அன்புள்ள அண்ணா,
இது எனது முதல் கடிதம்,ஆகவே மரியாதைக்குரிய ஆசானுக்கு என் பணிவான பாதம் பணிந்த வணக்கங்கள்,
என்னுள் பொங்கி வரும் சிந்தனைகள் அனைத்தும் இப்பொழுது உங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சிந்தனை மட்டுமல்ல நீங்கள் வழிகாட்டிய பல ஆசான்களின் சிந்தனையும் என்னோடு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. நான் எனது கேள்விக்கு வருகிறேன்
நான் யோகம் பயின்று – முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக ஆனால் தொடர்ச்சியாக பயிற்சியில் இருக்கிறேன் கிட்டத்தட்ட 15 வருடங்கள்… இதில் உணவு முறை என்று கூறப்பட்ட ,அசைவம் ஒருத்தலும், உற்ச்சாக பானம்- டீ காபி ஒறுத்தலும் சொல்லப்பட்டது. அவர்கள் எதையும் நிறுத்த சொல்லவில்லை, நிறுத்திப் பாருங்கள் உங்களுக்குள் வரும் மாற்றத்தை நீங்களே கவனியுங்கள் என்று சொன்னார்கள்.உண்மையில் எனக்குள் அசைவமும் டீ, காப்பியும் இல்லை என்றால் பதட்டம் குறைவாகவும்,காமம் பற்றிய நினைவு குறைவாகவும் மற்றும் சமநிலை கூடி இருத்தல் முடிகிறது. ஆனால் என்னால் தீயையும் அசைவத்தையும் விட முடியாமல் தவிக்கிறேன்.
ஆனால் உங்களுடன் ஆன எனது ஏழு வருட தொடர்பில் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது தோன்றுவதெல்லாம் இத்தகைய மகத்தான உழைப்பு என்பது அசைவம் சாப்பிட்டுக்கொண்டு, டீ அருந்திக்கொண்டு முடிகிறது என்றால் எவ்வாறு முடிகிறது, ஏன் எங்களுக்கு முடியவில்லை?.இதற்கு விளக்கம் கேட்கலாமா, என்ன செய்வது என்று தெரியாமல் இந்த கேள்வியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், இப்பொழுது இந்த கேள்வியின் எடை உங்கள் அதிகரிக்கும் பெரும் உழைப்பை பார்த்து தாள முடியாமல் ஆகிவிட்டது எனவே கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன்.
இந்த கேள்வி எனக்கு மட்டும் இல்லை, என்னை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்- உங்களை வாசிப்பவர்களும் இதில் அடக்கம். இதற்கு உங்களிடம் இருந்து விரிவான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
சமீபத்தில் குரு நித்யசைதன்யா அவர்களைப் பற்றி ‘தத்துவத்தில் கனிதல்’ புத்தகம் வழியாக அறிய முடிந்தது. அந்தப் புத்தகத்தில் நடராஜகுருவும், குரு சைதன்யாவும் காமத்தை கையாள்வது எப்படி என்று அறிந்திருந்தார்கள் – அவர்கள் குறிப்பிட்ட மனோ தத்துவ ஆய்வாளர்களின்- குறிப்பாக Havelock Ellis அவர்களின் புத்தகம் தமிழில் கிடைக்குமா அல்லது வேறு யாராவது புத்தகங்களை தாங்கள் பரிந்துரை செய்ய முடியுமா? அல்லது அது குறித்து தாங்கள் ஏன் புத்தகங்கள் எழுத கூடாது?, ஏனென்றால் இன்றைய இளைஞர்களுக்கும் என்னைப் போன்று முதுமையை நெருங்குபவர்களுக்கும் இம்மனோ மைதுனம் ஆற்றலை இழக்க வைக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது,நேரம் எடுக்கிறது, இரண்டு கேள்விகளுக்கும் தயவு செய்து விளக்கம் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பின்குறிப்பு :எனது மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் உங்களது மேடைப்பேச்சு பயிற்சிக்கு பதிவு செய்துள்ளார்.அவருக்கு இலக்கிய பயிற்சி மிக குறைவாக இருந்தாலும் உங்கள் அண்மை அவருக்கு ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையில் அவர் கேட்டவுடன் பணம் கட்டி செல்ல சொல்லி இருக்கிறேன். தங்கள் ஆசீர்வாதமும் அண்மையும் அவருக்கு கிடைக்க இந்த வாய்ப்பினை நல்கியமைக்கு நன்றி.
அன்புடன்,
பாலசுப்பிரமணியன்.ந
அன்புள்ள பாலசுப்ரமணியன்,
உங்கள் கடிதம்போன்ற சில கடிதங்கள் வருவதுண்டு. அவற்றுக்கு யோகமரபு சார்ந்த விளக்கங்களை குரு சௌந்தர் போன்றவர்களே அளிக்க முடியும். நான் தீவிரமாகவோ, அதிகாரபூர்வமாகவோ எதுவும் சொல்லமுடியாது.
யோகப்பயிற்சி இன்று பரவியிருக்கிறது. அது நல்லதுதான். ஆனால் ஒருவரிலிருந்து ஒருவர் என பரவுகையில் அதற்கு அதிகாரபூர்வமான ஒரு தொடர்ச்சி இல்லாமலாகிறது. அவ்வகையில் தவறான பல நம்பிக்கைகள், சிந்தனைகள் அதில் நிலைகொள்கின்றன.
பெரும்பாலும் இந்த நம்பிக்கைகள் இருவகை. ஒன்று, இந்து மரபின் ஆசாரவாதம் சார்ந்தவை. இரண்டு, மேலைமரபில் இருந்து வரும் உதிரிவாழ்க்கை, மாற்றுவாழ்க்கை சார்ந்தவை. இரண்டுமே யோகத்துடன் தொடர்பற்றவை.
நாம் எப்போதுமே சிந்தனைகளை அந்தந்த மரபின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கவேண்டும். நாங்கள் தத்துவப்பயிற்சி அளிப்பதே அதை கற்பிப்பதற்காகத்தான். ஆசாரவாதம், பக்தி, யோகம், ஞானம் ஆகியவை வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று அவை உறவாடலாம், ஆனால் அவை ஒன்றைச் சொல்லவில்லை. அவற்றை கீதை தனித்தனியான வழிமுறையாகவே சொல்கிறது.
ஆசாரவாதம் என்பது பழைய வைதிக (பூர்வமீமாம்ச) மரபில் இருந்தும் சாதியாசாரங்களில் இருந்தும் உருவானது. கர்ம மார்க்கம் என அதைச் சொல்லலாம். அது வேள்விகள், பூஜைகள், வெவ்வேறு வகையான தற்கட்டுப்பாடுகள், தூய்மைபேணும் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டது. தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தன்மை அதன் இயல்பு. எல்லா பக்கமும் விரியும் உள்ளத்தை, உடலை மிகமிகக் குறுக்கி ஒரே பாதையில் ஓடச்செய்வது அதன் வழிமுறை. அதன் வழியாக அடையப்படும் ஒரு விடுதலையை அது உத்தேசிக்கிறது
பக்தி என்பது ஆசாரவாதத்தின் தற்குறுக்கல் கொண்டது அல்ல. அது தன்னிச்சையான உளப்பெருக்குக்கு இடம் கொடுப்பது. அர்ப்பணிப்பே அதன் அடிப்படை. இசையும், கலையும், இலக்கியமும் அதன் வழிமுறைகள். உணர்வுபூர்வமான ஈடுபாடும், அதை பேணிக்கொள்ளும் செயல்முறைகளுமே பக்தியின் செயல்முறைகள்.
ஆசாரவாதமும் பக்தியும் இங்கே ஒன்றென கலந்து தெரிகின்றன. பக்தியில் சில ஆசாரங்களை ஒருவர் கடைப்பிடிக்கலாம். ஆசாரவாதி பக்தி கொண்டிருக்கலாம். ஆனால் அவையிரண்டும் வேறுவேறு. ஆசாரவாதத்தின் கடுமையான நெறிமுறைகள் பக்தியில் இன்றியமையாதவை அல்ல. நம் தொல்நூல்கள் அனைத்துமே அதைத்தான் சொல்கின்றன.
கண்ணப்பநாயனார் கதையே பக்திக்கும் ஆசாரத்திற்கும் இடையேயான போட்டிதானே? பெருமானை காலால் மிதிப்பதை உச்சகட்ட பக்தியென அக்கதை முன்வைக்கிறது. அத்தகைய பலகதைகள் உள்ளன. அக்கதைகளில் பக்தியை ஒரு படி மேலானதாக முன்வைக்கின்றன பக்தி காலகட்டக் கதைகள். ஆசாரவாதி காணமுடியாத தெய்வம் முரட்டு பக்தியின் முன் எழுந்தருள்வதை அவை சொல்கின்றன.
பக்தியில் உள்ள கட்டற்ற உணர்வுப்பெருக்கு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலசமயம் ஆசாரவாதம் தடையாக ஆகக்கூடும். ஆசாரவாதம் அளிக்கும் இறுக்கமான மனநிலை, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பக்தியை குறுக்கி ஒருவகை பிடிவாதமாகவும், பிறரை விலக்கும் வெறுப்பாகவும் ஆவதைக் காணலாம். இந்து மரபின் ஆசாரவாதம் பலசமயம் மனிதாபிமானமற்றதன்மையாக உருமாறக்கூடியது.
யோகம் என்பது ஆசாரவாதம், பக்தி இரண்டுக்கும் மாறானது. யோகம் என்பது அகச்செயல்களை குவித்தல், அதன் வழியாக அக ஆழங்களுக்குச் செல்லுதல்.
ஆசாரவாதத்திற்கும் யோகத்திற்கும் என்ன வேறுபாடு? ஆசாரவாதம் தன்னை இறுக்கி, கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு குறுகியபாதையில் செல்லும் வழி. அதன் எல்லா நெறிகளும் புறவயமான வாழ்க்கை சார்ந்தவை. புறவயவாழ்க்கையை நெறிப்படுத்தினால் அகவயமான வாழ்க்கையும் நெறிப்படும் என நம்புகிறது அது. நெறிப்படுத்தப்பட்ட அக – புறவாழ்க்கையின் வழியாக விடுதலை சாத்தியம் என்கிறது.
யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை ‘கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.
ஆகவே யோகம் அகத்தை கண்காணிப்பதை, அறிந்துகொள்வதை பற்றி மட்டுமே பேசுகிறது. அகத்தை கண்காணிக்கையிலேயே அது தன்னளவில் கட்டுப்பட ஆரம்பிக்கிறது. அகத்தை அறிய அறிய நாம் அதை கடக்கிறோம். யோகம் அதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.
ஆசாரவாதத்தின் ‘தன்னை ஒறுக்கும்’ முறைகளை யோகம் சொல்வதில்லை. அகத்தை அகத்தால் ஒறுக்கமுடியாது என்றே அவை சொல்கின்றன. யோகத்தில் என்ன நிகழ்கிறதோ அதுவே நீங்கள். அதை அறிந்து, அதுதான் என ஏற்றுக்கொள்வதே செய்யவேண்டியது. யோக மரபில் குற்றவுணர்ச்சி, தாழ்வுணர்ச்சி, இழப்புணர்ச்சிகளுக்கு இடமே இல்லை. அவை யோகத்துக்கு நேர் எதிரானவை.
யோகத்தில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன அறிகிறீர்களோ அதுதான் நீங்கள். அதை ஏற்கவும் மேலும் அறியவுமே யோகம் பயிற்றுவிக்கிறது. அறிய அறிய உங்களை அறியாமலேயே நீங்கள் அறிந்தவற்றை கடந்துசெல்வீர்கள், அதுதான் யோகம் அளிக்கும் விடுதலை.
யோகப் பயிற்சியின் ஒரு செயல்முறையாக யம-நியமங்கள் சொல்லப்படுகின்றன. அக, புற ஒழுக்கங்கள் அவை. ஆனால் அவை ஆசாரவாதம் சொல்லும் இறுக்காமான நெறிமுறைகள் அல்ல. மீறக்கூடாத ஆணைகள் அல்ல. மீறினால் தண்டனையோ, சுயகண்டனமோ அடையவேண்டிய ஒழுக்கநெறிகளும் அல்ல.
யோக மரபில் காமம் ஒரு பாவமாக கருதப்படுவதில்லை. அது அஞ்சவோ அருவருக்கவோ தவிர்க்கவோ வேண்டிய ஒரு எதிர்ச்சக்தி அல்ல. அது மூலாதார சக்தி. முதன்மை உயிர்விசை. அதை கையாளவே யோகம் பயிற்றுவிக்கிறது. அகக்காமம், புறக்காமம் இரண்டுமே எந்தவகையிலும் யோகத்தில் எதிர்மறையாக பார்க்கப்படவில்லை.
நீங்கள் கற்றுக்கொண்ட மரபில் ஆசாரவாதத்தின் நெறிமுறைகளையும் உளநிலைகளையும் யோகத்தின் யம-நியமங்களுடன் கலந்துவிட்டார்கள். காமத்தை ஒறுக்கவேண்டிய ஒன்றாக கண்டு, அதற்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை அளித்துள்ளனர். அதுவே முதற்பிழை.
காமத்தை ’வெல்ல வேண்டும்’ அதற்கு ’உணவுக் கட்டுப்பாடுகள்’ தேவை என்பதெல்லாமே மரபான யோகமுறையில் நிபந்தனைகளாகச் சொல்லப்படுவன அல்ல. அவை ஆசாரவாதம் சார்ந்தவை. காமத்தில் திளைப்பதும், கட்டற்ற உணவும் எல்லா யோகமுறைகளிலும் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றவுணர்ச்சியை ஒருபோதும் யோகம் உருவாக்காது – உருவாக்கலாகாது.
(மேலும்)