அறிவின் விளைவா உறுதிப்பாடு?
அன்புள்ள ஜெ,
உங்களுடைய அறிவின் விளைவா உறுதிப்பாடு என்கிற கட்டுரையை படித்தேன். அது தொடர்பாக இந்த கடிதம். சமீபத்தில் எனது அம்மாவின் இறப்பை எதிர் கொள்ள வேண்டி வந்ததால் உங்களுடைய இந்த கட்டுரை மேலும் தொடர்புள்ளதாக உள்ளது. மரணத்தை எல்லோரும் இறந்தவர்களுடைய உறவின் வழியாகவே வலியை அனுபவிக்கின்றனர். நாம் நமது இழப்பையும், வலியையும்
இறந்தவர்களின் நினைவாலே மறுபடியும் மறுபடியும் அனுபவிக்கின்றோம். நமது மரணமும், நம்மை சார்ந்தவர்களின் மரணமும் நான் என்கிற புள்ளியிலிருந்து ஆரம்பிக்கின்றது. கர்ம யோகமும், ஞான யோகமும், பக்தி யோகமும் இந்த நான் என்ற புள்ளியை அழிக்கவோ அல்லது மறக்கவோதானே? மறந்தது திரும்பவும் எழும், அதனால் நான் என்று ஒன்றை நாம் எதிர்கொள்ளவே வேண்டும். அது உள்ளவரை துக்கமும் மரணமும் அழிவில்லாதது.
எனக்கு ஒரு ஜென் வாக்கியம் ஞாபகத்துக்கு வருகிறது. கொடி அசைகிறதா அல்லது காற்று அசைகிறதா என்பதற்கு உன்னுடைய மனதே அசைகிறது என்கிற ஞானி உடைய பதிலே இதற்கும் விடையாக உள்ளது. மனது உள்ளவரை துக்கம் என்கிற புத்தனுடைய வரிகளே எனக்கு பாடமாக உள்ளது. ஓஷோ ஒரு சமயம் சொன்னது போல், சில ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் கடல் ஆழத்திலிருந்து முத்து எடுக்கிறார்கள் , சிலர் வானத்திலிருந்து நட்சத்திரம் பறிக்கிறார்கள். இரண்டுமே சரியான பாதை தான். உற்று நோக்குவதும், காரியத்தில் கரைவதும்.
ரமணருடைய மரணத்தைப் பற்றிய கேள்விக்கான பதிலும் இதேபோன்று இருந்ததாக நினைவு. “மரணம் யாருக்கு நிகழ்கிறது என்று கேள். அந்த நான் யார் என்று கண்டறி”.
அம்மாவுடைய இறப்பு எனக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்த போதும், என்னுடைய ஆன்மீக விசாரணையே மிக உதவிகரமாக இருக்கின்றது. அம்மாவுடைய இழப்பு, அவர்களுடைய நினைவின் வாயிலாகவே துக்கமாக மாறுகிறது. எனது மனது, அதன் ஓயாத நினைவுகளோடு இந்த இழப்பை துக்கமாக மாற்றுகிறது. மாற்ற முடியாத இயல்பை மாற்ற நினைக்கும் அல்லது இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற மயக்கமும் துக்கமாக நமக்கு தெரிகிறது. எந்த ஒரு மாற்றத்தையும் அதனுடைய இயல்பையும் எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல் ஏற்றுக் கொண்டால், நமது தேடலுக்கு , அதுவே தொடக்கப் புள்ளியாக அமையலாம்.
நன்றியுடன்,
ஹரிஹரன்