அஞ்சலி: பி.வி.டோஷி

சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த கட்டிடக்கலைப் பேராசான் பி.வி.டோஷி அவர்கள் நேற்று (24.01.23) காலமானார். ‘பி. வி. டோஷி’ என அழைக்கப்படும் ‘பால்கிருஷ்ணா விதால்தாஸ் தோஷி’ தலைசிறந்த கட்டிடக்கலை அறிஞர். இவர் இந்தியக் கட்டிடக்கலையின் முக்கியமான ஆசானாகவும் மேதையாகவும் உலகளவில் கருதப்படுகிறவர். மேலும், இந்தியாவில் கட்டிடக்கலை சார்ந்த சொற்பொழிவுகளின் பரிணாம வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை. உலகக்கட்டிடக்கலை மேதைகளான ‘லே கார்புசியர்’ மற்றும் ‘லூயிஸ் கான்’ ஆகியோரிடமிருந்து நேரடியாகக் கற்றடைந்துள்ளார். இந்தியாவில் நவீனத்துவ மற்றும் Brutalist Architecture என்னும் கட்டிடக்கலைப்பாணியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

கட்டிடக்கலைக்காகத் தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, அக்கலையின் தனித்துயர்ந்த அடையாளமாக விளங்குகிற கட்டிடக் கலைஞர்களை கெளரவிப்பதற்காக, ‘பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு’ (The Pritzker ArchitecturePrize) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கட்டிடக்கலைமூலம் மனிதகுலத்திற்கும் கட்டப்பட்ட இயற்கைச் சூழலுக்கும் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க நற்பங்களிப்புகளை உருவாக்கியுள்ளவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதால், இது உலகின் முதன்மையான கட்டிடக்கலை பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இது ‘கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு’ எனக் கருதப்படுகிறது. டோஷி, இந்த விருதைவென்ற முதல் இந்தியர் ஆவார்.

பஞ்சாபின் புதியமாநிலத் தலைநகரான சண்டிகரின் வடிவமைப்பு பி.வி. தோஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது (சண்டிகர் இப்போது பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுமாநிலத் தலைநகராகசெயல்படுகிறது). இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்களுக்கான வாழிடங்களை வடிவமைக்கும் பணியை அரசு இவரிடத்தில் ஒப்படைத்தது. மிகச்சிறந்த, அடிப்படை மற்றும் குறைந்தவிலையில் கட்டமைப்பு வாழிடங்களை உருவாக்குவதில் தோஷி அவர்கள் தொடர்ந்து ஆர்வங்காட்ட இவ்வாய்ப்பு வழிவகுத்தது.



1960-களில் தோஷி அகமதாபாத்தில் ஒரு கட்டிடக்கலை கற்றல்பள்ளியை (TheSchool of Architecture – Ahmedabad) தானுருவாக்கிய  மாற்றுப் பாடத்திட்டத்துடன் திறந்தார். 1972 முதல் அந்த கல்விமையம் ‘சுற்றுச்சூழல்திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ (Centre for Environmental Planningand Technology – CEPT) என அறியப்படுகிறது. லூயிஸ் கான் இதில் ஆரம்பகால ஆசிரிய உறுப்பினராகப் பணியாற்றினார். ஏழு தசாப்தங்களாக நீடித்த கட்டிடக்கலையை தனது வாழ்க்கையாகக்கொண்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்ககட்டிடக் கலைஞர்களில் ஒருவராக இருந்தவர் பி.வி.தோஷி. இவர் சர்வதேச மரபுக்கொள்கைகளை உள்ளூர் மரபுகளுடன் இணைத்து இயற்கைச்சூழலுக்கு உகந்தவாறு உயரழகுக்கட்டிடங்களை வடிவமைத்தார்.

இவர் ஆகஸ்ட் 26,1927ல் புனேவில் பிறந்தார். 11 வயதாக இருக்கும்போது, அவர் ஒரு தீவிபத்தில் பலத்த காயமடைந்தார், வலதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய நடையில் சிறுதளர்வு நிரந்தரமாகிப்போனது. மும்பையில் உள்ள Sir J.J.School of Artல் 1947 – 1950க்கு இடைப்பட்ட கல்வியாண்டுகளில் பயின்றார். குறைந்தசெலவில் உலகத்தரத்திலான வாழ்விடங்களை உருவாக்கியமைக்காக, இவர் உலகக் கட்டிடக்கலை ஆளுமைகள் அனைவராலும் போற்றிப்புகழப்படுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச்சின்னங்கள், அத்துடன் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கட்டிடக் கலைஞர்களின் பணியால் இவர் ஈர்க்கப்பட்டார்.

2020ம் ஆண்டின் பத்மபூஷண் விருது பி.வி.டோசிக்கும் அளிக்கப்பட்டது.  1976லிலேயே இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுவிட்டது. 2007 ல் Global Award for Sustainable Architecture விருது, பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், Aga Khan Award for Architecture உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை தன்னுடைய துறைசார் அர்ப்பணிப்புக்காகப் பெற்றுள்ளார் இவர். மும்பையில் உள்ள Indian Instituteof Architectsலும் இவர் கெளரவப் பதவிகளில் பொறுப்புவகித்தார்.

பெருந்தொற்றுக் காலத்தில் குக்கூ நண்பர்கள் முன்னெடுத்த இணையவழி உரையாடல் வரிசையில், கட்டிடக்கலை பேரறிஞரான பி.வி.டோஷியும், கட்டிடக்கலை வல்லுநர் நீல் கண்ட் சாயாவும் பகிர்ந்துகொண்டவை அனைத்தும் மிக முக்கிய ஆவணம் என்றே கருதத்தக்கவை.

பி.வி. தோஷி அவர்கள் உலகின் தலைசிறந்த மூத்த கட்டிடக்கலை ஆசானாக உலகம் முழுக்கத் தன்னுடைய கலைசார் பங்களிப்பை நல்கியுள்ளார். “கட்டிடங்கள் என்பவை ஒருபோதும் உயிரினத்திலிருந்து வேறுபட்டவை அல்ல, அவைகளும் உயிரினங்களுக்குச் சமமானவை. நீங்கள் வடிவமைக்கும்போது, அவை மரங்களையும் பறவைகளையும் போல சுவாசிக்க வேண்டும், பேச வேண்டும், பாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்… நீங்கள் உங்கள் சுயத்தில் நின்று யோசிக்கையில் அனைத்தும் சாத்தியமாகும்…” என்றுரைத்த மூதறிஞரின் வாழ்வனுபவச் சொற்கள், ஒரு வைத்திய ஆசான் தன் சீடர்களுக்கு விட்டுச்செல்லும் சிகிச்சைக்குறிப்புகளைப் போல சமகால இளையோர்களுக்கு அதிமுக்கியமானவை.

கட்டிடக்கலை மூதறிஞர் பி.வி.டோஷிக்கு நம் அஞ்சலிகள்!

~
குக்கூகாட்டுப்பள்ளி,
புளியானூர்கிராமம்,
ஜவ்வாதுமலை அடிவாரம்

முந்தைய கட்டுரைதமிழ்விக்கியின் உலகம்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கடிதம்