ஏற்பும் நிறைவும்
அன்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் விஷ்ணும்புரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், ரப்பர், இன்றைய காந்தி, கன்யா குமரி, குமரித்துரைவி, வெள்ளை யானை போன்ற மிகவும் ஆழமாக, நுண்மையாக, வாசிப்பவரின் உணர்வுகளையெல்லாம் அதீத கற்பனையில் கொண்டு சென்று, அவரின் சிந்தனைகளையெல்லாம் விரிவு படுத்தி, எண்ணங்களை மேன்மையடைய பெரிதும் உதுவுகின்றன என்பதில் எனக்கு சிறு ஐயமும் இல்லை.
இப்போது “காடு” என்ற மகத்தான நாவலை படித்து முடித்தேன். அன்பை, காதலை, நான் பெரிதாக மதிக்கும், உவகை கொள்ளும் இயற்கையை இதன் முழுமையான சாரத்தை “நினைவுணர்வில் கனவுணர்வில்” அமையும்படி உருவான படைப்பு என்றே எண்ணத் தோன்றுகிறது. சங்கப்பாடல்கள், கம்பராமாயண வரிகள், கபிலரின் வரிகள் ……வாசிக்கும் அனைவரையுமே சங்க இலக்கியத்தில் ஒரு பேரார்வத்தை உருவாக்கும் என்பதிலும் ஐயமில்லை.
இது வரையில் நான் வாசித்த தங்களின் அனைத்து படைப்புகளின் மூலம் பெற்ற அரிய கற்பிதங்கள் வழியாக உங்களை மிக அணுக்கமாக உணர, புரிந்து கொள்ள முயன்று கொண்டேயிருக்கிறேன். உங்களைப்பற்றிய விமர்சனம், கருத்துகள் அனைத்தையும் விலக்கி உங்களை மகத்தான உண்மையான தோழனாக, உறவினராக, ஆசிரியராக நான் பெறும் அரிய கற்பிதங்களின் தொகுப்பாக இருந்துகொண்டிருக்கும் ஒரு மேன்மையான மாந்தராக உங்களை எண்ணாத நாளே இல்லை என்று அதீத உவகையுடன் கூற விழைகிறேன்.
இந்த பதிவு எழுத என்னைத் தூண்டிய “ஏற்பும் நிறைவும்” என்ற கடித பரிமாற்றல். இதை ஆழ்ந்து படித்த போது நான் பெற்ற உவகையை சொற்களால் கூற முடியாத சிறுமையை உணர்ந்தேன். மிகவும் ஆழமான உங்களின் பதிலில் என்னைப் போன்று பலர் பெரும் கற்பிதங்கள் எந்த ஒரு கல்வி நிலையத்திலும், உறவுகளின் நட்புகளின் நெருக்கத்திலும் பெற முடியாத ஒன்று.
உங்களின் எழுத்துக்களின் மூலம் என்னுடைய அதீத கவலைகள், துயரங்கள், ஏக்கங்களையெல்லாம் மறந்து வாழ, காலத்தின் கணங்களையெல்லாம் மேன்மையான வகையில் கடந்து கற்று அறிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.
உங்களை சென்னையில் சந்தித்த பின் அதீத உவகையுடன் எழுதும் கடிதம். உங்களை ஒரு நாள், நாகர்கோவில் வரும்போது சந்திக்கலாம் என்று பெரிதும் விழைகிறேன்.
உவகையுடன் எழுத வைத்த உங்களின் ” ஏற்பும் நிறைவும்” பதிலுக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்
பழனியப்பன் முத்துக்குமார்.