அன்பின் ஜெ?
நலம்தானே?
“பஞ்சும் பசியும்” சமீபத்தில்தான் வாசிக்க வாய்த்தது. சோஷியலிசக் கூறுகளும், யதார்த்தவாதச் சித்தரிப்புகளும் கொண்ட ஒரு நேர்கோட்டு நாவல். வாசித்தபின் நினைவுக்காக தொகுத்துக் கொண்டேன்.
1940-களின் அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்). ஊருக்கு நடுவில், சந்நதித் தெருவும், கீழ, மேலத் தெருக்களும் சங்கமிக்கும் இடத்தில் லோகநாயகி அம்மன் கோயில். முகப்பில் விசாலமான கல்மண்டபத்தில்தான் “வள்ளுவர் வாசக மன்றம்” போர்டு தொங்குகிறது (ஆகஸ்டு புரட்சிக்குப் பின் ஆரம்பித்தது). அங்கு மாலை வேளைகளில் செய்தித்தாள்கள் படிக்கக் கிடைக்கும். அருகிலேயே மூப்பனாரின் சிறிய வெற்றிலை பாக்குக் கடை. ஊர் முழுவதும் பிரதானமாக கைத்தறி நெசவாளர் சமூகம்.
தாதுலிங்க முதலியார் ஊரின் பெரு முதலாளி. செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர் (எந்த வழியிலும்). வீட்டில் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். ஊரின் மிகப்பெரிய “தனலட்சுமி ஸ்டோர்ஸ்” அவருடையதுதான். அவரின் மனைவி தர்மாம்பாள். அவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் கமலாவிற்கு 20 வயதாகிறது. மகன் இளைஞன் சங்கர் பொதுவுடமைச் சிந்தனைகளில் ஆர்வமுடையவன். அப்பாவிற்கும் மகனுக்கும் சித்தாந்த அளவில் கடும் கருத்து முரண்பாடுகள் உண்டு. சங்கரும் கமலாவும் நகரில் கல்லூரியில் படிக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்க, கீழ் நிலையிலிருந்த கைலாச முதலியார், தாதுலிங்க முதலியாரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி முதல் போட்டு வணிகத்தில் சிறிது சிறிதாக முன்னேறுகிறார். நாணயமானவர். கைத்தறி நெசவாளர்களின் கஷ்டங்கள் அறிந்தவர். தீவிர முருக பக்தர். அவர் மனைவி தங்கம்மாள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மணிக்கு 23 வயது. இளையவன் ஆறுமுகத்திற்கு 10 வயது. மணியும், சங்கர், கமலா படிக்கும் கல்லூரியில்தான் படிக்கிறான். மணியும், கமலாவும் காதலிக்கிறார்கள்.
சுப்பையா முதலியார், தாதுலிங்க முதலியாரின் உறவினர். ஊரில் என்ன நடக்கிறதென்று முதலாளிகளுக்கு துப்பு கொடுப்பவர். மைனர் அருணாச்சல முதலியார், கோயில் தர்மகர்த்தா. கோயில் கணக்கு வழக்குகளில் தகிடுதத்தங்கள் செய்பவர்; தாதுலிங்கத்தின் நண்பர். வடிவேலு முதலியார் நெசவாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்; ஓரளவு படிக்கத் தெரிந்தவர். இருளப்பக் கோனார், கைலாச முதலியாரிடம் வேலை செய்கிறார். அவரின் மனைவி மாரியம்மா. மகன் வீரையா சிறுவயதிலேயே ஒரு சம்பவம் காரண்மாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறான்.
ஜவுளி ஏற்றுமதிக்கு தடை வருகிறது. அரசின் தவறான ஜவுளிக் கொள்கையால், நெசவாளர்களின் நிலைமை படு மோசமாகிறது. எங்கும் பசி, பஞ்சம், பட்டினி, தற்கொலைகள். கைலாச முதலியார் நொடித்துப் போகிறார். நெசவாளர்களின் வாழ்வில் சூறாவளி வீசுகிறது.
***
“விஷக்கன்னி“-யின் கீற்று இந்நாவலிலும் ஓரிடத்தில் இருந்தது…
கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருளப்ப கோனார் தவித்துக்கொண்டிருந்த இந்த வேளையில்தான் மேற்கு மலைத் தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒரு கங்காணி கூலிக்கு ஆள்பிடிக்க வந்தான். இருளப்ப கோனாருக்கு தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்யச் சென்றவர்களின் கதியைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். மருதுத் தேவரின் மகன் மாடசாமித் தேவர் நாலு வருஷங்களுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கு பட்ட அடி உதைகளால் வர்மத்தில் விழுந்து பிறந்த மண்ணில் வந்து மண்டையைப் போட்டதும், அமாவாசிக் குடும்பனின் மனைவி சுடலி, மலைக்குச் சென்று தேயிலை கிள்ளிப் பிழைத்ததும், அங்கிருந்து உடம்பெல்லாம் அழுகி வடியும் மேகத் தொழும்புப் புண்கள் பெற்று, வேலையை இழந்து திரும்பி வந்ததும், வாசுதேவநல்லூர் ரோட்டுப் பாதையில் அவள் பிச்சையெடுத்துப் பிழைத்ததும், அழுகி நாற்றமெடுத்துச் செத்ததும் அவருக்கு மறந்துவிடவில்லை. இன்னும் இவர்களைப்போல் தேயிலைக் காட்டுக்குச் சென்று மலைக் காய்ச்சல் பெற்று, ‘ஆஸ்பத்திரி மருந்து‘ என்னும் பச்சைத் தண்ணீரைக் குடித்து பரலோகம் சென்ற அப்பாவிகளையும் அவர் அறிவார். மேற்கு மலை தேயிலைத் தோட்டம், வெள்ளை முதலாளிகளும், உள்நாட்டு முதலாளிகளும் ஒன்றுசேர்ந்து கொள்ளையடிக்கும் ஒரு வேட்டைக்காடு
“நாமக்கல் ஏகாம்பர முதலியார் என்னும் கைத்தறி நெசவாளி பிழைப்புக்கு வழியில்லாமல் பதினைந்து நாட்களுக்கு மேல் பட்டினி கிடந்து இன்று காலமானார்” என்ற செய்தியை தினசரியில் படிக்கிறார் கைலாச முதலியார். ‘கொஞ்ச நாட்களாகவே இப்படிப்பட்ட செய்திகளைத்தான் அவர் பத்திரிகைகளில் படித்து வருகிறார். அன்றொரு நாள் ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மனைவி பசிக்கொடுமை தாங்காது தன் இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் விழுந்து இறந்ததாக அவர் செய்தி படித்தார்; மற்றொரு நாள் காஞ்சிபுரத்தில் இருபத்தி ஐந்து வயது நெசவுத் தொழிலாளி ஒருவன் வறுமையின் காரணமாக பட்டினி கிடந்து மாண்டதாகப் படித்தார்; இன்னொரு நாள் வேறொரு கைத்தறித் தொழிலாளி ரோட்டடிச் சாலைப் புறத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தொங்கி தற்கொலை செய்துகொண்டதை வாசித்தறிந்தார்; குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்கமுடியாத தாயொருத்தி தன் பிள்ளையை ஒன்றரை ரூபாய்க்கு விற்றுவிட்ட பாரிதாபக் கதையையும் அவர் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது.’
***
சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அறுபதுகள்/எழுபதுகள் வரையிலான நாவல்களைப் படிக்கும்போது, அதில் பதியப்பட்டிருக்கும் பல வாழ்வுகளை அறியும்போது, நம் முந்தைய முந்தைய தலைமுறைகளின் பாடுகளையும், கண்ணீர்களையும், சோகங்களையும் உணரும்போது மனம் கனத்து மூழ்கி விடுகிறது. நிகழ்காலத்தின் எச்சிறு குறையையும், புகாராக வாழ்வின் முன் முறையிட நாம் கொஞ்சமேனும் சங்கோஜப்பட வேண்டாமா?.
நடந்து முடிந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இயல் கடைசி நாளில்தான் அவசர அவசரமாகச் சென்றுவர முடிந்தது (ஜனவரி 17 வரை இங்கு கென்யாவில் இருந்தார்). செந்திலையும், மீனாம்பிகையையும் அவசர அவசரமாக விஷ்ணுபுரம் ஸ்டாலில் சந்தித்திருக்கிறார்.அகநியில் ட்டி. டி. ராமகிருஷ்ணனின் “மாதா ஆப்பிரிக்கா” நாவலை (தமிழ் மொழிபெயர்ப்பு – குறிஞ்சி வேலன் ஐயா) கண்டிப்பாக வாங்கி வைக்கச் சொல்லியிருந்தேன். விரைவில் வாசிக்க ஆர்வமாயிருக்கிறது. அதில், அறிய, இன்னும் எத்தனை எத்தனை வாழ்வுகள் பதிந்திருக்கின்றனவோ?.
வெங்கி
“பஞ்சும் பசியும்” (நாவல்) – தொ. மு. சி. ரகுநாதன்
NCBH/பாரதி புத்தகாலயம்