அழைப்பை எதிர்நோக்கியா?

திரு ஜெமோ

நீங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் மட்டும் தமிழ்நாட்டு அரசை நான்கு காணொளிகளில் புகழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களை எந்த இலக்கியவிழாவிலும் அவர்கள் அழைப்பதில்லை. அழைக்கவும் போவதில்லை. இலையை போட்டுக்கொண்டு நீங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என் அனுதாபங்கள்.

Reality Hunter

***

அன்புள்ள Reality Hunter,

வேட்டை சிறப்புற வாழ்த்துக்கள்.

நான் 1988ல் எழுத வந்தபோது என்னிடம் சுந்தர ராமசாமி சொன்னார். ‘தமிழ் பொதுவாசிப்புக்  களத்தில் சாதி ஒரு முக்கியமான கணக்கு. நீங்கள் அன்னியர். மலையாளி. ஆகவே உங்களுக்கு சிற்றிதழ்ச்சூழலுக்கு வெளியே ஏற்பு அமையாது. பல்கலைக் கழகங்களின் அழைப்புகள், விருதுகள், அரசாங்க அங்கீகாரம் கிடைக்காது. அந்த எதிர்பார்ப்பு இருந்தால் இப்போதே கழற்றி வைத்துவிடுங்கள்’.

என் முதல்நூல் வெளியானபோது பின்னட்டையில் என் தாய்மொழி மலையாளம் என்றே குறிப்பிட்டேன். என்னிடம் பலர் அது மிகப்பெரிய பிழை, என்னை முற்றிலுமாக அன்னியப்படுத்திவிடும் என்றனர். எனக்கு எப்போதும் ஒளிக்க ஒன்றுமில்லை, என் ஆளுமையை முழுக்க முன்வைக்கவே வந்தேன் என்று நான் பதில் சொன்னேன். எப்போதுமே அந்த அடையாளத்துடனேயே இருந்து வருகிறேன். தொடர்ச்சியாக வசைகள் என் மலையாளப்பின்னணி சார்ந்து வருகின்றன. நான் அவற்றை பொருட்டாகக் கருதுவதில்லை. பொருட்படுத்துபவர்கள் என் வாசகர்களும் அல்ல. அவர்களும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல.

ஆனால் மலையாளத்தில் ஒருபோதும் என் சாதி – மொழி அடையாளத்தை முன்வைப்பதில்லை. திட்டவட்டமாக ‘தமிழ் எழுத்தாளர்’ என்றே குறிப்பிடுவேன். மலையாளத்தில் எழுதுபவர் என்றுகூட சொல்லிக் கொள்வதில்லை. மலையாளப்பண்பாட்டின் எந்த அம்சத்தையும் தமிழுடன் ஒப்பிட்டு, தமிழின் தரப்பில் நின்று விமர்சிக்க தயங்கியதில்லை. அண்மையில் கோழிக்கோடு இலக்கிய விழாவில் ஒரு கேள்வி. அதில் யானைடாக்டர் மலையாள வடிவில் யானைடாக்டர் ‘காட்டில் நுழையும் மலையாளி ஒரு பொறுக்கி’ (செற்ற) என்று சொல்வதை பற்றி கேள்வி எழுப்பினார். ‘அது உண்மைதான், அந்த உண்மையைச் சொல்லாமல் இருப்பது என் இயல்பு அல்ல’ என்று பதில் சொன்னேன். எந்த மழுப்பலும் எங்கும் இல்லை. தமிழ் எழுத்தாளன், தமிழ்க் கதாபாத்திரத்தைக் கொண்டு மலையாளியை வசைபாடுகிறான் என ஒருவர் எண்ணினால் அவர் என் வாசகர் அல்ல, அவ்வளவுதான்.

எனக்கு கிடைத்திருக்கும் வாசகர்கள் என்னுடைய இந்த தயங்காமையின், வெளிப்படைத்தன்மையின், உணர்ச்சிகரத்தின் மேல் ஈடுபாடு கொண்டு என்னை அணுகுபவர்கள்தான். அவர்களுக்கு என் சிக்கல்கள், தயக்கங்கள், குழப்பங்கள் தெரியும். நான் உறுதியான நிலைபாடுகளில் தேங்கிவிட்டவன் அல்ல. தொடர்ந்து சிந்தித்துச் செல்லும் எழுத்தாளன். கற்பனை, உணர்ச்சிகரம், ஊழ்கம் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டவன். ஆகவே பிழைகளும் நிகழும் என அறிந்தவனே என் வாசகன். என் பிழைகளை என் வாசகனளவுக்கு எதிரிகள்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் கோவை விழாவுக்கு வந்த கீதா ராமசாமி சொன்னார். என் வாசகர்களின் திரள் இந்தியச் சூழலில் ஒரு பெருநிகழ்வு என. ஆங்கிலத்தில் எழுதும் எவரும் அதை அடைய வாய்ப்பே இல்லை என. அது உண்மை. அது தொடர் உரையாடல் வழியாக உருவாவது. ஒவ்வொரு நாளும் என் வாசகர்களுடன் நானும் இருந்துகொண்டிருக்கிறேன்.

நான் இன்று இனி எத்தனை ஆண்டுகள் என கணக்கிடும் இடத்தை அடைந்துவிட்டேன். என் கனவுகள் பெரியவை. ஆகவே இனி கசப்புகள், காழ்ப்புகள், வம்புகளுக்கு இடமில்லை. சிறியவற்றுக்கு அளிக்க நேரமே இல்லை. கணக்குகளும், எதிர்பார்ப்புகளும்கூட எவ்வகையிலும் பொருட்டல்ல.

இந்நாள் வரை எனக்கு கிடைத்துள்ள ஏற்புகள் நான் எழுதி உருவாக்கிக் கொண்டவை. இன்று நான் விருதுகள் வழங்குபவனாக இருக்கிறேனே ஒழிய எதிர்பார்ப்பவனாக அல்ல. அரசுகள், கல்வியமைப்புகள் எனக்கு இன்று ஒரு பொருட்டு அல்ல. நீங்கள் சொல்வது உண்மை. அரசுகளின், அமைப்புகளின் கணக்குகளில் சாதி, இனம், மொழி, அரசியல் கணக்குகள் உள்ளன. ஆனால் அவை எப்போதுமே உண்டு. எழுத்து வாழ்வது அதற்கு அப்பால் வாசகர்களின் கவனத்தில்தான்.

உங்கள் கடிதமே சொல்லுகிறது நீங்கள் யார் என்று. திமுகவின் அடிநிலை இணையப்பிரச்சாரர்கள் ஒருவகை பதற்றத்தில் இருக்கிறீர்கள் என தெரிகிறது. சரி, உங்கள் திருப்திக்காக நானே அறிவித்துவிடுகிறேன், அரசின் எந்த இலக்கியவிழாவிலும் கலந்துகொள்ளப் போவதில்லை. அவர்களுக்கும் எனக்கும் சங்கடமில்லை. உங்களுக்கும். சரியா?

ஜெ

முந்தைய கட்டுரைவேட்டையின் கதைகள்
அடுத்த கட்டுரைசுவாமிநாத ஆத்ரேயன் -கடிதம்