பிரயாகை முடிவில்…

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

பிரயாகை மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சென்ற வாரம் வெண்முரசின் ஐந்தாவது பாகமான பிரயாகையை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வெண்முரசு படிக்கும் முன்பு நான் மஹாபாரத கதையை தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே அறிந்திருந்தேன். அதனால் பாஞ்சாலியை பாண்டவர்களின் மனைவி என்பதைத் தாண்டி, கர்ணன் – அர்ஜுனன் போன்று மாபெரும் ஆளுமையாக நான் நினைத்ததில்லை. இந்த நாவலை படித்த பின்பு பாஞ்சாலி மிக பிரமாண்டமான, அச்சம் கலந்த மதிப்புமிக்க ஆளுமையாக என் மனதில் பதிந்துவிட்டார். துருவனில் இருந்து ஆகாய கங்கை வழியாக வரும் அவளது அமானுஷ்ய தன்மை நிறைந்த பிறப்புக்கதை என்னை மிகவும் ஈர்த்தது.

பயணங்கள் எவ்வாறு வாசிப்பனுபவத்தை விரிவடையச்  செய்கிறது என்பதை இந்த நாவலை வாசிக்கும் போது உணர்ந்தேன். நான் இமய மலையில் மலையேற்றம் செய்து  மனதில் புதைந்த நினைவுகள், துருபதனின் இமய பயண வர்ணனைகள் மூலம் மீண்டெழுந்து வந்து வாசிப்பனுபவத்தை இனிதாக்கியது. சகுனியின் பாலைநிலப்பயணம் லடாக் நினைவுகளைத்தூண்டியது. இடும்பவன அத்தியாயங்களை படிக்கும் போது காட்டில் எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் சுற்றித்திரிந்தேன். மணாலியில் சென்ற ஹிடிம்பா தேவி கோவில் மனதில் மின்னி மின்னிச் சென்றது. அரக்கர்களின் கதைகளின் மூலம் முன்காலத்தில் எவ்வளவு பெரிய காடு இந்நிலத்தில் விரிந்திருந்தது என ஏக்கத்துடன் நினைத்துக்கொண்டேன்.

வெண்முரசின் அரசியல் உரையாடல்களில் உள்ள தர்க்கத்தை நான் பெரிதும் ரசிப்பதுண்டு. இந்த நாவலில், பீஷ்மர் விதுரரிடம் குந்தி ஆணையிட்ட மதுரா படையெடுப்பு எவ்வாறு அஸ்தினபுரியை காத்தது என்று விளக்கும் இடம் ஒரு சிறந்த உதாரணம். கிருஷ்ணன் இரவோடு இரவாக அஸ்தினபுரியின் படைகளை கங்கையில் ரகசியமா கொண்டு சென்று மதுராவை மீட்கும் அத்தியாயத்தை படிக்கும் பொது அர்ஜுனன் மட்டுமின்றி நானும் கண்ணனின் ஆளுமையால் முழுதாக ஆட்கொள்ளப்பட்டேன். அர்ஜுனன் குந்தியிடம் துவாரகையை வர்ணிக்கையில் எகிப்தில் உள்ள பிரமிடுகளை குறிப்பிடும் போது, கொற்றவையில் கிரேக்க தத்துவ ஞானிகள் குறிப்பிடப்படுவதை நினைத்துக்கொண்டேன்.

சுயம்வர அத்தியாயம் நாவலின் மகுடமாக அமைந்திருந்தது. சுயம்வர அரங்கின் வர்ணிப்பு, அங்கு மக்களிடம் நிலவிய  உற்சாக மனநிலை, மன்னர்கள் உள்ளே நுழைந்த விதம், அவர்கள் பிற மன்னர்களுடன் பரிமாறிக்கொண்ட பார்வைகள் என அனைத்தும் சேர்ந்து ஒரு பெரும் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற உணர்வை அளித்தது. அரங்கில் கர்ணன் எழும் பொழுது, அவன் வெல்ல மாட்டான் என அறிந்திருந்தும், அவன் வெல்லவேண்டும் என ஏங்கினேன். ஆனால் வெல்லாததனாலேயே அவன் வரலாற்று தொன்மமாக நீடிக்கிறான் என்று எண்ணிக்கொண்டேன். நாவலின் அட்டை ஓவியத்தில் உள்ளது  அர்ஜுனன் எனவே நான் நினைத்திருந்தேன். அது கர்ணன் என  அறிந்த பின் அதுவே பொருத்தமானது என நினைத்துக்கொண்டேன். திரௌபதி ஐந்து பேரை மணந்ததன் பின்னுள்ள வரலாற்று அரசியல் காரணங்களையும் இந்நாவலின் மூலமாக அறியமுடிந்தது.

நாவலை படிக்கும் போது திருவட்டாறு கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு கர்ணன் மற்றும் அர்ஜுனனின் சிலைகளை பார்க்கும் போது எனக்கு அணுக்கமான, நான் நன்கறிந்த இரு மனிதர்களை நோக்குவதுபோலிருந்து. நீங்கள் உங்கள் “கரு” கதையில் குறிப்பிட்டது போல, உண்மை (factual) தகவல்களும் புராணங்களும் இணையும் புள்ளியிலேயே நாம் ஒரு இடத்தை முழுமையாக உணர்கிறோம். இந்நாவல் அவ்விரண்டையுமே அளிப்பதாகவிருந்தது. வானில் தெரியும் துருவ நட்சத்திரம் கூட இப்போது ஆழ்ந்த பொருள் நிறைந்த ஒன்றாக தெரிகிறது.

அன்புடன்

கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்

முந்தைய கட்டுரைவிரைவுவாசிப்பு – சில குறிப்புகள்
அடுத்த கட்டுரைவைணவங்கள், கடிதம்