லெ.ரா.வைரவனின் ராம மந்திரம் – சுஷீல்குமார்

வணக்கம் ஜெ,

நாகர்கோவிலுக்குள் வருபவர்களை எதிர்கொண்டு வரவேற்பது ஒழுகினசேரி. ஒரு சில தெருக்களைக் கொண்ட சிறிய பகுதிதான். ஆனால்அதன் ஒவ்வொரு தெருவிலுமிருந்து கதைகள் பெருக்கெடுத்து வருகின்றன. தாத்தாக்கள்அப்பாக்கள்பல வயது பெண்கள்கடந்து செல்லும் அந்நியர்கள் என கதை மாந்தர்கள் பல்கிப் பெருகுகின்றனர். அம்மனிதர்களின் சமூகக் கட்டமைப்பின் மீதான விமர்சனம்சடங்குகள்கலாச்சாரம் மற்றும் அந்த நிலத்திற்கே உரிய தொழில்கள்நம்பிக்கைகள் என விரிந்து செல்லும் கதைப்பரப்பை தனதாக்கிக் கொண்டிருக்கிறார் எழுத்தாளர் வைரவன் லெ.ரா.

இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் வைரவன் உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பது தன் கதை மாந்தர்களின் ஆளுமையை தான். அதிலும்அவரைக் கவர்வது அசாதாரணமான ஆளுமை கொண்ட மனிதர்கள். இத்தொகுப்பில் இருக்கிற பன்னிரெண்டு கதைகளும் அத்தகைய பன்னிரெண்டு மனிதர்களை நம்முன் நிறுத்துகின்றன. யார் ஆண்யார் பெண்எது ஆண்மைஎது பெண்மை என ஆராய்ந்து தயங்கித் தயங்கி தன் பாலினத்தை வெளிப்படுத்தும் பதின் பருவக் கதாபாத்திரம்மனைவியின் கர்ப்பத்தை பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி கையாள நடுங்கும் உறுதியற்ற ஒருவன்உண்மையைக் கைவிட்டுவிட்டு அதே உண்மை தன்னைக் கைவிட அலைந்து திரியும் ஒருவன்பலாத்காரத்திற்குப் பதிலாக நிற்கும் துப்பாக்கி முனையில் தன் இறைவனைக் கண்டடைந்த ஒருவன்போதையிலும் வாழ்விலும் ஒரு அத்தம் பார்த்துவிடத் தீர்மானமாக இருக்கும் ஒருவன்நீண்ட இருளில் ஒரு சிறு துளி வெளிச்சத்தைப் பற்றிக் கொள்ள ஓடும் ஒருவன்மருத்துவாழ்மலையின் சிரஞ்சீவியை இமயத்தில் தேடும் ஒருவன் என பல ‘ஒருவன்களையும் அவர்களது தனித்துவமான எண்ண ஓட்டங்களையும் முடிவுகளையும் துல்லியமாக நம் முன் விரித்துச் செல்லும் கதைகள்.

இவர்கள் எல்லோரையும் விட என்னைக் கவர்ந்தவன் ஒருவன் இருக்கிறான். எப்போதும் நடந்து கொண்டேயிருக்கிறான். தொலைவுகளெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை என நடக்கிறான். பறவைகளும்பூச்சிகளும் பின் தொடர நடக்கிறான். அவனது நடை ஒரு அதிசயமாகிறது. மொத்த உலகமே அவனது நடையைப் புகழ்கிறது. ஒரு உச்சகட்ட நேர்காணலில் அவனது நடையின் புனிதத்தன்மை சிலாகிக்கப்படுகிறது. அவனோ எதையும் கண்டுகொள்ளாமல்நடையை கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி மீண்டும் நடக்கிறான். இன்னும் அவன் நடந்துகொண்டேதான் இருக்கிறான். நடத்தல் அவன் சுதந்திரம்வியாதியோதவமோபுனிதமோ அல்லஅது வெறும் நடை என்கிறான். இன்னொருத்தியோ தன்னுடலைதன் காமத்தை ஆயுதமாக்கி உலகைக் கேலிசெய்து நிமிர்ந்து நிற்கிறாள். அசாதாரண உறவுகளின் உள்ளிருக்கும் பகடிசோகம்திமிர்அசாத்தியத் துணிவு என தொடத் தயங்கும் கருக்களைத் துணிந்தெடுத்து அவற்றின் உன்னதங்களைக் காட்டுகிறார் வைரவன்.

ஒட்டு மொத்தத்தில், நாஞ்சில் நாட்டின் வெளிப்படாத மனிதர்களும், அவர்களின் வெளிப்படாத வாழ்க்கைத் தருணங்களும், தனித்துவமான ஆளுமைகளும், வீழ்ச்சியும், கால மாற்றத்தின் தாக்கமும் என பரந்த தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். நாஞ்சிலோடு நின்று விடாமல் தன் கணினித் துறை சார்ந்த கதைகள், முழு கற்பனைக் கதைகள், அறிவியற் புனைவுகள், தொன்ம மீட்டுருவாக்கங்கள் எனவும் முயல்கிறார். வடிவத்திலும் மொழியிலும் பலவிதங்களில் எழுதிப் பார்க்கிறார். நாஞ்சில் வட்டார வழக்கும் உறுத்தலின்றி மிக இயல்பாக வருகிறது.

வைரவன் லெ.ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பட்டர்-பி’ சென்ற வருடம் வெளியாகியது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள் தவறவிடக் கூடாத புத்தகம் அவரது  இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராம மந்திரம்’. யாவரும் பதிப்பக வெளியீடு.

சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக அரங்கு எண் 214, 215

ராம மந்திரம், சிறுகதைத் தொகுப்பு, பக்கங்கள் 142, விலை 180

புத்தகம் பெற: 99400 21472

சுஷீல்குமார்

முந்தைய கட்டுரைஇலக்கியம் முதல் இலக்கியம் வரை
அடுத்த கட்டுரைகிழவனின் கடல்