உடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்

கையறு நதி (நாவல்)   – வறீதையா கான்ஸ்தந்தின்

எல்லா இறையியலாளர்களும், பக்திமான்களும், ஞானிகளும் திருப்திகரமான பதிலை அளிக்க முடியாத கேள்வி ஒன்றுண்டு… ‘கடவுள் ஏன் உலகில் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் ஒருவர். கர்மா என்கிறது ஒரு சிந்தனை மரபு. துயருருவோர் பேறுபெற்றோர் என்றார் இன்னொருவர். ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, பேரிடர்களின்போது, ஒரு பெருத்த அவமானத்தின் பின்பு, போர் மற்றும் மனித வக்கிரங்களின் கொடுஞ்செயல்களினை அனுபவிக்கும்போது இந்தத் தத்துவங்கள் அர்த்தமற்றவையாகத் தோன்றுவதே இயல்பு இல்லையா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், மனிதன் அகவிழிப்படைந்த காலம் தொட்டே இக்கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. துயரின் வலி நெஞ்சை நிரப்பி அழுத்தும்போது தத்துவம் அர்த்தமற்ற உளறலாகும், தர்க்கம் பிழையாகும், நிலம் நடுங்கி நம்பிக்கையின் தூண்கள் தகர்ந்து தூள் தூளாகும், பூமி விலகி நம்மை முடிவற்ற பாதாளம் நோக்கி வீழச் செய்யும். காலில் கட்டப்பட்ட பாறாங்கல்லாகத் துன்பம் நம்மைத் தொடரும். செயலிழக்கச் செய்யும், எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். நம்மை ஒரு சாதாரண மனிதன் என்று மட்டுமல்ல ஒரு சாதாரண விலங்காகவே உணரச் செய்யும். துன்பம் இல்லாத வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசியை வாங்கி வா என்றார் புத்தர். அடுத்தவரின் துன்பம் நமக்கு செய்தி, நம் துன்பம் நமக்கு துயர அனுபவம்

கையறுநதி எனும் நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் தன்வரலாற்றுப் புத்தகத்தில் வறீதையா கான்ஸ்தந்தின் தான் எதிர்கொண்டிருக்கும் துன்பம் ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மூளையின் சுரப்பிகளின் அதிசெயல்பாட்டால் ஒரு சராசரி வாழ்வை வாழ முடியாத மகளைப் பேணும் ஒரு தந்தையின் கதை இது. அந்தத் தந்தை ஒரு அறிவாளி. படித்தவர். பேராசிரியர். மனிதர்களின் பெருந்துயர்களை ஆய்வு செய்தவர். ஒரு  மகளின் மனப்பிறழ்வை அவர் எப்படி எதிர்கொள்கிறார், அவரைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பவற்றைக் குறித்த பரவலான அனுபவங்கள் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன

ஒரு அசாதாரண மனிதரென்றாலும் அவரது அன்றாடம் என்பது பிறரைப் போல சாதாரணமானதுதான். அந்த அன்றாடத்தின் மேல் ஒரு பெரும் சோகம் வந்து விழும்போது அந்தக் கதையில் ஒரு காவியத் தன்மை வந்துவிடுகிறது. சோகம் என்றல்ல அதை சவால் என்றும் கொள்ளலாம், தான் விரும்பி ஏற்காத ஒரு சவால். பழங்கதைகளில் வரும் பூதங்களைப் போல ஒவ்வொன்றாய் மாயமாய் எதிர்பாராமல் தோன்றும் சவால்களை தனி ஒருவனாக எதிர் கொள்ளும் ஒரு தந்தை. விடாது போரிடும் ஒரு வீரனைப் போல சந்தேகங்களும், அவநம்பிக்கையும், தெளிவும், எதிர்நோக்கும் ஒரு சேரப் பயணிக்கும் ஒரு காவியத்தைப் போன்றது கையறுநதியின் கதை..

பைபிளின் பழைய ஏற்பாட்டில் யோபுவின் கதை இத்தகையது. அரிச்சந்திரனின் கதையை ஒத்த கதை அது. அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையுடய செல்வந்தனான யோபுவை சோதிக்க கடவுளிடம் சாத்தான் அனுமதி பெறுகிறான். யோபுவின் செல்வங்கள் பறிபோகின்றன, அவனது பிள்ளைகள் மாய்ந்துபோகின்றன, அவனது உடல் சிதைந்து புண்ணடைந்து போகின்றது. யோபு கடவுளை நிந்திக்க மறுக்கிறான். அவனால் அந்தத் துன்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது நண்பர்கள் பல காரணங்களை, ஆறுதல்களைச் சொல்கிறார்கள். அவன் அந்தத் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு ஒருமுறை கடவுளை மறுதலிப்பதிலும் தவறில்லை என்கிறார்கள். யோபு இறுதியாக கடவுளிடம் பேசுகிறான். கடவுள் அவனுக்குச் சொல்வதெல்லாம் என் திட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான்

காரணங்களற்ற துன்பத்தை ஒரு மனிதன் எப்படி எதிர்கொள்வது? கடவுளின் திட்டங்களை அறிவதெப்படி? இயற்கையின் திட்டங்களை அறிவதெப்படி? மிகக் கடினமான கேள்வி இது. இதற்கான காலம் மனிதனுக்கு அருளப்படவில்லை. இதற்கான திறனும் அவனுக்கு மிகக் குறைவே. இயற்கையின் எந்த நிகழ்வும் ஒரு நீண்ட காலத்தில் நிகழும் எண்ணற்ற செயல்தொடர்களின் விளைவேயாகும். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு ஒரு புயலை உருவாக்கும். அவ்வண்ணத்துப் பூச்சியே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு விலங்கின் வாயிலிருந்து தப்பிய புழுவின் வாரிசாயிருக்கும். எத்தனையோ வண்ணத்துப் பூச்சிகள் எண்ணற்ற சாத்தியங்கள். பலகோடி தாயக்கட்டைகள் அந்தரத்தில் முடிவின்றி சுழன்றுகொண்டிருக்கும் ஒரு விளையாட்டில் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை, நாம் எத்தனை தூரம் விளையாடுகிறோம் என்பது மட்டுமே கணக்கு.

அந்தத் தந்தையின் துன்பத்தை நான் சற்று மிகைப்படுத்திவிட்டேனோ என்று தோன்றுகிறது. வறீதையா கையறுநதி முழுக்க தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார் அவருக்கேயுரிய விதத்தில் விடைகளையும் கண்டடைகிறார். அவர் அந்த விளையாட்டை நிதானத்துடனும் சாதுர்யத்துடனும் குறைந்தபட்ச பாதிப்புகளுடனும் விளையாடும் வழிகளைத் தேடி அடைகிறார். மனப்பிறழ்வுகளை நம் சமூகங்கள் எப்படி எதிர்கொண்டன இன்றும்கூட எப்படி எதிர்கொள்கின்றன என்பதை நாம் அறிவோம். அந்த அர்த்தமற்ற பழமையான பாதைகளில் அவரும் சற்று நடக்கிறார். பின்பு பல்லாயிரம் ஆண்டுகால நடைமுறைகளையும் ஒற்றை மனிதனாக எதிர்கொண்டு அறிவின் துணைகொள்கிறார். சுழலும் கோடி பகடைகளின் நிகழ்தகவைப் புரிந்துகொள்வதல்ல அந்த ஆட்டத்தின் விதி, அத்தனை பிரம்மாண்டத்தை அளந்துகொண்டிருந்தால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது. வானத்தை பார்த்துக்கொண்டே நடந்தால் தடுக்கி விழ வேண்டியதுதனே?. அந்தத் தந்தை தன் சிலுவையச் சுமந்தபடியே அடுத்த அடியை எடுத்துவைக்கிறார். அவர் அந்த முடிவிலா பகடையாட்டத்தில் ஒரு காயாக நகர்த்தப்படுவதிலிருந்து விடுபடுகிறார். ஆட்டத்தின் விதிகளை அவரே முடிவு செய்கிறார்

கையறுநதி ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருவதற்கான முதற்காரணம் அது சுய அனுபவப் பகிர்வென்றாலும் ஒரு நாவலின் கூறுமுறையைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சம்பவங்களின் அடுக்குகள் ஒரு புனைவுத் தன்மையுடன் அடுத்து என்ன நடக்குமோ என்று வாசகர் எதிர்பார்த்திருக்கும்பொருட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல புனைவின் மொழியும் கையாளப்பட்டுள்ளது குறிப்பாக உவமைகள் மற்றும் தத்துவ விசாரங்களையும் சொல்லலாம். ஆனாலும் இது உண்மையாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை என்கிற உணர்வும் ஒரு சேரக் கிடைக்கிறது.

இரண்டாவது காரணம் இதன் பேசுபொருள். பொருளாதாரத் தேவைகளைக் கடந்து வரும் மானுட சமூகம் சந்திக்கும் பெரும் சவால்களில் முக்கியமானது மனச்சிதைவுகள். கடந்த சில ஆண்டுகளாக மூளையைக் குறித்து வருடத்திற்கு ஒரு முக்கிய புத்தகமாவது வெளிவந்துகொண்டிருக்கிறது. மனதின் மாயத்தை பகுதி பகுதியாக, ஒரு எந்திரத்தை பிரித்து பார்ப்பதைப்போல, பாகம் பாகமாக பிரித்துப் பார்க்கின்றனர். ஆயினும் மனம் அல்லது மூளை குறித்த ஆய்வுகள் இன்னும் துவக்க நிலையிலேயே இருக்கின்றன. ஒரு புழுவின் மூளையைக் கூட நாம் முழுதாக அறிந்துகொள்ளவில்லை என்கிறார் மூளை குறித்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர் (கிரிஸ்டாஃப் காஷ்). பலகோடி தாயக்கட்டைகள் அந்தரத்தில் சுழலும் இன்னொரு உலகம் நம் உடலுக்குள்ளும் இருக்கிறது. மன நோய்மை என்பது உடல்ரீதியானதும்கூட. மனம், மூளை இரண்டையும் குணப்படுத்துவது அவசியம். அது நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நேரும்போது நாம் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றோம். அதை இயன்றவரை மூடி மறைப்பவர்களே அதிகம். எனவே இப்புத்தகம் ஒரு தைரியமான, புரட்சிகரமான வெளிப்பாடாகவும் உள்ளது. தன் மகளின் தகப்பனாக மட்டுமல்ல மனச் சிக்கல்களில் ஆட்படும் பல்லாயிரம் குழந்தைகளின் தகப்பனாகவும் நின்று இப்புத்தகத்தை ஆசிரியர் எழுதியுள்ளார். அது ஒரு எழுத்தாளனுக்கேயுள்ள துணிவு. தன் உடலை ஒருவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதுபோல தன் ஆன்மாவை உலகுக்குத் திறந்து காட்டுகிறான் எழுத்தாளன்.

மூன்றாவது காரணம் புத்தகத்தின் மையத்தை ஒட்டி வரும் ஆசிரியரின் பிற அனுபவங்கள். ஒரு சமனற்ற மீனவக் குடும்பத்தில், ஒரு சாதாரண மீனவ கிராமத்தில் பிறந்து வளர்ந்து எல்லையற்ற அந்தப் பெருங்கடலின் தீராத அழைப்பைப் புறந்தள்ளி பரிச்சையமில்லாத சமவெளி நோக்கி கண்ணற்றவன் காட்டுக்குள் அலைவதுபோல பாதைகளைத் தேடியலைந்து தன்னை ஒரு சமூகப் பங்களிப்பாளனாக ஆக்கிக்கொண்ட ஒரு அசாதாரணரின் சாகசக் கதையும் அவர் சந்திக்கும் சவால்களும் அவற்றை அவர் கடந்த விதங்களும் இதில் பதியப்பட்டுள்ளன.

பேராசிரியர் கான்ஸ்தந்தின் ஒரு அறிவு ஜீவி. அவரது புத்தகங்கள் அனைத்திலும் ஒரு ஆய்வுத்தன்மை இருக்கும். அவரது புத்தகங்கள் பலவும் ஆய்வுகளே. கிட்டத்தட்ட அவரது புத்தகங்கள் அனைத்திலுமே கடல் எனும் வார்த்தை தலைப்பில் இருக்கும். ஆனால் கையறு நதியில் அவர் ஒரு தனிப்பட்டவராக, ஒரு தந்தையாக, நம்மிடம் மனம்திறந்து பேசும் ஒரு நண்பராக வெளிப்படுகிறார். தனது பாரங்களை நம்மிடம் பகிர்வதன்மூலம் நமக்கு வழி காட்டியாகவும் இருக்கிறார். கடற்கரை குறித்த பல நூறு ஆய்வுகளைவிடஆழி சூழ் உலகுநாவல் தந்த தாக்கம் அதிகம். அதைப்போலவே கையறுநதியையும் மதிப்பிடலாம். ஆனால் இது கடற்கரையின் கதைய மட்டுமல்ல. இது நம் காலத்தின் கதை ஆகவே ஆழி சூழ் உலகை விடவும் பரவலான முக்கியத்துவத்தைப் பெற தகுந்தது. சட்டென்று நின்றுபோனதொரு கடிகாரத்தைப்போல வாழ்க்கையை நகரவிடாமல் ஒரே சுழலில் நிறுத்திவிடும் ஒரு துயரம்,, ஒரு இடுக்கண், ஒரு அசந்தர்ப்பம் உலகில் யாருக்கும் எங்கேயும் நேரலாம்

கையறுநதி ஒரு நவீன துயரத்தை ஒரு நவீன மனிதன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதன் வழிகாட்டியாக அமையலாம். உங்கள் துயரங்களை எடைபோட, ஒப்பிட, அதன்வழி ஆறுதல் தேட ஒரு கதையாக இருக்கலாம். ஒரு அசாதாரண வாழ்வின் அசாதரண தருணங்கள் குறித்த மனம் திறந்த உரையாடலாக வாசிக்கப்படலாம். ஒரு சாகசக் கதையாக, ஒரு சோக நாடகமாகவும் படிக்கப்படலாம். என்னவாக இருந்தாலும் பேராசிரியர் கான்ஸ்தந்தின் ஒரு உணர்வுபூர்வமான, அறிவுபூர்வமான, அன்னோன்யமான, பயனுள்ள புத்தகத்தை எழுதியுள்ளார், அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்

காலம், ஜனவரி 2023

முந்தைய கட்டுரைமைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்