புத்தகக் கண்காட்சியில் நான் ஜனவரி-9’ என்கிற அறிவிப்பை முதல்நாள் இரவுதான் பார்த்தேன். எப்படியும் போய்விடுவது என அப்போதே முடிவெடுத்தேன். ஆனால் உங்களைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கை நாற்பது சதவீதம்தான். எங்காவது போகவேண்டுமென ஆசைப்படும்போது பையனுக்கு திடீர் காய்ச்சல் வரும், அலுவலகத்தில் அற்ப வேலை சள்ளையாக இழுக்கும், கணவர் அதிசயமாகச் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிட்டு “நீ இன்னும் கிளம்பலையா?” என்பார்.
அதனால் வீட்டில் யாரிடமும் அப்போது சொல்லவில்லை. காலையிலிருந்து ஒரே குறுகுறுப்பாக இருந்தது. யாருக்கும் தெரியாமலொரு பேரதிசயத்தைப் பொத்தி வைத்திருப்பது போல.
அலுவலகத்தில் (உங்களை) வாசிப்பவர்கள் யாருமில்லை “இன்னைக்கு பொன்னியின் செல்வன் ஸ்க்ரிப்ட் ரைட்டரைப் பார்க்கப் போறேன்” எனச் சொல்லி வைத்தேன். மாலை நான்கு மணிக்கு மாமியாரிடமிருந்தும், கணவரிடமிருந்தும் புக்ஃபேர் போய் விரைந்து திரும்பிவிடுவதாகப் பேசி அனுமதி பெற்றேன். வேலையும் 5.10க்குள் முடிந்தது.
புக் செய்த உடனே ஊபர் கிடைத்தது. “ட்ராஃபிக்ல வண்டி நிக்குது. சும்மா ஃபோனடிச்சுட்டிருக்கக் கூடாது” கோபமாகப் பேசினார் ஆட்டோக்காரர். வந்தால் சரி என நானும் வாசலுக்கு ஓட, ஒரு நிமிடம் கூட நிற்காமல் கேன்சல் செய்துவிட்டு யு-டர்ன் அடித்துப் பறந்துவிட்டார்!. என்னடாது சோதனை என ஓலா போட்டேன்.
ஆட்டோவில் மறுபடியும் அறிவிப்பைப் பார்த்துக் கொண்டேன். கண்ணில் படுமிடமெல்லாம் கல்லூரி மாணவர்கள் தென்பட, ஒய்.எம்.சி.ஏ உள்ளே நடந்துபோகும் போது நீங்கள் வந்திருப்பீர்களா? இன்றைக்கு நிச்சயமாகப் பார்த்துவிடுவோமா? என யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
எண்ணூறாம் நம்பர் ஸ்டால் வழியாக நுழைந்து, ஊடாக நடந்து நூற்றுப் பதினைந்தைத் துளாவினேன். வலப்பக்கம் திரும்பியதுமே நீல நிறச் சட்டையில் நீங்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நினைத்தது போலவே உங்களைச் சுற்றி நிறைய பேர். அஜிதன் கூட இருந்தார்.
ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்க, புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக நாலுபேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
நானும் ‘ஈராறு கொண்டு எழும் புரவி’யை எடுத்துக்கொண்டு வரிசையில் சேர்ந்துகொண்டேன். (‘நீலம்’ வாங்கவேண்டுமென எண்ணியிருந்தேன். பக்கங்களைப் புரட்டியபோது பார்த்த வார்த்தைகளும், பின்னட்டையிலிருந்த விலையும் என்னைத் தயங்க வைத்தன.)
எல்லோரும் பெரிய புத்தகங்களாக எடுத்து வந்திருந்தனர். கையிலிருந்த சிறு புத்தகம் என்னைக் கூச வைத்தது. போய் நாமும் நீலத்தை எடுத்துவிடுவோமா என்று பார்த்தால் அதற்குள் வரிசை போய்விடும் போலிருந்தது. வரிசையிலில்லாமல் பின்புறம் இடப்புறம் நுழைந்து வேறு இரண்டு மூன்றுபேர் கையெழுத்து வாங்கி விட்டனர்.
இடையிடையில் “இந்த புக்கு நம்மளா போட்டோம்?” “என்ன முடிவுல வைட் அண்ட் வைட் போட்டு வந்திருக்கீங்க, இல்ல எனக்கு தெரிஞ்சாகனும்” “மாமீ… என்ன மாமி இப்ப வரீங்க?” தெரிந்தவர்களிடமெல்லாம் உற்சாகம் தெறிக்கப் பேசிக்கொண்டிருந்தீர்கள்.
என்முறை வந்தபோது என்னபேசுவதென்றே தெரியவில்லை. பெயரென்ன என நீங்கள் இருமுறை கேட்டும் நான் சத்தமாகச் சொல்லவில்லை. மூன்றாவது முறை கத்திச் சொல்லிவிட்டு பிறகென்ன பேசுவதெனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். “உங்களைக் கனவுதான் சார் பார்த்திருக்கேன். நேர்ல பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை”
“நீங்க என்ன பண்றீங்க?”
“உங்க ஃப்ரண்டு யுவன் சந்திரசேகர் வேலைபார்த்தாருல்ல, அதே ஸ்டேட் பாங்க்லதான் நானும் வேலை பார்க்கறேன்.”
“அப்படியா, எந்த இடத்துல?” நான் வேலை பார்ப்பது சேத்துப்பட்டில். அங்கிருந்துதான் ஆட்டோ பிடித்து வந்திருந்தேன், ஆனால் அந்தக் கணத்தில் அது மறந்து போய்விட்டது. “அண்ணா நகர்” என்றேன். “அப்படியா, அவனும் அண்ணா நகர்லதான் வேலை பார்த்தான், சிட்லபாக்கத்துலேர்ந்து ட்ரெயின் புடிச்சு பஸ் புடிச்சு எப்படியெல்லாமோ வருவான். ஏதோ ப்ராஞ்சு சொல்வானே… நீங்க எங்க இருக்கீங்க?”. அப்பொழுதுதான் தப்பாகச் சொல்லிவிட்டது உறைத்தது. “வீடுதான் சார் அண்ணா நகர், நான் ஃபாரெக்ஸ்ல வர்க் பண்றேன்.”
‘உங்க சோற்றுக்கணக்கு, அறம் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், படிச்சுட்டு லஞ்ச் ப்ரேக்ல லேடீஸ் ரூம்ல உட்கார்ந்து அழுதுருக்கேன். நற்றுணை கதையை நிறைய்ய நிறைய்ய தடவை படிச்சிருப்பேன். தம்பி படிச்சுட்டு, இப்படிக்கூட மனசு பிசகுமாவென பயந்து போயிருக்கேன். கொலை செய்தவன் யாருன்னு முதல் வரிலயே சொல்லிட்டு ஒரு த்ரில்லர் நாவலை சுவாரஸ்யமா எழுத முடியுமான்னு உலோகம் படிச்சுட்டு ஆச்சர்யப்பட்டிருக்கேன்.’ என்னென்னவோ சொல்ல நினைத்து கடைசியில் ஒரு அட்சரமும் வாயிலிருந்து வரவில்லை.
“எங்க வீட்டுல யாருக்குமே படிக்கற பழக்கம் இல்லை சார். நான் படிக்கறதே வேஸ்ட்டோன்னு தோண வைச்சிருக்காங்க. உங்க எழுத்துக்களைப் படிச்சதுக்கப்புறந்தான் எனக்கு ஒரு தெளிவு வந்துச்சு.” இதுதான் கடைசியாக உருப்படியாகப் பேசியது.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார், அண்ணா நகர் வந்தா வீட்டுக்கு வாங்க சார்.” அத்தோடு விடைபெற்றேன். அதற்குள் மற்றுமொரு நால்வர் வரிசை சேர்ந்துவிட்டது. அடுத்து அஜிதனிடம் போனேன்.
அங்கயே இருந்த மைத்ரி நாவல் வாங்கிப் போய் கையெழுத்து வாங்கியிருக்கலாமா?, ‘உங்க ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும் சிறுகதை அருமை. இயேசுவும், இறக்கை வைத்த காப்ரியேலும் இப்படியெல்லாம் தமிழ் பேசுவார்களா? புன்னகைக்காமல், மறுபடி படிக்காமல் அந்தப் பத்தியைக் கடக்கவே முடியவில்லை’ எனச் சொல்லியிருக்கலாமா? ஒன்றும் கிடையாது.
“உங்கப்பா எழுத்தெல்லாம் ரொம்பப் பிடிக்கும், ஒரு நாள் தவறாம டெய்லி வெப்சைட்ல படிப்பேன்” என உங்களிடம் சொல்ல வேண்டியதெல்லாம் அஜிதனிடம் உளறிக்கொட்டினேன். அதற்கு மேல் அங்கு நிற்கவே முடியவில்லை. ஏனோ பதற்றமாகவே இருந்தது. விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.
“ஒன்னுமே ஒழுங்கா பேசல… சொல்லவேண்டியத சத்தமா கூடச் சொல்லல.” தலையிலடித்துக்கொண்டே வந்தேன். வெளியில் வந்த போதுதான் வானம் இருட்டியிருப்பதும் வீட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டுமென்பதும் உறைத்தது.
வீதியை அடைத்தபடி வாகனங்கள். ஓலா ஊபர் எதுவும் கிடைக்கவில்லை. வழியில் வந்த ஆட்டோக்காரர்கள் அண்ணாநகரில் யாரோ அணுகுண்டு வைத்திருப்பதைப் போல பெயரைச் சொன்னவுடனே பேரம் கூட பேசாமால் போயினர்.
பின்னர் நந்தனம் மெட்ரோவுக்கு நடந்து போனேன். மெட்ரோ ட்ரெயினிலும் ஏகக் கூட்டம். உங்களின் உற்சாகப் பேச்சும், அஜிதனின் சோழிப்பல் சிரிப்பும் (எடுத்துப் போட்டு பல்லாங்குழி ஆடலாமா?) கண்ணுக்குள் சுழன்று கொண்டேயிருந்தன. என்னருகில் நின்ற இரண்டு கல்லூரி மாணவிகள் சன்னமான குரலில் சினிமா பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தனர். என் நினைவுகளுக்கு பேக்ரவுண்ட் ம்யூசிக் போட்டது போல் கேட்க மிக இனிமையாயிருந்தது. அந்தப் பெண்ணின் க்ளிப் போட்ட பழுப்புப் பற்கள் கூட அழகாகத் தெரிந்தது.
உங்களின் கதையில், ஒரு கண் தெரியாத மாட்டுக்குப் பக்கத்தில் அதன் கன்றை நிறுத்தியவுடன் பதட்டம் நீங்கி மதுரமாகிப் போனதுபோல் அன்றாடச் செயல்களின் சலிப்பிலிருந்து விலக்கி அந்த மாலையையை ரம்மியமாக்கியது உங்களுடனான சந்திப்பு.
உங்களுக்கு சில கடிதங்களைத் தட்டச்சு செய்தும், பல கடிதங்களை மனதால் எழுதிப் பார்த்தும் எதையும் அனுப்பியதில்லை. என் சந்தேகங்களுக்கு நீங்கள் எதைப் பற்றியோ எழுதிய கட்டுரையில் விடையிருக்கும். எனக்கு மிகப் பிடித்த கதையை என்னைவிட அருமையாகச் சிலர் விமர்சித்திருப்பர். உங்களுடனான ஒரு உரையாடலைக் தொடங்குவதற்கான தைரியத்தை அளித்தது இந்தச் சந்திப்பு.
புத்தகக் கண்காட்சிக்கு வந்தமைக்கும், எளிமையாக அணுகத் தகுந்த வகையில் இருந்தமைக்கும் அன்பான நன்றிகள்.
காயத்ரி.ய
***
அன்புள்ள காயத்ரி,
புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்திப்பதில் ஒரு தயக்கம் இருந்தது, காரணம் அதில் என்னை நான் ஒரு விஐபி ஆக வைத்துக்கொள்ளும் ஒரு சூழல் அமைகிறது. அப்படி அமையாமலிருக்க அனைவரிடமும் கூடுமானவரை அதிகமாகப் பேச, தனிப்பட்ட உறவை மேற்கொள்ள முயல்கிறேன். ஆனால் பொழுதில்லை. வாசகர் சந்திப்புகள் அப்படி அல்ல. அவை இணையாக உரையாட, பழக வாய்ப்பளிப்பவை.
ஆனால் இச்சந்திப்புகளுக்கு இன்னொரு பயன் உள்ளது. ஒரு வாசகர்சந்திப்புக்கு தயக்கமிருக்கும் புதியவாசகர், வெறுமே ஓர் அறிமுகம் வழியாக ‘பனிக்கட்டியை உடைக்கும்’ ஆசை கொண்டவர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கும் கண்கூடாக அத்தனை வாசகர்களைப் பார்க்க நேர்வது ஒரு நல்ல அனுபவம். ஒருவகை விராடரூப தரிசனம் அது. ஆம், வாசிக்கிறார்கள் என நானே எனக்குச் சொல்லிக்கொள்ள முடிகிறது. என் நூல்களை கட்டாக ஒருவர் வாங்கிச் செல்லும் காட்சி ஒரு பெருமிதத்தையும் அடக்கத்தையும் ஒருங்கே உருவாக்குகிறது.
ஜெ