பெங்களூர் கட்டண உரை, மற்றும் பயணங்கள்…

அகரமுதல்வன் அழைத்திருந்தார், அப்போது நான் டெல்லியில் இருந்தேன். ‘தேவதச்சனின் வண்ணத்துப் பூச்சி காட்டை காலில் தூக்கிக் கொண்டு அலைவதுபோல நீங்கள் இலக்கியத்துடன் பறந்துகொண்டிருக்கிறீர்கள்என்றார். காலில் காடு இருக்கும் நினைவே இல்லை. ஆனால் உடனிருந்துகொண்டிருந்தது.

இந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பியநான் இன்னும் ஊர் திரும்பவில்லை. ஒரே பயணத்தில் பல இலக்கிய நிகழ்வுகள். பிரியம்வதாவுக்கு Storie of the True  மொழியாக்கத்துக்காக அ.முத்துலிங்கம் விருது அளிக்கும் விழா கோவையில் 19 ஜனவரியில் நடைபெற்றது. புத்தகக் கண்காட்சியில் இருந்து நேராக அதற்குச் சென்றிருந்தேன். அங்கே அனிதா அக்னிஹோத்ரியையும் கீதா ராமசாமியையும் சந்தித்தேன். 

மிக உற்சாகமான நிகழ்வு. கோவையின் முகங்கள் அனைவரும் வந்திருந்தனர். நாஞ்சில்நாடன், மரபின்மைந்தன் முத்தையா, எம்.கோபாலகிருஷ்ணன். ஒவ்வொருவரின் உரையும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவை. அறம் கதைகளை பற்றி அவர்கள் சொன்னவை நிறைவூட்டும் சொற்கள் எனக்கு.

பிரியம்வதா  மொழியாக்கத்திற்கு இன்றிருக்கும் சிக்கல்களைப் பற்றிச் சொன்னது முக்கியமான ஒரு கருத்து. இன்றைய ஆங்கில வாசிப்பு என்பது முதன்மையாக பலவகையான அரசியல் முன்முடிவுகளாலானதாக உள்ளது. அவற்றை உருவாக்குபவை நம் ஆங்கில கல்விநிலையங்கள். இலக்கியம் பெண்ணியம்,தலித்தியம், பின்காலனித்துவம் என்றெல்லாம் உடனடியான எளிய பகுப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. அவற்றைக்கொண்டே இலக்கியம் அளவிடப்படுகிறது. 

இந்த மேலோட்டமான தளத்திற்கு அடியில் மெய்யான வாசிப்பு உள்ளது. அதுவே உண்மையான விசை. ஆனால் பதிப்பகங்கள் அதை கவனிப்பதில்லை. அவை திரும்பத் திரும்ப மதிப்புரைகளின் தேய்வழக்குகளையே அளவுகோலாகக் கொள்கின்றன. அது படைப்புகள் ஆங்கிலத்தில் சென்றடைவதற்கான பெருந்தடையாக இன்றுள்ளது.

மறுநாள் ஈரோட்டுக்கு அருகே சொற்பொழிவுப் பயிற்சி. நான் சர்வதேச முறைமையுடன் உருவாக்கிய அப்பயிற்சிமுறை நடைமுறையில் வெல்லுமா என்னும் ஐயமிருந்தது. ஆனால் அங்கேயே முதல்முறை பேசியவர்களிடம் இரண்டாம் முறை பேசும்போதிருந்த மாபெரும் மாற்றம் இந்த பயிற்சி முறை என்பது எத்தனை மகத்தானது என்னும் எண்ணத்தை அளித்தது. பலருடைய உரைகள் தமிழில் எங்கும் ஆற்றப்படும் தொழில்முறை உரைகளைவிட பலமடங்கு மேலானவை. ‘வெள்ளைக்காரன் என்றால் சும்மா இல்லடாஎன்று நானே சொல்லிக்கொண்டேன்.  

அங்கிருந்து மீண்டும் கோவை. ஜிஎஸ்எஸ்வி நவீன்கிருபா இல்லத்தில் ஒருநாள் தங்கி என் பெங்களூர் உரையை தயாரித்தேன். முழுநாளும் அதற்குச் செலவாகியது. நடுவே கிருபா அளித்த காபியை குடித்துக்கொண்டே இருந்தமையால் அன்றிரவு தூக்கமே இல்லை. அதிகாலையில் டெல்லிக்கு பயணம். கோவையில் வடவள்ளியில் காலை மழைவேறு பெய்துகொண்டிருந்தது. டெல்லி விமானம் 9 மணிக்கு. ஆனால் ஆறரைக்கே அங்கிருக்கவேண்டுமென்றனர். குடியரசு தின கெடுபிடிகள்.

விமானத்தில் சற்று தூங்கினேன். 12 மணிக்கு டெல்லி. அங்கே பிரியம்வதா விமானநிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார். நேராக ஓட்டல். இரண்டு மணிநேரம் ஓய்வுக்குப்பின் குளித்துவிட்டு குன்ஸும் புக்ஸ் என்னும் கடையில் அமைந்த மொழியாக்க கருத்தரங்குக்குச் சென்றோம். 

பிரிட்டிஷ் கௌன்ஸில் மற்றும் இரண்டு மொழியாக்க உதவி அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்த நிகழ்வு. முதன்மைப் பங்களிப்பாளர்கள் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் முதலிய பதிப்பாளர்கள். என் இலக்கிய முகவர் கனிஷ்கா குப்தா, மொழியாக்க மேற்பார்வையாளர் அருணவா சின்ஹா ஆகியோரைச் சந்தித்தேன். 

ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரோடொருவர் பதினைந்து நிமிடம் உரையாடவேண்டும். அதன்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். நிகழ்ச்சி இத்தகைய நிகழ்ச்சிகள் எப்படி நிகழுமோ அப்படி நிகழ்ந்தது. பெரும்பாலும் சம்பிரதாயமான உரையாடல். எழுத்தாளர்கள் தீவிரமாக எதையாவது சொல்ல முயன்றால்கூட அதற்கான இடம் அங்கில்லை. 

ஒரு வாசகநண்பர் அங்கே அறம் பற்றி மிக உணர்ச்சிகரமாக இரண்டுநிமிடம் பேசினார். எனக்கு ஒரு பூங்கொத்துடன் வந்திருந்தார். அவருடைய வருகை அந்த சூழலை ஒருவகையில் குழப்பியது, ஆனால் அவர்களுக்கு புதியதாகவும் இருந்தது. அங்கிருந்த எல்லாருமே ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள். ஆகவே பிற எழுத்துமேல் பெரிய ஈடுபாடு இல்லாத உயர்வட்டத்தினர். உணர்ச்சிகரமான ஒரு வாசகரின் குரல் அவர்களுக்கு முற்றிலும் புதியது. Stories of the True  நிகழ்ச்சிக்குப்பின் அதிகமாக விற்க அந்த வாசகரின் குரல் காரணமாகியது.

ஹார்ப்பர் காலின்ஸ் பிரசுரத்தை முன்பு Stories of the True வெளியீட்டுக்காக அணுகியபோது ஓர் ஆசிரியர் ஆங்கிலத்தில் அறிமுகமாக சிறுகதைத் தொகுப்பு சரியான வழி அல்ல, நாவல்தேவை என்றனர். இப்போது தங்கள் கணிப்பு பிழையாக ஆகிவிட்டது என்று அவர்களே சொன்னார்கள்.

டெல்லியில் இருந்து 25 ஜனவரி மாதம் நேராக பெங்களூர். நண்பர் கோகுல கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தேன். அவருடைய நண்பர் கமலக்கண்ணன், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர். மறுநாள் அதிகாலையில் கட்டண உரை. அருகே ஒரு கல்யாணமண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அங்கே பல நண்பர்கள் வந்து தங்கியிருந்தனர். மாலை ஐந்து மணிக்கு அங்கே சென்றேன்.

பெரிய கூட்டுஅறையில் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஐம்பதுபேர் அங்கேயே கூடிவிட அதுவே ஓர் இலக்கிய அரங்குபோல் இருந்தது.  மேலைத்தத்துவம், உடனே சினிமா என எல்லாவற்றையும் தொட்டுச்சென்ற உரையாடல். திருமணவீடு போலத்தான். ஒரு நண்பர்கூடுகை என்பது எத்தனை ஊக்கமூட்டும் நிகழ்வு என புதியதாக வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நான் பத்துமணிக்கெல்லாம் வந்து படுத்துவிட்டேன். கோகுலின் இல்லம், அரங்கை ஒட்டிய அறைகளில் நண்பர்கள் நள்ளிரவு ஒருமணி, விடிகாலை மூன்றுமணி என வந்துகொண்டே இருந்தார்கள். நான் மூன்றரை மணிக்கு யாரோ வந்து, நாய்கள் குரைத்த ஓசை கேட்டு விழித்துக்கொண்டேன். அதன்பின் தூக்கமில்லை.

இந்த விழாவை கோகுல கிருஷ்ணன், மருதப்பன், புவனேஸ்வரி, சதீஷ், ஜெகன், பிரவீன்  ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். பெங்களூரில் ஒரு விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் அமைந்துவிட்டது.

இந்த விழாவை காலை ஆறரைக்கு முடிவுசெய்தமைக்குக் காரணம், பெங்களூரில் போக்குவரத்துச் சிக்கல் குறைவாக இருக்கும் பொழுது, அல்லது இல்லாமலேயே இருக்கும் பொழுது இது என்பதுதான். அந்த முடிவை எடுத்தபின் அமைப்பாளர்களுக்கு குழப்பங்கள் இருந்தன. போதிய அளவில் பங்கேற்பாளர்கள் வருவார்களா, வெளியூரில் இருந்து வர முடியுமா? முதல்சிலநாள் மிகச்சிலர் மட்டுமே பதிவுசெய்திருந்தனர். ஆனால் கூட்டம் வந்துவிட்டது, அதன்பின்னரே நிறைவு உருவானது.

ஆறரை மணிக்குக் கூட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்தபின் இந்த ஆறரை மணி என்பது ஒரு நல்ல பொழுது என்ற கருத்துக்கள் பலரால் சொல்லப்பட்டன. ஏனென்றால் மனம் துல்லியமாக, ஒரு ஆழமான உரையை கேட்பதற்கான உளஒருமையுடன் இருக்கிறது. நகரத்தில் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு, களைத்து, போக்குவரத்துச்சிடுக்கில் மாட்டி எரிச்சல் கொண்டு வந்து சேர்ந்து அமர்ந்திருக்கும் உளநிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

காலை ஆறேகாலுக்கு அரங்குக்குள் பார்வையாளர் விடப்பட்டனர். ஆறரை மணிக்கு அரங்கு நிறைந்திருந்தது.  (பிந்திவந்த ஏழுபேரை அனுமதிக்கவில்லை. இந்த உரையில் உரை தொடங்கியபின் எவரையும் அனுமதிப்பதில்லை) பெங்களூரில் குளிர் 12 டிகிரி வரை இருந்து சற்று குறைந்திருந்தது. ஆனாலும் குளிர்தான். ஆறேமுக்காலுக்கு உரை. ஒருமணிநேரம் முதல் பகுதி. அதன்பின் காபி. மீண்டும் ஒருமணிநேரம். மொத்தம் இரண்டு மணிநேர உரை. 

தமிழகத்தில் இரண்டுமணிநேர உரை என்பது மிகச்சாதாரணம்தான். எந்த தயாரிப்பும் இல்லாமல் மூன்றுமணிநேரம் பேசுபவர்களே மிகுதி. ஆனால் இந்த உரை அப்படி அல்ல. இது தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் என்று தொட்டுச்செல்லும் உரை. வெற்றுச்சொற்கள் குறைவு. அதைவிட பதினைந்தாண்டுகளாக நான் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அனைத்தையும் வாசித்த நண்பர்கள் பலர் அரங்கில் உண்டு. அவர்களுக்கும் புதியதாக இருக்கும்படி பேசியாகவேண்டும். அந்த உரையை திரும்ப நிகழ்த்தவும் முடியாது. உண்மையில் ஒரு நூறுபக்க நூலாக விரிவாக்கம் செய்யத்தக்க உரை இது.

இந்த உரையின் தனித்தன்மை என்ன? யோகேஸ்வரன் போன்ற நண்பர்கள் மாயவரத்தில் இருந்து பயணம் செய்து எல்லா கட்டண உரைகளையும் நேரில் கேட்டிருக்கிறார்கள். அவை இணையத்தில் பின்னர் வெளிவரும். ஆனால் நேரில் கேட்பது வேறொரு அனுபவம். அதை அடைந்தவர்கள் அதை தவறவிடுவதில்லை. என் நண்பர்களான அரங்கினருக்கும் எனக்கும் நான் ஆற்றிய எல்லா உரைகளுமே அற்புதமான அனுபவ நினைவுப்பதிவகளாகவே உள்ளன

ஏன்? ஒன்று இணையுள்ளங்களுடன் சேர்ந்து அரங்கென அமர்வதன் உளநிலை. அது கூர்ந்த கவனத்தை, ஒருங்கிணைவை உருவாக்குகிறது. அத்தகைய கூர்நிலை வேறெந்த தருணத்திலும் அமைவதில்லை.

இரண்டு, பேசுபவருடனான நேருக்குநேர் தொடர்பு. நம் கண்முன் ஓர் ஆளுமை நின்று நம்முடன் நேரடியாக உரையாடுகிறது என்னும் உணர்வு. முகபாவனைகள், குரல் எல்லாம் உருவாக்கும் நிகழ்த்துகலை அனுபவம். அதில் பேச்சாளரின் தீவிரம் மட்டுமல்ல, அவர் குழம்புவதும் தயங்குவதும் யோசிப்பதுமெல்லாம்கூட நமக்கு அனுபவங்களாகின்றன. அந்த சிந்தனையுடன் நாமும் ஒழுகிச்செல்கிறோம்.

பேச்சாளனாக எனக்கும் அரங்கின் முன் நிற்பது ஓர் அரிய அனுபவம். எனக்கு எப்போதும் அந்த நடுக்கம் உண்டு. சிறிய உரைகளுக்குக் கூட. உரை சரிவர நிகழாமல் போய்விடுமோ என்னும் பதற்றம். அந்தப்பதற்றத்தை இழக்கலாகாது என உறுதியுடன் இருக்கிறேன். ஆகவேதான் மேலோட்டமான கவனம் கொண்ட அரங்குகளை தவிர்க்கிறேன்கல்லூரிகளை தவிர்ப்பது அதனால்தான். வாயைப்பிளந்து அமர்ந்திருக்கும் அசட்டு மாணவர்கள் நடுவே நின்றால் ஒருவகை கூச்சம் உருவாகிறது. 

கூடுமானவரை எல்லா சம்பிரதாய உரைகளையும் தவிர்க்கிறேன். எல்லா உரைகளிலும் புதியதாக ஏதேனும் ஒன்றைச் சொல்ல முயல்கிறேன். உரையை எப்போதுமே அந்த மேடையில் எனக்கு அரங்குக்கும் இடையே நிகழும் ஓர் அந்தரங்கமான உரையாடலாக ஆக்கிக்கொள்கிறேன். நான் ஓர் அவையுடன் சேர்ந்து சிந்திப்பதுதான் என்னைப் பொறுத்தவரை உரை என்பது. அது படையுடன் போருக்குச் செல்வதுபோல. அல்லது கூட்டுப்பிரார்த்தனைபோல.

ஆகவே எனக்கு என் உளநிலையுடன் இசைந்து செல்லும் அரங்கு தேவை. விழாக்களில் அது அமைவதில்லை. பெருந்திரளிலும் அமைவதில்லை. உள்ளரங்குகளே உகந்தவை. எனக்கு அரங்கின் கண்கள் தேவைப்படுகின்றன.  கோவையின் திரள் எனக்கு மிக உவப்பானது.

கட்டண உரை என்னும் கருத்து உருவானது ஒரே காரணத்தால்தான், ஓர்இலட்சியஅரங்கை உருவாக்க. அங்கே நான்முழங்குவதில்லை’ . அறுதியாக எதுவும் சொல்வதுமில்லை. அது ஒருவகை கூட்டுச் சிந்தனைதான். அங்கே பங்குகொள்பவர்களுக்கு என்னுடன் சேர்ந்து சிந்திக்கும் அனுபவமே அமையும். அதில் என் உறுதிப்பாடுகளுக்கு பதிலாக கேள்விகளும் கண்டடைதலும் முன்னகர்தலுமே இருக்கும்.  

அப்படி ஓர் அரங்கின் கூட்டுமனநிலை சட்டென்று சில வரிகளை ஒளிமிக்கதாக்குகிறது. இத்தகைய அரங்கில் உருவாகும் ஆன்மிக உச்சநிலைகளை, உணர்வுநிலைகளை வேறெங்கும் அடைய முடியாது. அது ஒரு நல்ல நிகழ்த்துகலை உருவாக்கும் உச்சங்களுக்கு நிகரானது. 

உரைக்குப்பின் உணவு. அதன்பின் கோகுல் வீட்டுக்கு வந்து மதியம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவுக்குப்பின் நான் பெங்களூர் விமானநிலையம் வந்தேன். அங்கிருந்து சென்னை. ஒரே நாளில் பெங்களூர் உரை போன்ற ஒரு தத்துவஅழகியல் உச்சநிலை. அதன்பின் சினிமா விவாதம், தயாரிப்பாளருடன் சந்திப்பு. நான் அந்த உரையில் முன்வைத்ததே அந்த பன்முகநிலையைப்பற்றிய என் எண்ணங்களைத்தான்.  

முந்தைய கட்டுரைநடுவே கடல்-அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி சந்திப்புகள், கடிதம்