவேண்டும் என்னும் வழிமுறை நமக்கு தெரிந்திருந்து, அதற்கென நாம் மெய்யாகவே முயன்றால் நல்லது.
ஜெ