பாகுலேயன்பிள்ளை,நான்,அஜிதன் – கடிதங்கள்

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்

அன்புள்ள ஆசிரியருக்கு 

வணக்கம். நான் கடந்த 25 வருடங்களாக தங்களை, தங்கள் நூல்களின், இணைய தளத்தின் வழியாக தொடர்பவன். தங்களுக்கு கடிதம் எழுத பலமுறை முயற்சித்து, தயக்கத்தினால் விட்டுவிட்டேன்.எனவே இது நான் தங்களுக்கு அனுப்பும் முதல் கடிதம்

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்கட்டுரை ஒரு அற்புத மந்திர சாவியாக பல திறப்புகளை, ஒரு ஆண் குழந்தையின் தகப்பனான எனக்கு அளித்தது.

நான் என் மகனிடம் (இப்போது அவனுக்கு ஏழு வயது) ஏன் மிக கடுமையாக நடந்து கொள்கிறேன்? ஏன் அவனிடமிருந்து அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேன்? அவன் தவறு செய்யும் போது ஏன் நான் கரிசனங்காட்டுவதில்லை? அடுத்தவர் முன்னிலையில் ஏன் அவனை பாராட்டுவதில்லை? அடுத்தவர் அவனை பாராட்டினால் நான் ஏன் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகி விடுகிறேன்? இப்படி பலஏன்கள். இத்தனைக்கும் அவன் பல திறமைகளை வெளிக்காட்டி கொண்டிருக்கிறான். அப்படியும் என் மனது சஞ்சலபடுகிறது

இதெற்கெல்லாம், மேற்கண்ட தங்களுடைய கடிதம் அருமையான பதிலை தந்துள்ளது. நன்றிமேலும், தங்களின் பதில்ஆனையில்லாகதைக்கு புதிய பரிமாணத்தை கொடுத்ததை வாசித்து துணுக்குற்றேன்

சரிதான். யானை அதற்கான பெருங்காட்டை கண்டுகொண்டு அதில் அரசாள வேண்டும். அதை விடுத்து, இல்லற மற்றும் இதர சில்லறைகளில் மாட்டி கொண்டால், அந்த யானை படும் அவஸ்தை இந்த உலகத்திற்கு பெருங்களிப்பான கொண்டாட்டம் தான்.

நன்றி.

பவுல் ராஜ் 

கமுதி, ஐதராபாத் 

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம், நீண்ட இடைவெளிக்குப்பின் எனது இந்தக் கடிதம்; நலம் பிரார்த்திக்கிறேன்

உங்களின் தந்தையைப் பற்றிய எந்த ஒரு பதிவையும் (கட்டுரை / கதைகள்)  மனம் நெகிழாமல் படிக்க முடிந்ததில்லைமகனாக  தந்தையைப் பற்றி எழுதியவற்றை தாண்டி,  தானும் ஒரு தந்தை என்ற இடத்திலிருந்து தங்களின் தந்தையை அவதானித்தது இன்றைய பதிவுநிச்சயம் ஒரு படி மேல்தான்.  

தன்னை மகன் சரியாகப் புரிந்து கொண்டான் என்பதும் தங்கப்பன் நாயரை சின்னக்குழந்தையாக மாற்றும் மந்திரம் அல்லவா ?

நன்றி,

வெ கண்ணன்

பெங்களூர்.  

அன்புள்ள ஜெயமோகன்;

என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரியை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன் திருத்தியிருப்பார்? அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும், மனம் சஞ்சலம் கொள்கிறது.

ஒரு வேளை ஜெயமோகனை விட நன்றாக எழுதியிருந்து, எனக்கு ஜெயமோகனைப்  பிடிக்காமல் போய்விட்டால் ? – இது கொஞ்சம் அதிகம்?புத்தகக் கண்காட்சியில் அஜிதனைப் பார்த்தேன்விஷ்ணுபுரம் நாவலை வாங்கிவிட்டு அதற்கு பணத்தை அஜிதனிடம் தான் கொடுத்தேன்.  ‘அப்பா வரவில்லையாஎன்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.  கூட வந்திருந்த என் மகனிடம், இவர் தான் ஜெயமோகனின்  மகன் என்று சொன்னதற்கு அவன்ஆராஞ்சுப் பழத்தின் சாறை மட்டும் சாப்பிட்டவர்தானே (தன்னறம்)’ என்று கேட்டான். அவன் அதை நினைவில் வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

அஜிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே தான் மைத்ரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றை வாங்கி அஜிதனிடம் கையெழுத்து வாங்கியிருந்தால் குழந்தை மகிழ்ந்திருப்பானென்று தோன்றியது. ஒருவகையில் நான் அவனுக்கு சித்தப்பாவல்லவா என்றும் தோன்றியது.   ஆனால், அஜிதன் அதெற்கெல்லாம்  அப்பாற்பட்டவராக சிரித்த முகத்துடன் இருந்தார். இன்றுபோல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டுமென மனதிற்குள் வாழ்த்தினேன்.

விஷ்ணுபுரம் இது மூன்றாவது முயற்சிஇரு முறை நூலகங்களில் எடுத்து இருபது முப்பது பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. வீட்டிலேயே கையருகில் இருந்தால் முடித்துவிடுவேனென்று நினைக்கிறேன்.  இன்னொரு பெரிய கடிதம் எழுதி பாதியில் இருக்கிறது,   அஜிதன் முந்திவிட்டார்.

அன்புடன்,

கணேசன்.

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைமுதற்கனல் அன்னையரின் கதை
அடுத்த கட்டுரைஇரா. திருமாவளவன்