மைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

தொடர்ச்சியாகச் சொற்பொழிவுகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யூடியூப் வந்தபிறகு வேண்டும் நேரத்தில் கேட்கமுடிகிறது. ரயில்பயணத்தில் மிக மிக உபயோகமான ஒரு விஷயம் சொற்பொழிவுகள் கேட்பது. உங்களுடைய உரைகள் எனக்குப்பிடிக்கும். அவை அந்தரங்கமாக நம்மோடுபேசுவதுபோல் உள்ளன. உங்களுடைய குழப்பங்கள், தயக்கங்கள்கூட தெரியும். கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் அருகே இருந்து பேசுவதுபோலவே இருக்கும். எனக்கு உரத்தகுரலில் ஏற்ற இறக்கங்களுடன் பேசும் தொழில்முறைப் பேச்சுக்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அவை மேடையிலே கேட்கலாம். காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு கேட்டால் அவ்வளவாக சுகப்படுவதில்லை.

அண்மையில் கேட்ட உரைகளில் அஜிதனின் மைத்ரி ஏற்புரை மிக அற்புதமாக இருந்தது. மேடைக்கான எந்த பாவனையும் இல்லாமல் தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல பேசுகிறார். அதோடு நீங்கள் பேசுவதுபோல வெறும் உபச்சாரங்களாக இல்லாமல் கேட்பவர்களுக்கு ஏதாவது முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும் என நினைக்கிறார். இலக்கியம் பற்றிய அவருடைய இரண்டு கருத்துக்களுமே ஆழமானவையாகவும் புதியவையாகவும் இருந்தன.

ஜி.செல்வநாயகம்

***

அன்புள்ள ஜெ

அஜிதனின் மைத்ரி விழா ஏற்புரை ஒரு மிகச்சிறந்த உரை. எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வழக்கமான நன்றியுரையாக இருக்கு என நினைத்துத்தான் கேட்டேன். ஆனால் மிக இயல்பாக இதுவரை தமிழில் பேசப்படாத சில களங்களைத் தொட்டுப் பேசுகிறார். பலகலைகள் வழியாக உருவாகும் எழுத்து பற்றி அவர் சொல்வது முக்கியமானது. வாக்னர் பற்றி தாமஸ் மன்னின் கருத்து வழியாக இயல்பாக அதைச் சொல்கிறார். அதைவிட முக்கியமான கருத்து கவிதைக்கும் உரைநடைக்குமான வேறுபாடு பற்றி அவர் சொல்வது. உரைநடையின் குறிப்புணர்த்தும்தன்மை கவிதையில் இருந்து முழுக்கவே வேறுபட்டது. அஜிதனின் வாசிப்பும் தெளிவும் ஆச்சரியப்பட வைக்கின்றன.  வாக்னர், தாமஸ் மன், நீட்சே என்று இங்கே அதிகம் பேசப்படாத சிந்தனையாளர்கள் வழியாக மிகநுட்பமான சிலவற்றைச் சொல்கிறார். மைத்ரி போன்ற ஒரு நாவலை எழுதுபவருடைய உள்ளம் எதையெல்லாம் உள்வாங்கியிருக்கும் என்னும் செய்தி ஆச்சரியமானது.

ரவிச்சந்திரன் மாணிக்கம்

மைத்ரிபாவம் – பி.ராமன்

முந்தைய கட்டுரைபிரியம்வதாவுக்கு அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது
அடுத்த கட்டுரைஉடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்