புத்தகக் கண்காட்சி – கடிதம்

சென்னை புத்தகக் கண்காட்சி

இனிய ஜெயம்

புத்தகச் சந்தை குறித்த உங்கள் பதிவில் கடலூரில் அரசு முன்னெடுப்பில் புத்தக சந்தை நடந்தது போல குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எந்த நகரத்திலும் புத்தக சந்தை நடைபெறவில்லை. நான் உங்களுக்கு அனுப்பிய புகைப்படம் புதுவையில் அந்த அரசு சிறிய அளவில் நடத்தும் புத்தக சந்தையில் எடுக்கப்பட்டது.

புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இன்னும் அடுத்த முப்பது வருடத்துக்கு தமிழக பெருமிதம் என்று சொல்லிக்கொள்ளும் வகைக்கு எந்த பண்பாட்டு நிகழ்வையும் புதுவை அரசு நிகழ்த்தாது. கடமைக்கு ஒரு சிறிய மண்டபத்தில் அந்த அரசு எடுக்கும் வருடாந்திரா விழா அது. சுற்றி உள்ள எல்லா ஊரிலும் உள்ள பொது ஜனம் பிற கேளிக்கைகள் பள்ளி கல்வி கடந்து புத்தக வாசிப்பு என்ற ஒன்று உண்டு என்பதை தெரிந்து கொள்ள இப்போதைக்கு இங்கே உள்ள ஒரே இடம் இது.

தொடர்ந்து நடைபெற்று வந்த நெய்வேலி புத்தக விழாவும்  நின்று மூன்று வருடம் ஆகிறது. இந்த பகுதியில் புத்தக விழாக்கள் நடத்த முதல் சிக்கல் இங்கே பொது வாசகர் என எவருமே இல்லை என்பதே. எவர் எப்படி முயன்றாலும் விழாவுக்கு வரும் பதிப்பாளர்கள் நஷ்ட கணக்குடன்தான் திரும்ப நேரிடும்.

எங்கே சிக்கலோ அங்குதான் அதை தீர்க்கும் வழிமுறைகளும் நடைபெற வேண்டும்புத்தக விற்பனையாளர்கள் லாபம் அடைகிரார்களோ இல்லையோ, நஷ்டம் அடையா வண்ணம் ஏதும் வழி வகை சேய்ய முடிந்தால் இந்த பகுதிகளில் புத்தக விழாக்களை தொடர்ந்து நடத்த முடியும்

அந்த வழி வகைகளை அரசு போன்ற பெரு முதலீடு அளிக்க முடிந்தவர்கள்ளால் மட்டுமே செய்ய முடியும். இந்த அரசு வரும் ஆண்டுகள் முதல் கடலூர் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு நகரை கவனத்தில் கொள்ளலாம். என் பரிந்துரை சிதம்பரம். மயிலாடுதுறையில் இந்த ஆண்டு புத்தக சந்தையை நடத்தி இருக்கிரார்கள் அதை அடுத்த வருடம் அங்கே முடிந்ததும் சிதம்பரத்துக்கும் நீட்டிக்கும் வழி வகையை யோசிக்கலாம்.

இங்கே புத்தக வாசிப்பு குறித்த போதம் குறைவாக மற்றொரு முக்கிய காரணம், இங்குள்ள போன தலைமுறை வாசிப்பு சூழல் பெரிதும் பாரதிதாசனாலும் பின்னர்  திராவிட தமிழ் அலையாலும் உருவானது. அதிலிருந்து வாசிப்பின் மீது காதல் கொண்ட அடுத்த தலைமுறை எழ வாய்ப்பே இல்லாமல் ஆகிப்போனது.

இனிதான் இங்கு பொது மற்றும் இலக்கிய வாசிப்பு சார்ந்த அரிச்சுவடியையே துவங்க வேண்டும்.  (கடலூரில் புதுவையில் நாங்கள் செய்வது எல்லாம் அதை நோக்கிய முதல் எட்டி வைப்பு மட்டுமே.) அதற்கு நெல்லையில் சென்னையில் நடந்தது போல அரசு ஆதரவுடன் சிறிய சிறிய நூல் வெளியீட்டு விழாக்கள் அப்போது அந்த நூல்கள் சார்ந்த பேச்சுக்கள் இவை போன்றவை தொடர்ந்து நிகழ வேண்டும். அதன் தொடர்ச்சி வழியாகவே இந்த பகுதி புத்தக விழாக்களில் புத்தக விற்பனையை உயர்த்த முடியும். நோய் உள்ள இடத்தில்தான் வைத்தியம் தேவை. இங்கேதான் தொடர்ந்து அடுத்த பத்து வருடங்களுக்கு புத்தகம் குறித்த விழாக்களும் பேச்சுகளும் சந்தைகளும் தேவை. இது அரசு உதவி வழியாக மட்டுமே நிகழ முடியும். இந்த அரசு இந்த சொல்லையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅஞ்சலி: பி.வி.டோஷி
அடுத்த கட்டுரைகுருகு புதிய இணையதளம்