இலக்கியவிமர்சனம் தேவையான ஒன்றா?

அன்புநிறை ஆசானுக்கு

தற்பொழுது சுனில் கிருஷ்ணன் 2023 கான வாசிப்பு சவாலில் வாசித்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு கேள்வி..

நாம் அனைவரும் வாசிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு படைப்பு ஒரு அனுபவத்தை கொடுக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதற்கு காரணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்தது என கூறி இருக்கிறீர்கள்.

அப்படி இருக்க ஏன் நாம் வாசிப்பை , அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர் பார்வை அல்லது நுணுக்கம் எனக்கு கிடைக்கும் என்றாலும் கூட அது என் அனுபவம் அல்லவே?

ஒரு படைப்பு என் வாழ்வின் ஒவ்வொரு கால தருணத்திலும் வெவ்வேறாக எனக்கு பொருள்படும் என்றால் நான் ஏன் மற்றவர் அனுபவத்தை எனதாக கொள்ள வேண்டும்? எனது வாழ்வனுபவம் தரும் ஒரு பார்வை மட்டும் கொண்டு நான் வாசித்து செல்லலாம் தானே?

மேலும் நான் ஒரு படைப்பை வாசிக்கும் முன் அதன் அழகியல், வடிவ மற்றும் அனுபவ குறிப்புகளை வாசிப்பது இல்லை. அப்படி குறிப்புகள் வாசித்து பின் நான் செய்யும் ஒரு வாசிப்பு ஒரு பழுதுபட்ட, முழுமை பெறாத வாசிப்பாகவே கருதுகிறேன்.

முன்பே முத்துகள் இருக்கும் இடம் தெரிந்து முத்து குளிப்பது போன்ற ஒரு உணர்வே மிஞ்சுகிறது. எனது வாசிப்பு அதன் அனுபவம் என்னுடையது… அது அதை படைத்த கலைஞன் உடையது கூட கிடையாது. அதுவே என்னை வாசகன் ஆக்குகிறது என எண்ணுகிறேன்.

இவ்வெண்ணங்களில் பிழை உண்டு எனவும் எனக்கு தெரியும் ஏதோ ஒன்றை உணர , ஒப்ப மனம் தடுக்கிறது என்று. அது எது?

சில நேரம் நாம் வாசித்து பெறக்கூடியது ஒரு அனுபவம். ஒரு நுண் உணர்ச்சி, ஒரு sublimity… அதை வார்த்தைகளால் வடித்து கொள்வது வெறும் தருக்கம் சார்ந்த மூளையின் வேலை மட்டுமே என் தோன்றுகிறது. வாசிப்பு இதயத்திற்கானது அல்லவா?

அன்புடன்

அரவிந்தன்

இராஜை

***

அன்புள்ள அரவிந்தன்,

இந்த வினாவுக்கான விடையை முன்னரும் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.

ஒரு வாசகர் இலக்கிய விமர்சனம், இலக்கியவிவாதம் ஆகியவற்றை ஒரு சொல்கூட வாசிக்காமலிருந்தால்கூட அவர் வாசிப்பது சமூகக் கூட்டுவாசிப்பின் பகுதியாகவே. முற்றிலும் தனிப்பட்ட வாசிப்பு என ஒன்று இல்லை.

ஏன்? மொழி நமக்கு வந்துசேரும்போது மொழியின் சொற்கள், சொற்றொடர்கள் வழியாகவே இலக்கியக் கல்வியும் ஓரளவில் வந்து சேர்கிறது. அதன்பின் கல்விக்கூடங்கள் வழியாக இலக்கியப் பயிற்சி வருகிறது. அத்துடன் நம் பொது ஊடகச் சூழலும் இலக்கியப் பயிற்சியை அளிக்கிறது.

எண்ணிப்பாருங்கள், திருக்குறளையோ மு.வரதராசனாரையோ நாம் பள்ளியிலேயே கற்றுவிடுகிறோம். கண்ணதாசன் பாடல்கள் தொலைக்காட்சி வழியாகவே அறிமுகம் ஆகிவிடுகின்றன. அவை சார்ந்து ரசனை உருவாகிவிடுகிறது. அதிலிருந்து எவர் தப்ப முடியும்?

ஒரு பொதுவாசகன் வாசிக்கையில் அவன் ‘காலியான’ உள்ளத்துடன் வாசிப்பதில்லை. மேலே சொன்ன வாசிப்புப் பயிற்சியை அடைந்தவனாகவே வாசிக்கிறான். ஆகவேதான் ஒரு சினிமாப்பாட்டில் ஒரு வரி சிறப்பு என அவன் சொல்கிறான். ஒரு சினிமா வசனத்தை ரசிக்கிறான்.

இலக்கிய விமர்சனப் பயிற்சி, இலக்கிய விவாதப் பயிற்சி என்பது அந்த பொது இலக்கியப் பயிற்சியிலிருந்து மேலதிகமாக ஒரு பயிற்சியை அடைவதற்காகவே. அது இல்லையேல் நீங்கள் ‘தூய’ உள்ளத்துடன் வாசிக்க மாட்டீர்கள், மாறாக சூழலில் இருக்கும் பொதுவான வாசிப்பையே அளிப்பீர்கள்.

இலக்கிய விமர்சனப் பயிற்சியும் இலக்கிய விவாதப் பயிற்சியும் எதற்காக என்றால் அந்த பொதுவாசிப்புப் பயிற்சியிலுள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காகவும், அவற்றை கடந்து சென்று இன்னும் கூரிய வாசிப்பை அடைவதற்காகவும்தான். அவை உங்களை இன்னமும் தயார்ப்படுத்தவே செய்யும்.

எப்படி இருந்தாலும் நாம் இலக்கியப்படைப்புகளை நம் வாழ்க்கையைக்கொண்டே வாசிக்கிறோம். அவ்வாசிப்பில் நாம் சூழலில் இருந்து நமக்கு கிடைத்த இயல்பான பயிற்சியை பயன்படுத்துகிறோம். இலக்கிய விமர்சனப் பயிற்சி என்பது எதையெல்லாம் கவனிக்கவேண்டும், எப்படியெல்லாம் பொருள்கொள்ளவேண்டும் என நம்மை பயிற்றுவிக்கிறது.

இலக்கிய விமர்சனம் அளிக்கும் பயிற்சிகளில் முக்கியமானவை மூன்று. ஒன்று, அழகியல் அறிமுகம். இரண்டு, தத்துவ, வரலாற்றுப் பின்புல அறிமுகம். மூன்று, வாழ்வனுபவங்களுடன் படைப்பை பொருத்திக்கொள்வதற்கான வேறுவேறு வாய்ப்புகளை அளித்தல்.

உதாரணமாக, ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கிறீர்கள். அதில் ஏராளமான நுண்தகவல்கள் உள்ளன. பொதுப்பயிற்சி மட்டுமே கொண்ட வாசகன் அவற்றை எளிதாக கடந்துசென்று கதை என்ன என்று மட்டும் வாசிப்பான். இலக்கிய அழகியலில் அறிமுகம் இருந்தால் அவ்வாசகன் அப்படைப்பு இயல்புவாதப் படைப்பு என்றும், இயல்புவாதப் படைப்பில் கதையோ உணர்வுகளோ முக்கியமல்ல என்றும் அறிந்திருப்பான். புறவயமான உலகை நுண்ணிய தகவல்கள் வழியாகச் சித்தரிப்பதே இயல்புவாத அழகியலின் வழிமுறை. அதை அறிந்தால் அவன் நுண்செய்திகளை கூர்ந்து கவனத்தில்கொண்டு வாசிப்பான். அந்த இலக்கியப்படைப்பை முழுமையாக உள்வாங்குவான். உதாரணமாக, பூமணியின் பிறகு நாவலைச் சொல்லலாம்.

ஒரு கற்பனாவாத நாவலை வாசிக்கும் பொதுரசனை கொண்ட வாசகன் அதில் யதார்த்தமான கேள்விகளைப் போட்டுப்பார்ப்பான். ‘இப்படி வாழ்க்கையில் நடக்குமா?’ என்ற கேள்வியை மட்டும் போட்டுப்பார்த்தால் எந்த கற்பனாவாதப் படைப்பும் செயலற்றதாக ஆகிவிடும். கற்பனாவாதம் நிகழ்வது ஆசிரியரின் கற்பனையின் பரப்பில்தானே ஒழிய அன்றாட யதார்த்ததில் அல்ல என உணர்ந்த வாசகன் கற்பனாவாதம் மட்டுமே அளிக்கும் நுண்மையான கவித்துவத் தருணங்களை, அவற்றில் நிகழும் உன்னதமாதலை (sublimation) சென்றடைவான்.

சில படைப்புகளுக்கு மேலதிகமாக தத்துவ அறிதலோ வரலாற்றறிதலோ தேவையாகும். அவை இருந்தால் அந்தப்படைப்புகள் மேலும் தெளிவடையும். தத்துவப்புரிதல் விஷ்ணுபுரம் நாவலை விரிவான புரிதலுடன் வாசிக்கச் செய்யும். வரலாற்றுப் பின்புலம் அறியப்பட்டால் சிக்கவீரராஜேந்திரன் நாவல் இன்னும் தெளிவாகும். அந்த விரிவுக்கு இலக்கியவிமர்சனம் உதவும்.

நாம் இலக்கியப் படைப்புகளை நமது வாழ்வனுபவம் சார்ந்த ஒரு கோணத்தில் மட்டுமே பார்ப்போம். அதுவே அப்படைப்பு என நினைப்போம். இன்னொரு கோணத்தில் இன்னொருவர் பார்த்து எழுதியதை வாசித்தால் அக்கணமே நாம் அவராக நின்றும் அப்படைப்பைப் பார்போம். நம் பார்வை பலமடங்கு விரிவடையும். அதையும் இலக்கிய விமர்சனமே அளிக்கும்.

வாசிப்பு என்பது ஒருவர் தன்னிச்சையாக தனக்குத் தோன்றுவதை அடையும் ஒரு நிகழ்வு அல்ல. அவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு சமூகத்தின் உறுப்பினர். அந்த சமூகத்தின் வாசிப்பையே அவர் நிகழ்த்துகிறார். எண்ணிப்பாருங்கள் நாம் இன்று திருக்குறளை வாசிக்கும் போது அளிக்கும் அர்த்தத்தையும், அடையும் அனுபவத்தையும் நூறாண்டுகளுக்கு முன் அதை வாசித்தவர் எய்தியிருப்பாரா?

அந்த சமூகத்தின் சராசரியாக நின்று வாசிக்கிறோமா அல்லது அதன் மிகச்சிறந்த உறுப்பாக அமைந்து வாசிக்கிறோமா என்பதே வாசிப்பின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சிறந்த உறுப்பாக அமைந்து வாசிக்கவேண்டுமென்றால் அச்சமூகத்தின் சிந்தனையின் உச்சத்தில் நாமும் இருக்கவேண்டும். அதற்கு இலக்கியவிமர்சன அறிமுகம், இலக்கியவிவாதப் பயிற்சி தேவை.

அப்படி இல்லை என்றால் நாம் ஒரே வாசிப்பையே திரும்பத் திரும்ப அளிப்போம். நம் முடிவே அறுதியானது என நம்பி அமர்ந்திருப்போம். அப்படி பலரை நாம் காணலாம். இருபது வயதில் கல்கியோ மு.வரதராசனாரோ வாசித்தபின் அதிலேயே நின்றுவிட்டவர்கள் இப்படித்தான் நிகழ்கிறார்கள்.

இரண்டு வினாக்கள் எஞ்சியிருக்கின்றன. இன்னொருவரின் வாசிப்பு நமது சொந்த வாசிப்பை தடைப்படுத்துமா? ஓரளவு வரை தடைப்படுத்தும். இன்று முகநூலில் இலக்கியவாதிகள்மேல் முத்திரைகுத்தி திரித்து களமாடும் அரசியல்சழக்கர்கள் உருவாகி வரும் வாசகர்களை இலக்கியத்தில் இருந்து விலக்கும் செயலைச் செய்துவருகிறார்கள். ஒருசாரார் நிரந்தரமாகவே இலக்கியவாதிகள்மேல் அவநம்பிக்கைகொண்டு விலகிச்செல்லவும் வழிவகுக்கிறார்கள்.

முன்பு மதவாதிகள் செய்த அதே செயலை இன்று இவர்கள் செய்கிறார்கள். இலக்கியம் உருவாக்கும் நேரடியான உரையாடலை அரசியலாளர்கள அஞ்சுகிறார்கள். இலக்கிய ரசனைக்குள் வந்துவிட்ட எவருக்கும் கண்மூடித்தனமான அரசியல்விசுவாசம் உருவாகாது. (தன்னலத்துக்காக சிலர் அவ்வாறு நடிக்கலாம். அவர்களை அரசியலாளர் நம்பமாட்டார்கள்). ஆகவே இந்த திசைதிருப்புதல் நிகழ்கிறது.

இத்தகைய திசைதிருப்பல்களில் இருந்து தப்ப ஒரே வழி நம் வாசிப்பனுபவத்தை நாம் நம்புவது. இன்னொருவரின் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமலிருப்பது. ஏற்போ மறுப்போ. ஆனால் உண்மையில் நல்ல வாசகர் இயல்பாகவே அப்படித்தான் இருக்கிறார். கடுமையான நிராகரிப்பினால் எவரும் நல்ல படைப்பை தவறவிடுவதில்லை. செயற்கையான கொண்டாட்டங்களால் மோசமான படைப்பு ஏற்கப்படுவதுமில்லை.

இரண்டு, நம் சொந்த அனுபவங்கள் பிறருடைய அனுபவங்களால் சிதறுண்டுபோகுமா? அப்படி ஆவதில்லை. வாசிக்க ஆரம்பிக்கும்வரை சில முன்முடிவுகளை அவை உருவாக்கலாம். நல்ல ஆக்கங்கள் அதன்பின் வாசகனை ஈர்த்து தன்னுள் வைத்துக்கொள்கின்றன. அவனுடன் அந்தரங்கமாக உரையாடுகின்றன. அவனுடைய அனுபவங்களை கிளர்த்துகின்றன.

பேரிலக்கியங்கள் எனப்படுபவை பல தலைமுறைகளாக வாசிக்கப்பட்டவை. பல்வேறு வகையான வாசிப்புகளை அடைந்தவை. நம் மொழியில், சூழலில் அவற்றைப்பற்றிய மதிப்பீடுகளும் ரசனைகளும் உள்ளன. அவற்றை நாம் தவிர்க்கவே முடியாது. ஆனாலும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவை அவர்களுக்கான அனுபவங்களையே அளிக்கின்றன.

கடைசியாக, அலசல்விமர்சனம் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்யும் விமர்சனங்களை வாசகன் தவிர்ப்பதே நல்லது. இலக்கியப் படைப்பு வாசிப்புக்கும் ரசனைக்கும் உரியதே ஒழிய ஆய்வுப்பொருள் அல்ல. ஆய்வுப்பொருளாக இலக்கியப்படைப்பைக் காணும் போக்குகள் இலக்கியநிராகரிப்புத்தன்மையை தவிர்க்கமுடியாத உள்ளடக்கமாக கொண்டவை. அவை இலக்கியவாசகனுக்கு எவ்வகையிலும் உகந்தவை அல்ல.

இலக்கியக்கோட்பாட்டு ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள், சமூகவியல் ஆய்வுகள், அரசியல் ஆய்வுகள் எவையாயினும் அவை வாசகனுக்கு எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக அவை வாசகனின் தனியனுபவத்தைச் சிதைக்கின்றன. வாசகனின் நுண்ணுணர்வு மழுங்கும்படிச் செய்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகன் மொத்தமாகவே ஆளுமை மழுங்கி வீணாகிப்போவதையும் கண்டிருக்கிறேன்.

அத்தகைய ஆய்வுகளை ஒரே ஒரு சாரார்தான் வாசிக்கவேண்டும். இன்னொரு ஆய்வாளர். ஆய்விலிருந்து ஆய்வு உருவாகிறது. உதாரணமாக, ஒரு புளியமரத்தின் கதை நாவலை சமூகவியல்கோணத்தில் ஆய்வுசெய்யும் ஒரு கட்டுரை சமூகவியலுக்கு தேவையானது, இலக்கியத்தை வெறும் சமூகவியல் கச்சாப்பொருளாகக் குறுக்குவது. பாரதியார் கவிதைகளை மொழியியல்கோணத்தில் அணுகும் கட்டுரை மொழியியலுக்கு தேவையானதாக இருக்கலாம், பாரதியாரை அது சிறுமைப்படுத்தாமலிருக்க வாய்ப்பே இல்லை. இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகள் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள மட்டுமே உதவியானவை.

இதை உலகளவில் இலக்கியப்படைப்புகள் பற்றி நிகழ்த்தப்பட்ட புகழ்பெற்ற ஆய்வுகள் நூறையாவது வாசித்தபின்னரே சொல்கிறேன். இல்லை, தங்களுக்கு அவை உதவியானவை என நினைப்பவர்கள் வாசிக்கலாம். அவர்களிடம் எனக்குப் பேச ஒன்றுமே இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபூவண்ணன்
அடுத்த கட்டுரைசி.பி.சிற்றரசும் தமிழ்விக்கியும்