தத்துவத்தின் முன்னிலையில்

தத்துவ வகுப்புகள் எவருக்கு?

அன்புள்ள ஜெ

தத்துவ வகுப்புகள் எவருக்கு ? பதிவை வாசித்தேன்.  எனக்கு தத்துவ வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உண்டு. என் உடல் நிலையாலும் குடும்ப சூழல்களாலும் இப்போதைக்கு வர முடியாது. ஆனால் தகுந்த வாய்ப்புக்காக எதிர்பார்த்தபடியே இருக்கிறேன். என் காய்கள் செல்லும் என்ற உணர்வு கிடைத்துவிட்டால் வந்து விடுவேன்.

இன்று எவரெல்லாம் தத்துவ கல்வியை அடைய முடியாது என ஒரு பட்டியலிட்டு இருக்கிறீர்கள். அதிலொன்று நோய்கள் கொண்டவர்கள். எனக்கு எந்தவித உள நோயும் இல்லை. ஆனால் உடலில் நோயுடனேயே வாழ விதிக்கப்பட்டிருக்கிறேன். இது தன் பங்குக்கு உளத்தில் பாதிப்பை செலுத்தவே செய்கிறது. அதை மீறியே என் கற்றல் நிகழ்கிறது. இந்த வாழ்க்கையில் நான் அடையும் முதன்மையான இன்பம் கல்வி மட்டுமே. பிற எதுவும் எனக்கு இல்லை. இந்த வரி எழுதி முடிக்கையில் கண்களில் நீர் வழிய கேட்கிறேன். நாளை ஒருநாள் தத்துவ கல்விக்கு வர. விருப்பம் தெரிவித்தால் என் நோயின் பொருட்டு கல்வி எனக்கு மறுக்கப்படுமா ? நீங்கள் உண்மையை சொல்லுங்கள். அது என்னை வதைக்கும் என்றாலும் பரவாயில்லை.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

தத்துவ வகுப்பில் கலந்துகொள்வதற்கான தகுதிகள் என்று சொன்னதன் உட்பொருளை எளிதில் உங்களால் புரிந்துகொள்ளமுடியும். ஒரே அடிப்படைதான். நீடித்த கூர்ந்த கவனத்தை அளிக்க முடியுமா? ஆம் எனில் தத்துவம் அவர்களுக்குரியது. இல்லையென்றால் அவர்களுக்குரியது அல்ல.

தத்துவம் பிற அறிவுத்துறைகள்போல தரவுகளாலானது அல்ல. அதன் அடிப்படை தர்க்கம். அந்த தர்க்கம் பலசரடுகளாக சென்று ஓரிடத்தில் ஒரு முடிச்சாகிறது. அந்த முடிச்சை நோக்கிச் செல்வதற்கான பயிற்சியை தத்துவ வகுப்புகள் அளிக்கின்றன. அந்த வகையான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான பயிற்சியை அந்த மாணவர் தானே கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான அறிவுத்திறன் வேண்டும். அந்த அறிவை பயன்படுத்துவதற்கான பொறுமை வேண்டும். தீவிரமான ஆர்வம் மட்டுமே அந்தப்பொறுமையை அளிக்கும்.

அந்த ஆர்வத்தை மட்டுப்படுத்தும் விசைகளில் முதன்மையானது நோய்தான். நோய் அதையன்றி வேறெதையுமே நினைக்கமுடியாத ஒருநிலையை உருவாக்குகிறது. ஏற்கனவே அழ்ந்த தத்துவப்பயிற்சியும் அதில் முயற்சியும் கொண்டவர் நோயை தத்துவப் பயிற்சியாலேயே வெல்லமுடியும். அதை அறிமுகம் செய்துகொள்ள நோயாளியால் முடியாது.

நாம் இன்று நோய்க்கு அளிக்கும் சிகிழ்ச்சைகள் பெரும்பாலும் மூளையை மந்தமாக்குபவை. நினைவுத்திறனை அழிப்பவை. தத்துவம் தொடர்ச்சியான நினைவாற்றல் தேவையான ஒன்று. இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டி எழுப்பப்படும் கட்டிடம், ஒவ்வொரு செங்கல்லையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கட்டிடக்கலையையும், பொறியியலையும் அதைக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் உடல்சார்ந்த இயலாமைகள் கொண்டவர் பிறவியிலேயே. அது நோய் அல்ல. அக்குறைபாட்டைக்கொண்டே வாழ பழகியும் இருப்பீர்கள். அக்குறைபாட்டை கழிவிரக்கம் தேடுதலாக, எதிர்மறைமனநிலையாக ஆக்கிக் கொள்ளாதவரை தத்துவம் உங்களுக்கு இயல்பாக அமையும். சொல்லப்போனால் தத்துவம் உங்கள் உடலைக் கடந்த ஆளுமையை உங்களுக்கு அளிக்கும். உங்களை ஒரு தத்துவ நிலையாக நீங்கள் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அது பெரிய விடுதலை.

ஜெ

முந்தைய கட்டுரைகி.சரஸ்வதி அம்மாள்
அடுத்த கட்டுரைஆவணம்,கலை -கடிதம்