ஒரு பேட்டி

சூரியக்கதிரில் வெளியான பேட்டியின் முழு வடிவம்

அபாரமான நாவல்கள், அருமையான சிறுகதைகள், அதிரடியான விமர்சனங்கள் எனத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர் ஜெயமோகன். காடு, விஷ்ணுபுரம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும், நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற சினிமா விஷயங்களுக்கும் இந்தத் தலைமுறையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தவரை சூரியக்கதிர் பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.

1) “ இன்றைய தலைமுறையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக விமரிசிக்கப்படும், அதிகமாகப் பாராட்டப்படும் எழுத்தாளராக நீங்கள் விளங்குகிறீர்கள். இந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?”

 

தமிழகத்தில் எப்போதுமே, முதன்மை எழுத்தாளர்கள் எல்லாருக்குமே இப்படித்தான் நடத்து வருகின்றது. உதாரணத்துக்குப் புதுமைப்பித்தனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தாளரும் அவர்தான் அதே போல மிக அதிகமாகப் பாராட்டப்பட்ட எழுத்தாளரும் அவர்தான். அவரைப் பிடித்தவர்கள் எவ்வுளவு பேர் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்களும் அதே அளவில் இருந்தார்கள்.

 

அதற்குப்பிறகு சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இவர்கள் இரண்டு  பேருக்குமே இணையான அளவு ரசிகர்களும் உண்டு, இணையான அளவுக்கு விமர்சகர்களும் உண்டு. அதன் பிறகு என்னுடைய தலைமுறையைப் பார்த்தீர்கள் என்றால், எனக்கென்று தீவிர வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதே அளவுக்கு விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

 

நாளை இன்னும் ஒரு 10-15 வருஷத்தில் இன்னும் ஒரு எழுத்தாளர் வந்து-அதாவது 2030ஆம் ஆண்டுகளின் மையப் புள்ளியாக அவர் இருப்பாராக இருந்தால் அவருக்கும் அதே நிலைதான் இருக்கும்.

 

இது ஏன் இப்படி நடக்கிறது என்றால்,  மையப் புள்ளியாக இருக்கிற எழுத்தாளர் ஒருவர் வெறுமனே எழுதிக் கொண்டு பேசாமல் இருந்துவிடுவதில்லை. அத்தகைய ஓர் எழுத்தாளர் எழுதுவதுமட்டுமல்லாமல் தன்னுடைய சமகாலத்தைப் பற்றி முழுமையான பார்வையை முன் வைக்கிறார். அரசியல், பண்பாடு என்று எல்லாத் தளத்திலும் தன்னுடைய கருத்தை முன் வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக சமூகத்தின் மீது ஒரு பாதிப்பை உருவாக்குகிறார்.

 

அப்படி உருவாக்கும்போது, ஏற்கனவே உள்ள விஷயங்களைப் பாராட்டக் கூடியதாகவும், வளர்க்கக்கூடியவராகவும் மட்டும் அவர் இருக்க மாட்டார். புதுமைப்பித்தன் அவருடைய காலகட்டத்தில் பலரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களும் பலரைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இது எழுத்தாளர்களின் இயல்பு.

 

எனக்கு உறுதியாக ஒரு விஷயம் தெரியும். இது என்னுடைய மிஷன் (Mission). இதைச் செய்யத்தான் இங்கு வந்திருக்கிறேன். இதில் வரக் கூடிய நன்மைகளையும் தீமைகளையும் நான் அடையக் கடமைப்பட்டவன். இதனால், இதில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். இரண்டாவதாக எல்லாரும் என்னைப் பாராட்டணும், புகழ்ந்து கொண்டாடணும் என்கிற எண்ணம் என்னிடம் கிடையாது. என்னுடைய கருத்துகள் கவனிக்கப்படணும்,அவை பேசப்பட்டு ஒரு பாதிப்பை உண்டாக்கணும் என்கிற நோக்கம் இருக்கிறது. அந்தப் பாதிப்பை உருவாக்குமா என்பதை மட்டும்தான் நான் கவனிப்பேன்.

 

அந்தக் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டால் வருத்தம் இருக்குமே ஒழிய வசைபாடப்பட்டாலோ திட்டப்பட்டாலோ எனக்கு வருத்தம் இல்லை.  நான் குறிப்பிட்ட தரத்துக்குக் கீழ் உள்ள  விமர்சன எழுத்துக்களை நான் படிப்பதில்லை. எனக்கு எதிராக எழுதப்பட்ட எல்லா விஷயங்களையும் எனக்குப் படிக்கும் பழக்கமில்லை.  ‘உங்களை இவர் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்,இருப்பினும் இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது’ ‘ என்று எனக்கு நம்பகமான நண்பர்கள் சொன்னால் மட்டுமே நான் அதைப் படித்துப் பார்ப்பேன்.

 

2) தொப்பி, திலகம் என்பது போலக் கொஞ்ச காலத்துக்கு முன்பாக எழுதினீர்கள்.. இப்போது குங்குமம், திரிசூலம், மாங்கல்யம் என்பது போல ஏதாவது எழுதுவீர்களா ?

(சிரிக்கிறார்).. அது ஒரு நகைச்சுவைக்காக அப்போது செய்தேன். பின்நவீனத்துவ சூழலில் எல்லாவற்றையுமே வேடிக்கையாகப் பார்க்க வேண்டிய மரபு இருக்கிறது. அந்த அடிப்படையில் நான் மிகவும் மதிக்கக் கூடிய எல்லாரைப் பற்றியும் வேடிக்கையாக எழுதினேன். என்னுடைய குருவான நித்ய சைதன்யரைப் பற்றிக் கூட எழுதினேன். என்னுடைய ஆசிரியர்களாக நினைக்கக்கூடிய ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி போன்றவர்களையும் கிண்டல் செய்து எழுதினேன். அந்த வரிசையில் இந்தக் கிண்டல்கள் வந்தன. ஆனால் தொப்பி, திலகம் மட்டும் தனியாக எடுத்துப் பிரசுரித்தபோது அதன் அர்த்தம் மாறிப்போனது. எனவே இதுபோன்ற எழுத்துகளுக்குத் தமிழ்வாசகர்கள் பழக்கம் இல்லாமல் இருந்ததால், அதைத் தொடர்வதை விட்டு விட்டேன்.

 

3) அதிக கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் சினிமா இயக்குநரான பாலாவுடன் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள் ?

பாலா  வாழ்க்கையை வன்மையாகச் சித்தரிக்கக் கூடிய இயக்குநர்.. அதிலும் அழுத்தமான வண்ணங்களில் சித்தரிக்கக் கூடியவர். அவருக்கு சராசரிகளில் ஆர்வம் கிடையாது.. சராசரிக்கு மேல் இருக்கக் கூடிய அல்லது கீழே இருக்கக் கூடிய வித்தியாசமான நபர்கள் மீது கவனம் செலுத்துவார். சராசரியாக சொல்லப்படாத விஷயங்களைச் செல்வதுதான் அவருடைய மிகப் பெரிய பலம். இது போன்ற விஷயங்களுக்கு அவருக்கே சொந்தமான அனுபவத்தளம் அவரிடமே இருக்கிறது. அவர் வாழ்ந்த சூழலில் அவர் சந்தித்த மனிதர்கள் பற்றிய நிறைய சித்திரம் அவரிடமே இருக்கிறது. அவருக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் எல்லாமே வழக்கத்துக்கு மீறிய வாழ்க்கையைச் சொல்வதால் கிடைத்தவை.

4) நீங்கள் பணியாற்றிய மற்றொரு இயக்குநரான வசந்தபாலன்…

வசந்தபாலன், பாலாவுக்கு நேர்மாறானவர். தான் பார்க்கக் கூடிய சராசரி மக்கள் மீது அவருக்கு ஆர்வம் உள்ளது. அவர்கள் வாழ்கிற வாழ்க்கையில் மற்றவர்கள் சொல்லாத விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவார். உதாரணத்துக்கு, ஒரு இளம்பெண் காலையில் 8 மணிக்குக் கடையில் வேலை செய்து முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போகிறாள்.  காலையில் 8 மணி முதல் 11 மணி வரை வேலை செய்யும் அவளுக்கு எந்தமாதிரியான வாழ்க்கை இருக்கிறது ? அவளுக்குக் கென்று காதல் இருக்கிறதா ? அவள் சினிமா பார்க்க முடியுமா ? அதாவது சராசரி வாழ்க்கையை, சராசரியான பகுதியை எடுத்து, சராசரியாகவே காட்டக் கூடிய இயக்குநர். எப்படி சர்வதேச அளவில் பாலா கவனிக்கப்படுகிறாரோ அதே அளவுக்கு வசந்தபாலனும் கவனிக்கப்படுகிறார் !

5) உங்களை விமர்சனம் செய்யும்போது இந்துத்வாவுடன் தொடர்புபடுத்தி விமர்சனம் செய்வது ஏன் ?

இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த எழுத்தாளர்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வரவில்லை என்பதுதான். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என்று தமிழ்ப்பண்பாட்டுக்குப் பங்களித்த எல்லா எழுத்தாளர்கள் மீதும் இந்துத்வா, அடிப்படைவாதம், பார்ப்பனீயம் என்கிற அடிப்படையில்  விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

இங்கு தமிழ்நாட்டில் இரண்டு வகையான அரசியல் கெடுபிடிகள் இருக்கின்றன. ஒன்று திராவிட இயக்கம் சார்ந்தது. மற்றொன்று மார்க்ஸிஸ்ட் சார்ந்தது. இதில் விவரமான மார்க்ஸிஸ்ட் உண்டு,  அதாவது மார்ஸியம் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருக்கும்  மார்க்ஸிட்டுகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவு. பெரும்பாலானவர்கள் இந்தக் கொள்கைகளை மேலோட்டமாகத் தெரிந்து  கொண்டு மேலோட்டமாகப் பேசிக்கொள்கிறார்கள்.

 

ஆகவே  நமது பல்லாயிர வருடப் பாரம்பரியமோ தத்துவ சிந்தனையோ அதனுடைய கலையோ இந்து என்ற அடையாளத்துடன் தான் இருக்கிறது.  அதைப் பற்றி  ஒருவர் பேசினாலோ அவர் இந்துத்வா சார்ந்தவர் என்று கூறிவிடுகின்றனர். இப்படி எல்லாம் அதிகமும்  சொல்பவர்கள் எதையும் படிக்காதவர்கள்.

 

இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்துத் தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக்கொண்டவர்கள் பத்துப் பேர் தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சொன்னது போல இந்துத்துவம் என்றெல்லாம்  கருத்துக்களைச் சொல்லக் கூடியவர்கள் உண்மையில் சொல்லப்போனால் எதையும் படித்திருக்க மாட்டார்கள். நேரில் அவர்களிடம் போய் நீ என்ன படித்திருக்கிறாய் ? எந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய் ? என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. எல்லாரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள் என்பார்கள்.

 

அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

6) காடு, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளுக்கு உங்களை எவ்வாறு (Prepare) தயார் செய்து கொள்வீர்கள் ? அவற்றுக்கு எந்த வகையான இன்புட்ஸ் (inputs) தேவைப்படுகின்றன ?

(சற்று யோசித்தபடியே)… ஒரு கலைஞன் அது எழுத்தாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட படைப்புக்காகத் தனியாகத் தயார்படுத்திக் கொள்வது மிகக் குறைவாகத் தான் இருக்கும். சில நூல்களுக்கு ஆய்வு தேவைப்படுகின்றது. உதாரணத்துக்கு நான் எழுதிய அசோகவனம், விஷ்ணுபுரம் நாவல்களுக்குத் தனியாகக் கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. விஷ்ணுபுரத்துக்கு ஜோதிடம், கலைகள், சிற்பக் கலை மாதிரியான விஷயங்களுக்குத் தனியாக ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ரஷ்யாவின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அந்த ஆய்வு என்பது வெறும் 10 சதவிகிதம் தான்.

ஒரு புத்தகம் எழுதும்போதுதான் அந்த ஆய்வை செய்ய வேண்டும்.  ஒரு புத்தகத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வு செய்ய முடியாது. புத்தகத்தை எழுதத் தொடங்கிய பிறகு எந்தெந்த விஷயங்களுக்கு என்னென்ன தேவையோ கூடவே ஆய்வும் சேர்ந்து செய்ய வேண்டும்.  எழுதுவதற்கு முன்னர் என்ன தேவை என்பது தெரியாது.

இப்போது ஒரு நாவலை எழுதுகிறேன். எழுத ஆரம்பிக்கும்போதுதான்.. அது சென்னை நகரத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது,உதாரணத்துக்கு, அதாவது சென்னையில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா பற்றி எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் அதிகமாக ஆட்டோ ரிக்‌ஷா எந்த ஏரியாவில் இருக்கு ? ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் எந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்  என்று அப்போதுதான்  ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எனவே, சென்னையைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுத வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

 

இதைத் தவிர வருகிற அனுபவங்களுக்கு, தொடர்ந்து எப்போதுமே கண்ணையும் காதையும் திறந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை மாதிரி சிறுவன் மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.உணர்ச்சிகரமாக இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இவை  நமக்குள் எங்கோ ஒரு  இடத்தில் தேங்கிக் கொண்டே இருக்கும்.

 

உதாரணமாக, இந்த ஹோட்டலுக்கு (’அவர் தற்போது தங்கி இருக்கும் ஹோட்டல்’) முன்பாக ஒரு விக் (Wig) கடை இருக்கிறது. அதில் ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறார். முப்பது நாற்பது தலைகள் வைத்து அதன் மீது விக் (Wig) வைத்து வாடகைக்கு விட்டுக் கொண்டு இருக்கிறார். இதை ஒரு தொழிலாக ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். இதை எப்போதாவது நாம் கவனிக்கிறோம். இப்போது நான் அதை வைத்துக் கதை எழுதப்போவதில்லை. ஆனால், ஒருவன் காலையில் எழுந்து 10 தலைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது ஒரு விசித்திரத்தை ஏற்படுத்துகின்றது. ஏதோ ஒரு கதையில், ஏதோ ஒரு இடத்தில் தானாகவே என்னிடம் இருந்து வெளிவரும்.

7) சிறுகதைக்கு இது போன்ற ஆய்வு தேவைப்படுமா ?

சிறுகதைகளுக்கு ஒரு ஸ்பார்க் (Spark) மட்டுமே போதும். சிறுகதையை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரிந்தால் அதுதான் சிறுகதை. அந்த முடிவு தோன்றிய பிறகு அதன் தொடக்கத்துக்குக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு எழுத ஆரம்பிக்கிறோம். இதற்குத் தனியாக ஆய்வு தேவைப்படுவதில்லை. ஒரு பார்வையில் (Observation) இருந்துதான் அது தொடங்குகின்றது.

8) ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது ?

எழுத்து என்பதை ஒரு தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் அது நல்லா இருக்காது… அது தரமான எழுத்தை உருவாக்க முடியாது.. ஆனால் உலகம் முழுவதும் முக்கிய எழுத்தாளர்கள் எல்லாருமே முழுநேர எழுத்தாளர்களாகவும் எழுத்தே வாழ்க்கையாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். காரணம்  இது எனர்ஜி (Energy)  சம்பந்தமான விஷயம்

 

பொதுவாக, காலை 10 மணிக்கு சென்று ஆபீஸில் கடுமையாக உழைத்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பும்போது, கதை எழுதுவதற்கும் சிந்திக்கிறதுக்கும் சக்தி (stamina) குறைந்து போகிறது. இதற்குப் பிறகு  அலுவலகப் பொறுப்புகள் இருக்கின்றன. அந்தப் பொறுப்புகளுடைய சுமைகள் வீட்டில் அழுத்தினால் மீண்டும் எதுவுமே சிந்தனைக்கு வராது.

 

சென்ற காலகட்டத்தில் அரசாங்க வேலை என்பது கொஞ்சம் சுதந்திரம் உள்ளதாக இருந்ததால், அதிலும் அப்போதைய குமாஸ்தா (Clerical) வேலையில் உள்ளவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள். ஏனென்றால் அதில்  பொறுப்பு கொஞ்சம் குறைவு. அதிகாரியாக இருந்தால் எழுத்து இல்லாமல் போகிறது.ஏனென்றால் அவரைப் பொறுப்புக்கள் அழுத்தி விடுகின்றன.

 

இப்போது 1990களுக்குப் பிறகு அமெரிக்க நிர்வாக முறை நம் நாட்டில் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது. ஒரு நிறுவனத்தில் ஒருவன் வேலைக்கு வந்துவிட்டால் அவனுடைய கடைசி உழைப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஓய்வோ சுதந்திரமோ கொடுக்கக் கூடாது என்கிற எண்ணம் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டது. இன்று வேலையைப் பார்த்துக் கொண்டு எழுதுவது என்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. இளம் தலைமுறையில் அதிகமாக எழுத்தாளர்கள் வராமல் போனதற்கு இது ஒரு முக்கியமான காரணம். கடுமையான உழைப்பிலேயே வாழ்க்கை போய் விடுகின்றது.

 

ஆகவே எழுத்து ஒரு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த வருமானம் தமிழ் மொழியில் இல்லை. இதுதான் முக்கியமான சிக்கலாக இருக்கிறது. எப்போது ஒருவன் தனது மனதுக்குப் பிடித்த எழுத்தை எழுதி அதிலேயே ஒரளவுக்குக் கஷ்டப்படாமல் வாழ்க்கை அமைத்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கிறதோ, அந்த சூழலில்தான் ஒரு எழுத்தாளன் நன்றாக வாழ முடியும். ஆனால், இன்று தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் கூட எழுத்தை நம்பி வாழ முடிவதில்லை.

– எம்.பி.சரவணன்

முந்தைய கட்டுரைஅச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா ?
அடுத்த கட்டுரைசென்னை பற்றி…