அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று.
எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று கற்றுக்கொடுங்கள் ஜெ.
பொறுமையாக ஆழ்ந்து வாசிக்கிறேன் ஆனால் அது கதையாகவும் அப்போது எழுந்த உணர்வாகவும் மட்டுமே நினைவில் எஞ்சிகிறது. உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் வாசகன்.
ஞானசேகரன்
***
அன்புள்ள ஞானசேகரன்,
விரைவு வாசிப்பு என்பது உலகமெங்கும் ஒரு கலையாகவே பயிலப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று அது. உண்மையில் இன்று நாம் தொடர்ச்சியாக விரைவு வாசிப்பை செய்துகொண்டேதான் இருக்கிறோம். தொழில்முறை மின்னஞ்சல்கள், சமூகவலைத்தளப் பதிவுகளை மிக வேகமாகவே வாசிக்கிறோம். அறிவிப்புகளை நாம் வாசிக்கும் வேகத்தை எண்ணிப்பாருங்கள். சென்ற தலைமுறையினர் அவற்றை வாசிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
விரைவு வாசிப்புக்கு சில தேவைகள் உள்ளன. சில பயிற்சிகளும் உள்ளன. சில அடிப்படை வேறுபாடுகளும் உள்ளன.
தேவைகள்
அ.துறைசார் ஈடுபாடு. அதற்கான தேர்ச்சி. ஒரு துறையில் வாசிப்பதற்கு அதற்கான ஈடுபாடு நமக்கிருக்கவேண்டும். நான் கணிப்பொறியியல் சார்ந்த ஒரு கட்டுரையை வாசிக்கமாட்டேன். ஈடுபாடே இல்லை. ஆனால் கட்டுமானப் பொறியியல் சார்ந்த ஒரு கட்டுரையை விரும்பிப் படிப்பேன். ஆனால் அதில் தேர்ச்சி இல்லை. இலக்கியம், தத்துவம், மெய்யியலில் தேர்ச்சி உண்டு. ஆகவே கட்டுமானத்துறை கட்டுரையை அத்தனை வேகமாக வாசிக்கமுடியாது. இலக்கியக் கட்டுரையை விரைவாக வாசிப்பேன்.
ஆ. கவனம். வேகமான வாசிப்புக்கு அடிப்படைத்தேவைகளில் கவனம் முக்கியமானது. கவனம் சிதறும் மன அமைப்பு நமக்கிருந்தால், சூழல் இருந்தால் வேகமாக வாசிப்பது கடினம் . கவனத்தை உருவாக்கிக்கொள்வதெப்படி என பயிலவேண்டும்.அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். கவனம் சிதறுவதற்கு எதிராக தற்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
சிலருக்கு கவனமான வாசிப்புக்குரிய மேலதிகப் பயிற்சிகள் தேவைப்படலாம். அவை ஒவ்வொருவருக்கும் ஒன்று. சிலருக்கு கேள்விப்புலன் கூர்மையாக இருக்கும். வாசிக்கும்போதே அதன் ஒலியும் சேர்ந்து வந்தால் விரைவாக வாசிப்பார்கள். சிலருக்கு வாசிப்பவற்றை அவ்வப்போது எழுத்தில் தொகுத்துக்கொண்டால் விரைவான வாசிப்பு அமையும். அவரவர் வழியை அவரவரே கண்டடையவேண்டும்
கவனமான வாசிப்புக்கு தடையாக அமைவன சில உண்டு. வெவ்வேறு விஷயங்களை வாசிக்கையிலேயே இணைத்துச் சிந்தித்தல், வாசிப்பவற்றுடன் முரண்பட்டபடியே வாசித்தல் போன்றவை. வாசிப்பும் யோசிப்பும் சேர்ந்து செய்யப்படலாகாது.
பயிற்சிகள்
அ. மொழிப்பயிற்சி. விரைவான வாசிப்புக்கு மொழிப்பயிற்சி இன்றியமையாதது. பொதுவான மொழிப்பயிற்சி, துறைசார் தனிமொழிப்பயிற்சி என அது இருவகை. மொழிப்பயிற்சி தொடர் வாசிப்பால் தானாகவே அமைவது. கூடுதலாக சில செய்முறைகள் உண்டு. உதாரணமாக, கண்ணில்படும் அரிய சொற்களை பொருள் உணர்ந்தபின் தனியாக அகரவரிசையில் ஒரு குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளலாம். ஒவ்வொருமுறையும் அகராதி பார்ப்பதை விட இது எளிது. ஒரு சொல்லை அவ்வண்ணம் எழுதி பலமுறை பார்த்தால் நாளடைவில் மொழிப்பயிற்சி எளிதாகிவிடும்.
ஆ. குறிப்புப் பயிற்சி. பலசமயம் விரைவான வாசிப்பு நிகழாமைக்குக் காரணம் வாசித்தவை புரிபடாமல் இருப்பது. அதற்கு சிறந்தவழி வாசித்தவற்றை குறிப்புகளாகத் தொகுத்துக் கொள்வது. குறிப்புகள் எழுதிக்கொள்வதற்குச் சில அடிப்படைகள் உள்ளன. அவற்றை பயில்வது நல்லது. (உதாரணமாக குறிப்புகள் ஓர் அட்டவணை, ஒரு வரைபடம் வடிவில் இருக்கவேண்டும். எப்போதுமே அவை முழுமையான சொற்றொடர்களாக அமையவேண்டும். அவற்றில் முதன்மைச் சொற்கள் இருந்தாகவேண்டும்)
இ. பார்வைப்பயிற்சி. சிலர் வரிகள் வழியாக விழியோட்டி வாசிப்பார்கள். அது வாசிப்பை வேகம்கொள்ளச் செய்ய பெரிய தடை. வரிகளின் நடுப்பகுதியை மட்டுமே பார்த்து வாசிக்கவேண்டும். வாசிக்கையில் வாய்க்குள் சொல்லிக்கொள்வது, உள்ளத்துள் சொல்லிக்கொள்வது கூடாது. வாசிப்பதென்பது எழுத்துக்களை பார்ப்பதுதான்.
வேறுபாடுகள்
அ. விரைவான வாசிப்பு என்பது கவனமற்ற வாசிப்பல்ல. பலர் வேகமாகத் தத்திச்செல்வதை விரைவு வாசிப்பு என்று சொல்கிறார்கள்
ஆ. விரைவு வாசிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாசிப்பதல்ல. எல்லாவற்றையும் வாசிப்பதுதான்
இவையெல்லாம் ஒருவருக்குச் சொல்லித்தரக்கூடியவை. ஆனால் ஒரு பயிற்சியமர்வு மிக எளிதாக இவற்றைக் கற்பிக்கக்கூடும். நான் 1993ல் ஒரு பயிற்சியை மேலைநாட்டு தொழில்முறைப் பயிற்சியாளர் ஒருவரிடமிருந்து எடுத்துக்கொண்டேன். மேலைநாடுகளில் தொழில்முறையாகவே இவற்றைக் கற்பிப்பவர்கள் உள்ளனர். இங்கும் செய்துபார்க்கலாம்.
ஜெ