தத்துவ அறிமுகம், கடிதம்

அன்புள்ள ஜெ,

தத்துவ அறிமுக பயிற்சி வகுப்பு முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அமர்வும் தீவிரமும் ஆழமும் சரிவிகிதமாக கலந்திருந்தமையால் சலிப்பின்றி கற்க முடிந்தது. இந்திய சிந்தனை மரபிற்கும் மேற்கத்திய சிந்தனை மரபிற்குமான பொதுவான மற்றும் முக்கியமான வேறுபாடு, தத்துவம் என்னும் கலைச்சொல்லில் இருந்து தொடங்கி படிப்படியாக முன்சென்றது, குறிப்பாக ஒரு ஊர்தியை உவமையாக்கி தத்துவத்தை விளக்கியது  அற்புதமான ஒன்று. நான் அந்த ஒரு உவமையின் வழியே முன்பின் சென்று இயன்ற அளவு கற்றவற்றை நினைவுறுத்திக் கொண்டேன்.

பொதுவாக குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் மீண்டும் மீண்டும் பிழை களைந்து கற்க வேண்டியவற்றை பிழையின்றி, சலிப்பின்றி மூன்று நாட்களில் கற்றுக் கொள்ள முடிந்தது, என்பது எங்களது நல்லூழ். ஆசிரியரின் பெருங்கருணை  குறித்து சம்பவனுக்கு திரௌபதி கூறியதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

வகுப்பில் எடுத்த குறிப்புகளை வைத்தும் இடையில் பொது உரையாடல்களில் நீங்கள் பேசியதை வைத்தும் விரித்து எழுத ஆரம்பித்துள்ளேன் .

கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ஜெ.

சங்கரன் இ.ஆர்

*

தத்துவ வகுப்பிற்கு நன்றி சார் இன்று இணையத்தில் வந்த உங்கள் வரிகளைத்தான் குறிப்பிட விரும்புகிறேன் “தத்துவக் கல்வி என்பது உண்மையில் தத்துவம் என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கான கல்வி அல்ல. எல்லா அறிதல்களையும் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் நிகழ்த்திக் கொள்வதற்கான பயிற்சி.அது சிந்தனைப் பயிற்சியேதான். அதற்கு வெறுமே ‘தெரிந்துகொள்வது’ மட்டும் உதவாது. அதற்குமேல் பல செயல்முறைகள் தேவை.

வழிகாட்டுதல்களும் தேவை.-ஜெ” இந்த எண்ணம் எனக்கு அங்கிருந்து வந்ததிலிருந்தே இருக்கிறது கற்றல், புரிதல்,மகிழ்ச்சி,ஆசீர்வாதம் என்று பல இருந்தாலும் வேறொரு தத்துவ பின்னிருந்து வந்த எனக்கு முதல் வகுப்பு என்பது  “தெரிந்துகொள்வது” தான்  கற்ற அனைத்தையும் நினைவிலிருந்து practicing process செய்துகொண்டிருக்கிறேன் குறைந்தது இன்னும் மூன்று வகுப்புகள் இதே போன்று அல்லது இன்னும் கூடுதல் கட்டுப்பாட்டுடன் உங்களிடமிருந்து தேவை ஆகவேதான் நேரிலும் தொடர் வகுப்புகளுக்கு அழையுங்கள் என்றேன்,அதனால் தான் இங்கு வந்து உங்களுக்கு கடிதமும் எழுதவில்லை ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவை அனைத்தும் என் வாழ்வின் மறக்கவியலாத ஒரு அனுபவமாக மாறியிருக்கிறது தெளிவாக சொல்லனும்னா உங்கள் வரி தான் நினைவிலிருந்து எழுகிறது

`நான் அவ்வண்ணம் கிளம்பிச்சென்ற பொழுதுகள் எல்லாமே இன்று எண்ணும்போது அக்கல்வி அளவுக்கே முக்கியமானவையாக உள்ளன.-ஜெ” அத்தகையதொரு அனுபவத்தை அருளியதுக்கு நன்றி ஆசான் ஜெ.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

-அன்பு ஹனிஃபா

முந்தைய கட்டுரைசுபிட்சமுருகன் – வெங்கி
அடுத்த கட்டுரைமுக்தா சீனிவாசன்