கேரள இலக்கிய விழா

ஈரோட்டில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி கிளம்பி கோழிக்கோடுக்குச் சென்றேன். சரியாக கால்நீட்டி படுப்பதற்குள் ஆறுமணி நேரத்தில் பயணம் முடிந்துவிட்டது.  விடியற்காலை மூன்றுமணிக்கு சென்றிறங்கி அங்கே Raviz விடுதியில் பதினான்காவது மாடியில் வானில் மிதப்பதுபோல தூங்கினேன். காலை ஒன்பது மணிக்கு எழுந்து பத்துமணிக்கு கேரளா லிட் ஃபெஸ்ட் அரங்குக்குச் சென்றுவிட்டேன்.

கேரளத்தில் இன்று நான்கு சர்வதேச இலக்கியவிழாக்கள் நடைபெறுகின்றன. கேரளா லிட்பெஸ்ட் டி.சி.புக்ஸ் நிறுவனம் ஒருங்கிணைப்பது. கோழிக்கோட்டில். மாத்ருபூமி லிட்ஃபெஸ்ட் திருவனந்தபுரத்தில். இன்னொரு கேரள லிட் ஃபெஸ்ட் எர்ணாகுளத்தில். ஒவ்வொன்றும் சிலகோடி ரூபாய் செலவில் நிகழ்பவை. 90 சத நிகழ்வுகள் மலையாளத்தில் நடைபெறும். ஒவ்வொன்றிலும் சராசரியாக ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பங்கெடுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இவற்றுக்கு தனியார் நிதியுதவிகள் உள்ளன. அரசு உதவி இல்லை.

தமிழகத்தில் இன்று இத்தகைய நிகழ்வுகள் இல்லை. தமிழக தனியார் நிறுவனங்கள் பொதுவாக இதற்கெல்லாம் நிதியுதவி செய்வதில்லை. ஏனென்றால் அவற்றில் பண்பாட்டுப் பயிற்சி கொண்டவர்கள் எவரேனும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. விஷ்ணுபுரம் சார்பில் நாங்கள் ஒருங்கிணைத்தால்தான் ஒரு சர்வதேச இலக்கியவிழா இங்கே உருப்படியாக நடைபெற வாய்ப்பு.

தமிழகத்தில்  சிறிய அளவில், உயர்வட்டத்திற்காக மட்டும், ஹிந்து லிட்ஃபெஸ்ட் என ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இந்து நாளிதழ் ஒருங்கிணைக்கும் அந்த நிகழ்வு பல ஆண்டுகளாக சில இலக்கிய வைரஸ்களால் தொற்றுக்கு உட்பட்டு சூம்பிப்போய் நிகழ்கிறது. நவீனத் தமிழிலக்கியத்துடன் அதற்கு தொடர்பில்லை. ஒரே ஒரு வட்டத்தைச் சேர்ந்த மிகச்சில தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே அதில் கலந்துகொள்கிறார்கள். இங்கே நவீனத் தமிழிலக்கியம் இருக்கும் செய்தியை அறியாமலேயே சர்வதேச எழுத்தாளர் சிலர் வந்து செல்கிறார்கள்.

கேரள இலக்கியவிழாக்கள் எல்லாவற்றுக்கும் எனக்கு அழைப்பு வருவதுண்டு. பெரும்பாலும் ஒருங்கிணைப்புக்குழு தலைவரே நேரில் அழைப்பார். ஆனால் இலக்கியவிழாக்கள் சம்பந்தமாக ஒரு சிறு விலக்கம் எனக்குண்டு என்பதனால் கலந்துகொள்வதில்லை. அங்குள்ள அந்த பரபரப்பும் கொண்டாட்டமும் என் அகத்தனிமையுடன் இசைவதில்லை. ஆனால் இப்போது என் ஆங்கில நூல் வெளிவந்துள்ளமையால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்துகிறார்கள். வேறுவழியில்லை.

கோழிக்கோடு இலக்கிய விழாவில் எனக்கு இரண்டு அரங்குகள். ஒன்றில் கே.சி.நாராயணன் என்னை பேட்டி எடுக்க நான் என் இலக்கிய வாழ்க்கை, என் எழுத்துக்கள், என் அரசியல் பற்றி பேசினேன். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒரு சிறந்த உரையாடல் அமைந்தது. கேரளத்திலும் எனக்கு தீவிரமான வாசகர்வட்டம் ஒன்று உண்டு. அரங்கிலிருந்தவர்கள் அனைவருமே என் எழுத்துக்களை வாசித்தவர்கள். அரங்கு நிறைந்து சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இருந்துகூட சிலர் வந்திருந்தார்கள். திருச்செங்கோட்டில் இருந்து நிகழ்வுக்கு வந்த கார்த்திக் ஒரு கேள்வி கேட்டார். மொழிக்கும் நிலத்துக்குமான உறவைப் பற்றி.

இன்னொரு அரங்கு கமல்ஹாசன், நான், பால் ஸகரியா ஆகியோர் கலந்துகொண்டது. கமல் அன்றுகாலை தனி விமானத்தில் சென்னையில் இருந்து வந்திருந்தார். கமல்ஹாசனின் திரைமொழி, அவருடைய இலக்கியப்பார்வை, காந்தியம் பற்றிய கேள்விகள் எழுந்தன. பால் சகரியாவின் திரை அனுபவம் பற்றி நான் ஒரு கேள்வி கேட்டேன். மிகப்பெரிய திரள். முகங்கள் மட்டுமேயான ஒரு பெரிய திரை போல தோன்றியது. நான் கமலிடம் ‘இங்கே தேர்தலில் நின்றால் ஜெயித்துவிடுவீர்கள் போல’ என்றேன். அவர் சிரித்தபடி ‘கூட்டம்கூடும். ஓட்டை மாற்றிப்போட்டுவிடுவார்கள்… அது வேறு’ என்றார்.

பின்னர் கமல் ஹாசனுக்கு இன்னொரு அரங்கு. அவர் அரைமணிநேரம் தன் அரசியல் பற்றியும், தன் இந்தியக் கனவு பற்றியும் பேசினார்.மிகச் சரளமான, உணர்ச்சிகரமான உரை.

கமல்ஹாசன் டெல்லி சென்று ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்துகொண்டபோது அதைப்பற்றி என்னிடம் கருத்து கேட்டிருந்தார். அதன் அரசியல் லாபம் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அது அவர் செய்யத்தக்க மிகச்சிறந்த செயல் என்று நான் சொன்னேன்.

இன்று மதச்சிறுபான்மையினர் அரசியலில், அரசாங்கத்தில் இருந்து நம்பிக்கையிழந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நீண்டகால அளவில் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகமிக ஆபத்தானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பார்க்கையில் அச்சமே எழுகிறது. இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, நவீனப்பார்வை கொண்ட அரசியல் மேலெழுந்தாகவேண்டும்.கமல் அதன் முகமாகவே தன்னை முன்னிறுத்தவேண்டும்.

கமல்ஹாசனுடன் அவருடைய தனிவிமானத்தில் அன்றே சென்னை வந்தேன். ஒன்றரை மணிநேரம் மலையாள இலக்கியம், சினிமா பற்றிய நகைச்சுவைகளாகப் பொழிந்துகொண்டிருந்தார். சென்னையில் விடுதியில் தூங்குவதற்காகப் படுத்தபோது எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. பயணம் முடியவில்லை. நான் ஊருக்கு செல்ல ஜனவரி 27 ஆகும்.

முந்தைய கட்டுரைஆர்.எஸ்.சுப்புலட்சுமி
அடுத்த கட்டுரைகோவையில்…