தன்னறம் விருது விழா

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தன்னறம் இலக்கிய விருது நிகழ்வு 08.01.2023 அன்று இனிதுற நிகழ்ந்து முடிந்தது. அந்நிகழ்வின் முழுமையான காணொளி வடிவம் இது. அகநிறைவும், நம்பிக்கையும் கொண்டு நல்நிகழ்கையாக இவ்விருதளிப்பு நிகழ்ந்துமுடிந்ததில், எல்லாம்வல்ல இறைப்பேராற்றலின் துணையமைவும் ஓர் பெருங்காரணம் என்றே நெஞ்சுணர்கிறோம். முன்னழைத்துச் செல்லும் அந்த அரூபக்கரத்தின் பற்றுதல்தான் இக்கணம்வரை எங்களை திசைப்படுத்தி வழிநடத்திச் செல்கிறதென்பதை நாங்கள் பூரணமாக நம்புகிறோம். ஏற்கும் எல்லா கனவுக்கும் அதுவே செயல்நீர் வார்க்கிறது. மேலும், எண்ணற்ற மூத்த ஆசிரியர்களின் துணையிருப்பும் இந்நிகழ்வுக்கான தன்வழியை மலரச்செய்தன.

உங்கள் முன்னிருப்பில் இவ்விருதளிப்பு நிகழ்வு நிகழ்ந்தேறியதை எக்காலத்துக்கும் நிறைவளிக்கும் ஓர் நல்லசைவாக அகம்கொள்கிறோம். நம் முன்னாசன்களை பணிந்து வணங்கும் மரபுத்தொடர்ச்சியை நீங்கள் மீளமீள எங்களுக்குக் கற்பிக்கிறீர்கள். அவ்வகையில் எழுத்தாளர் சு.வேணுகோபால் பற்றிய உங்கள் உரை மகிழ்வையும் பெருநிறைவையும் தந்தது. மேலும், அருண்மொழி அக்கா, அஜிதன், சைதன்யா என உங்கள் குடும்பத்தினரின் உடனமைவும் முகமகிழ்வும் என்றும் உள்ளத்தில் நிலைப்பது.

மேலும், எழுத்தாளர்கள் பாவண்ணன், கோகுல் பிரசாத் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளும், அதற்கு சு.வேணுகோபால் அவர்கள் ஆற்றிய அற்புதமான ஏற்புரையும் இந்நிகழ்வுக்கு உயிர்ப்பளித்தன. சு.வேணுகோபால் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மற்றும் விரிவான நேர்காணல் அடங்கிய முந்நூறு பக்க புத்தகமும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக சில இளம் வாசக மனங்களுக்கு விலையில்லா பிரதிகளாக அளிக்கப்பட்டன.

முகமறிந்த மற்றும் பார்த்தறிந்திடாத எத்தனையோ நல்லுள்ளங்களின் பங்களிப்பினால் சிறுகச்சிறுகச் சேர்த்துத் திரட்டப்பட்ட விருதுத்தொகை ஒரு லட்ச ரூபாயும், தொண்ணூறு வயதுகடந்த முதிய பனைக்கலைஞர் பின்னித்தந்த பனையோலை மாலையும், மலைக்கிராம வேளான் மக்கள் தந்தனுப்பிய அழிவின் விளிம்பிலிருக்கும் நாட்டுக்காய்கறி விதைப்பையும், தன்னறம் இலக்கிய விருதுச்சட்டகமும் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்குப் பணிந்தளிக்கப்பட்டது. நம் காலத்தின் மிக முக்கியமான அசாத்தியப் படைப்பாளுமையை மனமேந்திக் கொண்டாடக் கிடைத்த நல்வாய்ப்பென இந்நிகழ்வு அகத்தில் நிறைந்திருக்கிறது.

கலையில் தொலைந்து போதல் நம் விழைவின் இயக்கவிசையில் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும். சக உயிர்களிடம் நாம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணி, கொஞ்ச காலத்திற்கேனும் நம் விழைவுகொள்ளும் வீரியத்தைக் கட்டுப்படுத்திவைக்கும்எனச் சொல்லும் ஷோப்பனோவரின் வார்த்தைகள் இக்கணம் நினைவெழுகிறது. மனிதமன ஊடாட்டங்களையும், அதன் வற்றாத வைராக்கியத்தையும், வேளாண் வாழ்வியல் எனும் தொல்நீட்சியையும் தனது கதைகளம் வழியாகக் கலையாக்கும் ஓர் உன்னத மனிதரைப் போற்றக் கிடைத்த வாய்ப்பாக இந்நிகழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.

இந்நிகழ்வுக்கு வந்திருந்த தமிழிலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளுமைகள், பதிப்பாளர்கள், செயல்பாட்டாளர்கள், மூத்த ஆசிரியர்கள், பத்திரிக்கை நண்பர்கள் என அனைத்து மனிதர்களுக்கும் எங்கள் தீராநன்றிகள் சென்றடைக! தோழமைகள் பாரதிகோபால், செந்தில் ஜெகந்நாதன், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, மனோ, மோகன் தனிஷ்க், ராஜேஷ் ஆகியோரின் உடனிற்றலுக்கும் உறுதுணைக்கும் அன்பின் நன்றிகள்!

எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கும் தன்னறம் நிகழ்வுகளுக்கு நீங்களும், விஷ்ணுபுரம் நண்பர்களும் அளிக்கும் ஆசிகளும் அன்பும் எக்காலத்தும் நிலைத்திருக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு நகர்வையும் நின்று நிதானித்து கவனித்து அறிவுரையும் அரவணைப்பும் வழங்கும் அவர்களின் அன்புக்கு எங்கள் அகநன்றிகள்!

முழுமையுடன் இந்நிகழ்வு நிகழ்ந்துமுடிய உடனின்று உழைத்த அத்தனை இருதயங்களுக்கும் எங்கள் பணிந்த நன்றிகள். தன்வீட்டு நிகழ்வுபோல ஒவ்வொரு சிற்றசைவையும் பார்த்துப் பார்த்துச் சீர்படுத்திய எல்லா மனங்களையும் வணங்கிக் கைதொழுகிறோம். செயலில் இன்னும் உண்மை கொண்டு எங்கோ துயரில் தவித்திருக்கும் ஓர் எளிய ஜீவனின் மீட்சியை மனதில் நினைத்து முன்னகர்வது மட்டுந்தான் ஒவ்வொரு நிகழ்வின் வழியாகவும் நாங்கள் ஏற்கிற உளச்சத்தியம். ஏற்கும் செயலின் உண்மைதான்
எல்லாம்வல்ல தெய்வம்!

பணிவுடன்,
தன்னறம் 

முந்தைய கட்டுரைஇயற்கை, மனிதன், கனவு – டெர்சு உசாலா
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி, கடிதம்