வெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்

வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்து!

கடந்த சில நாட்களில் வெள்ளை யானை நாவலை முழுதுமாகக் கேட்டு முடித்தேன். கிராமத்தானின் குரல் உங்களது குரலாகவே ஒலித்தது. நீங்கள் பேசுவது போலவே சகர உச்சரிப்புகளைச் ச்சகரமாக அழுத்துவது இயல்பாக இருந்தது! காத்தவராயனை அயோத்திதாசப் பண்டிதர் எனப் புரிந்ததாலோ என்னவோ,  எய்டனும் உண்மையானவனோ என்ற மயக்கத்தில் கூகுளில் கூடத் தேடினேன். அவனது மனச்சலனங்களும், பழங்கவிகளோடு தேடிப் பதித்த புத்தியும் உரையாடுகின்ற நெருப்பை ஷெல்லி என்ற தீப்பொறி பற்ற வைப்பது எழுச்சியும் மயக்கமும். மாரிசாவுடன் ராயபுரத்துக்கு அலுங்காமல் சென்ற அதே வண்டிதான் செங்கற்பட்டுக்கு அவன் செல்கின்றபோதும் சென்றது. ஆனால் எத்தனை வேறுபாடுகள். இந்தியப் பெரும்பஞ்சங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்த அதிர்வும், அதனோடு கலந்து உழன்ற அல்லது போராடிய ஆன்மாக்களின் அசைவுகளும் அப்படியே வந்து ஒட்டிக் கொள்கின்றன. இவையெல்லாம் நிகழ்ந்ததால்தான் வள்ளலாரைப் போன்ற மகான்கள் பசிப்பிணியை ஒருபுறம் போக்க முற்பட்டார்கள் என்றும் தோன்றியது. பசி ஒரு எரியும் கூரை என்று நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது. வெள்ளை யானப்   பனிப்பாறையைப் போல இரக்கமற்ற குளிரோடு இறுகிப் போயிருக்கும் அதே அதிகார மனங்கள், அவற்றிற்குத் துணையாகச் சொடுங்கும் சாட்டைகள், எல்லாம் வெவ்வேறு வேடங்களைப் புனைந்து இன்றும் தமது மேடைகளில் ஆடிக்கொண்டுதானிருக்கின்றன. எய்டன்கள் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள் தம்மை; அல்லது எங்கோ தன்னிலை மறந்து குடித்தழிகிறார்கள். வெள்ளை யானையின் மொழிபெயர்ப்புக்கு பிரியம்வதா அவர்களுக்குக் கிடைத்த வெகுமதிக்கும், மொழியாக்கம் சிறக்கவும் வாழ்த்துக்கள்.

நான் ஒரு காலத்தில் உங்கள் மாடன் மோட்சம் படித்தது. பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் யானை டாக்டர். உங்களை ஒரு இந்துத்துவ எழுத்தாளர் என்றே பலரும் சொல்லிக் கேட்டிருந்ததாலோ என்னவோ உங்களிடம் ஈடுபாடு இல்லாமலேயே இருந்தது. படிப்பதற்கான நேரமும் போதுவதில்லை. அண்மையில் ஸ்பாட்டிபை போன்ற தளங்களில் ஒலிக்கோப்புகளைக் கேட்க ஆரம்பித்தேன். சென்ற மாதத்தில் என் நண்பன் தங்கமணி உங்களது சில இணைப்புகளை அனுப்பினான். உங்கள் அறம் தொகுப்பின் சில கதைகளால் கவரப்பட்டேன். பிறகு ஒவ்வொன்றாகக் கேட்டேன். நூறு நாற்காலிகளைக் கேட்டபிறகு உங்கள் மீது நான் கொண்டிருந்த இந்துத்துவ வலதுசாரி என்ற கருத்து உருமாறத் தொடங்கியது. சாதிகளின் பிடியில் இயங்கும் மனமும் சமூகமும் கடந்து ஒவ்வொருவரிலும் மானுட ஆற்றல் பீரிட்டுக் கொண்டே இருப்பதையும், அது ஓங்கி எவ்வாறேனும் வளர்ந்து சுய ஆற்றலைப் புரிந்து தன்னளவில் முழுமையான வாழ்வை வாழ்ந்து நிறைவடையும் என்ற ஆறுதலையும் எனக்குள் காண்கிறேன். நீங்கள் எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் உங்கள் எழுத்து உருவாக்கும் மாந்தர்களும் காட்சிகளுமே ஒரு வாசகனாக எனக்குப் போதுமானவை  என்றும்  தோன்றுகிறது. சோற்றுக் கணக்கைக் கேட்டபிறகு அமெரிக்காவில் கெத்தல் பாயைப் போல நானும் ஒரு கடை நடத்தப் போவதாகக் குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டுள்ளேன்உங்கள் உரைகளைத் தொடர்ந்து கேட்கிறேன். காந்தியம் தோற்கும் இடங்கள் பிடித்திருக்கிறது. இன்னும் கேட்பேன்.

அமெரிக்காவில் 22 ஆண்டுகளாக வசிக்கிறேன். உயிரியல் ஆராய்ச்சியாளன். தற்போது மூச்சுப் பயிற்சிகளை ஆய்கிறேன். சித்தர் இலக்கியங்களில் ஈடுபாடுண்டு. சிறு வயதில் ஓரளவுக்கு வாசித்தேன் என்பது மகிழ்ச்சி. இனி மீண்டும் வாசிப்பினைச் செவி வழியாகவேனும் நிகழ்த்துவேன். நிறையப் பேசுங்கள், உங்கள் எழுத்துக்களை ஒலி வடிவில் என்னைப் போன்றோருக்காகத் தொடர்ந்து ஆக்கித் தாருங்கள். ஆற்றல் மிக்க உங்கள் எழுத்துக்கு நன்றி!

மிகுந்த அன்புடன்

சுந்தர் பாலசுப்ரமணியன்

***

அன்புள்ள சுந்தர்

உங்கள் காணொளியை கண்டேன். சிறப்பான ஓர் அறிமுகம்.
என்னைப்பற்றிய உங்கள் உளத்தடையை கண்டேன். என்னைப்பற்றி அரசியல் அமைப்புகளின் அடித்தட்டுகளில் உழல்பவர்கள் உருவாக்கும் எதிர்மறைச் சித்திரத்தை நான் பொருட்படுத்துவதில்லை. அவை என் வாசகர்களை தடுக்காது, என் ஒரு நூலையாவது வாசிப்பவர்கள் என்னை உணர்வார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் அவ்வாறு வாசிக்க வருவதற்கே அவை தடையாகும் என உங்களைப்போன்ற சிலரின் கடிதங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரவரே தேடி அடையவேண்டியதுதான்.
ஜெ

முந்தைய கட்டுரைஉடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்
அடுத்த கட்டுரைஎஸ்.முத்தையா