கொல்வேல் அரசி, கடிதம்

கொல்வேல் அரசி

அன்புள்ள ஆசிரியருக்கு,

கீதையில் அர்ஜுனன்

சஞ்சலம் ஹி மன்: க்ருஷ்ண ப்ராமதி பலவத்த்ருடம்

தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ சுதுஸ்கரம்

என மனதை அலையும் தன்மையுடது, திகைக்கக் செய்வது, வலிவுடையது,திடமுடையது, அதை அடக்குவது காற்றை அடக்குவது போல இயலாத காரியமாக சொல்கின்றான்.

அதற்கு கண்ணன்  “குந்தியின் மைந்தா அதை அப்பியாசத்தாலும், வைராக்கியத்தாலும் அடக்கலாம்” என சொல்கின்றான்.

கொல்வேல் அரசியில் நீங்கள் சொன்ன ‘ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும்’  (அர்ஜுனன் கூற்று)  ‘நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை. இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன்’ (கண்ணன் காட்டிய வழி)

என்பது கீதை உரையாடலினை கண் முன் நிறுத்தியது. நாடிய லட்சியத்து அல்லது வழிபடு தெய்வத்திடத்து மனதை திருப்புவது அப்பியாசமாகும் என சித்பவானந்தரின் கீதை உரையில் வரும். எழுத்து என்னும் வழிபடு தெய்வம் கொல்வேல் தேவியாக உடனிருந்து அருளியது தெரிகின்றது.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தனக்கு இட்டுக் கொண்ட ஆணை போல  தனக்கு இட்டுக் கொண்ட கட்டளை இருக்கிறது.

படைப்பூக்கம் தெய்வம். அது வியாரிடத்து விநாயகனாக வந்தது. குமரகுருபரரிடத்தும், அருணகிரிநாதனிடத்தும்  முருகனாக வந்தது. காளிதாசனிடம் அது காளியாக நின்றது. சமகாலத்தில் ஆசானுக்கு கொல்வேல்தேவியாக தரிசனம் தருகின்றது.

அன்புடன்

நிர்மல்

முந்தைய கட்டுரைதவாங் சமவெளி பயணம்
அடுத்த கட்டுரைலட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா