அன்புள்ள ஜெ வணக்கம்…
அறத்தின் கதை
அறம் வரிசை கதைகள் வெளியான நாட்கள் தொட்டே வாசிப்பவர்களிடம் பெருஞ்சலனத்தை அகத்தூண்டலை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
பெருஞ்செல்வந்தர்களை கலைத்துறையினரை விஞ்ஞான துறையினரை அறிவுத் துறையினரை மிக சாதாரண எளிய மனிதர்களை கள செயல்பாட்டாளர்களை சூழலியலாளர்களை என சமூகத்தின் பல்வேறு தரப்பினரை அடுக்குகளை ஊடுருவி தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருப்பது அறத்தின் வாசகர் பரப்பு.
ஒரு நவீன இலக்கிய நூலுக்கு இத்தனை இலவச பிரதிகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட பெருமை நிச்சயம் வேறு எந்த நூலுக்கும் இருக்காது.உச்சகட்டமாக பாடநூலிலேயே இடம்பெற்றது.இங்கே தமிழகத்தில் மட்டுமல்ல கேரளத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அறம் வரிசை கதைகள் பல லட்சம் பிரதிகள் இலவசமாக கேரளம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது விற்பனையிலும் பல லட்சம் விற்று சாதனை படைத்துள்ளது.
மிகச் சாதாரண டீக்கடைக்காரர் ஒருவர் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில் உங்களுடன் கேரளாவிற்கு கலந்து கொள்ள சென்றிருந்தோம். டீக்கடை வாயிலிலேயே நடந்தது. நல்ல கூட்டம் வந்திருந்தது மட்டுமல்ல வந்திருந்தவர்களும் நூறு சிம்மாசனங்கள் கதையை குறித்து பெரும் உணர்வெழுச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது நான் இயற்கை அங்காடிகள் நடத்திக் கொண்டிருந்தேன் யானை டாக்டர் கதையை ஜெராக்ஸ் எடுத்து கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளருக்கும் வழங்கி இருக்கிறேன்.
50 செட் 100 செட் என அடிக்கடி ஜெராக்ஸ் எடுப்பதால் ஜெராக்ஸ் கடைக்காரர் ஆர்வமாகி அவரும் கதையைப் படித்தார். முதல் சில முறைக்கு பின் எடுத்த அத்தனை ஜெராக்ஸ்களுக்கும் அடக்க விலை மட்டுமே பெற்றுக் கொண்டார். பின்னாட்களில் அவர் சுற்றுச்சூழல் சார்ந்து செயல்படவும் செய்தார் அதற்கு இந்த கதை உந்துதலாக இருந்தது.
நூறு நாற்காலிகள் படித்துவிட்டு என் தந்தை இரவுகளில் அலறினார்.அறம் நூல் வெளியான பின்பு என் பரிசுகளில் முதலிடம் அறத்திற்குத்தான். கணக்கற்ற நண்பர்களை அறம் பரிசளித்தபின் நெருக்கமானவர்களாகியிருக்கிறார்கள். அறம் பரிசளித்து அதற்கு எதிர்வினையாக மிக அரிய பரிசுகளை பெற்றிருக்கிறேன்.
காதலை வெளிப்படுத்தி திருமணத்தை உறுதி செய்வதற்கு முன் பாவனிக்கு நான் அனுப்பிய பல்வேறு பரிசுகளில் அவர் மிகவும் மகிழ்ந்தது யானை டாக்டர் கதைக்குத்தான். பலரையும் போல மனைவிக்கும் தமிழ் தீவிர இலக்கியம் அறம் வரிசை கதைகளை வாசிப்பதில் இருந்து தான் துவங்கியது.
டாக்டர் கே சாமர்வேல் கேரிடேவிஸ் என மறைந்து போன எத்தனை மகத்தான ஆளுமைகள் எழுந்து வருவதற்கு இக்கதைகள் காரணமாய் அமைந்தன என்பதை எண்ணி வியக்கிறேன்.தென்னிந்திய மொழிகளில் பெற்ற அதே வரவேற்பினை தீவிர அகத்தூண்டலை மற்ற இந்திய மொழி பேசுவர்களுக்கும் உலகெங்கும் வாழும் பல்வேறு நாட்டினருக்கும் stories of the true ஆங்கில மொழிபெயர்ப்பின் வழி ஏற்படுகிறது என்பதுதான் அறம் வரிசை கதைகளின் பிரபஞ்சமளாவிய தண்மையை மகா தர்மத்தை தொட்டமைக்கான சான்று.
மாவட்ட ஆட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் மிகச் சிறந்த இலக்கியங்களை படைத்த அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் இக்கதைகளில் இருந்து தான் பெற்றதை சொல்லி விடவே முடியாது என்று பெரும் உணர்வெழுச்சியோடு தழுதழுக்க உங்களிடம் நன்றி தெரிவித்தார்.
இன்றைய விழா மேடையிலேயே எழுத்தாளர் களச்செயல்பாட்டாளர் பதிப்பாளர் கீதா ராமசாமி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் வாசித்ததிலேயே மிகச் சிறந்த நூல் ஸ்டோரிஸ் ஆஃப் த ட்ரூ தான் என்றார். எதேச்சையாக வாசிக்க கிடைத்து ஒவ்வொரு கதையையும் வாசித்து கடக்க குறைந்தது இரண்டு நாட்கள் ஆனது என்றார்.தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் உலகளாவிய பெரும் விருதுகள் எல்லாம் அறம் தொகுப்பிற்கு உறுதியாக கிடைக்கும் அதற்கு முன்னதாகவே வாழ்த்து கூறுகிறேன் என்றார்.
இத்தனைக்கும் முக்கிய காரணமாய் அமைந்த மிகுந்த அர்ப்பணிப்புடன் அறம் கதைகளை மொழிபெயர்த்த பிரியம்வதா அவர்கள் அ முத்துலிங்கம் அவர்களின் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகளை உயரங்களை தொடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
விழாவினை மிகச் சிறப்பாக ஒருங்கினைத்த விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் சசித்ரா தாமோதரன் அவர்களுக்கும் நன்றிகள்.
அறம் கதைகளுக்குப் பிறகு விஷ்ணுபுரம் விருது விழாவினை நெறிப்படுத்தி விரிவாக்கி முன்னுதாரண இலக்கிய விழாவாக மாற்றியிருக்கிறீர்கள். அதற்குப் பின் மாகாவியமான வென்முரசினை நிறைவு செய்திருக்கிறீர்கள்.பெருவெற்றி அடைந்த தமிழ் சினிமாக்களில் பங்களித்திருக்கிறீர்கள்.உலகமே முடங்கி கிடந்த கொரோனா காலத்தில் மகத்தான நாவல்களையும் நூறுக்கும் மேலே அழகிய சிறுகதைகளை படைத்திருக்கிறீர்கள்.தமிழ் விக்கி மற்றும் தத்துவ வகுப்புகள் தொடங்கி அதிலும் பெரு வெற்றி.
இன்றைய விழாவில் நான்காம் ஐந்தாம் வரிசையில் இந்த நிகழ்விற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு ஓரமாக இவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டு வேறு ஒரு உலகத்தில் அமர்ந்திருத்தத்தையும் கண்டேன்.
எந்தக் குறிப்பையும் பார்க்காமல் இணையத்தில் எதையும் தேடாமல் விழா முடிந்து உங்களை அறையில் விட்டு விட்டு வீடு வந்தவுடன் இதை எழுதி அனுப்புகிறேன்.நான் அதிக முறை வாங்கிய நண்பர்களித்த புத்தகங்கள் சில உண்டு ரமண மகரிஷியின் நான் யார் அருள் தந்தை அவர்களின் உடற்பயிற்சி விளக்கம் பகவத் ஐயாவின் ஞான விடுதலை இந்த வரிசையில் அறம் தொகுப்பே முதலிடம் பெறுகிறது.
இன்றும் வாங்கி உங்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டேன் முதல் முறை உங்களை சந்தித்து முதல் முறை கையெழுத்து வாங்கிய அதே மகிழ்ச்சியுடன்.அறம் மலர்ந்த நாட்களின் அதே நெகிழ்ச்சி என்னுள் இன்றிரவு நிச்சயம் உறங்க முடியாது….
மு.கதிர் முருகன்
கோவை