மயில்வண்ணம்

மயிலின் தோகை என்ன வண்ணம் என்று கேட்டால் எவராலும் பதில் சொல்ல முடியாது. அது எல்லா வண்ணங்களாலும் ஆனது. பச்சை,நீலம், ஊதா மட்டுமல்ல சிவப்பும் மஞ்சளும்கூட தோன்றும். நோக்க நோக்க மாறும். அந்த வண்ணங்களின் தோற்றுவாய் என்ன? மயில்தான். மயிலின் தோற்றுவாய் அதன் முட்டை. முட்டைக்குள் இருக்கும் அந்த மெல்லிய புரோட்டீன் பசை. அந்த பசைக்குள் உறையும் அதன் உயிரணு. அதன் மரபணுக்கூறு. அந்த பசையில், அந்த மரபணுக்கூறில், நுண்வடிவில் உள்ளன அத்தனை வண்ணங்களும். 

ஒரே கணத்தில் முட்டையின் நீரில் கருவென அமைந்த அத்தனை வண்ணங்களும் தோகையென விரிந்தால் என்ன ஆகும்? அவ்வனுபவத்தை அளிக்கும் ஒரு கவிதை

வேற்றுமைப்பட்ட வன்னம் வெவ்வேறு விபாகமாகி
தோற்றுதல் அடைவொடுக்கி சுயம்பிரகாசமாகி
சாற்றிடு மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போல
ஆற்றவே உடையதாகி பைசந்தி அமைந்திருக்கும்

(சிவஞான சித்தியார். சுபக்கம்)

மொழியின் பலநிலைகளை தொல்நூல்கள் வகுக்கின்றன. வைகரி, மத்திமை, பஸ்யந்தி, பரா என அவை விரிகின்றன. வைகரி என்பது வெளிமொழி. நாம் நாவால் உச்சரித்து பிறர் செவிகளால் கேட்கும் மொழி அது. Parole என மேலை மொழியியல் என்று சொல்வதற்கு இணையானது. மேலை மொழியியல் Langue  எனச் சொல்லும் அகமொழியை பல பிரிவுகளாக இந்திய தத்துவநூல்கள் பகுக்கின்றன. அதில் ஒன்று பஸ்யந்தி என்னும் ஆழ்மொழி.

வைகரிக்கு அப்பாலுள்ளது மத்திமை என்னும் நடுமொழி. அதற்கப்பாலுள்ளது பஸ்யந்தி என்னும் நுண்மொழி. அதற்குமப்பாலுள்ளது பரா என்னும் ஆழ்மொழி. பரா உயிர்க்குலங்கள் அனைத்தின் நுண்மொழிகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. பஸ்யந்தி நம்மை அறியாமல் நம்முள் உறையும் மொழி. மத்திமை நாமறிந்து நம்முள் உறையும் மொழி. வைகரி நாம் பேசும் மொழி

பஸ்யந்தியை விவரிக்கையில் சிவஞானசித்தியார் இவ்வாறு சொல்கிறது.மயிலின் வண்ணங்கள் எல்லாம் அதன் முட்டையில் இருக்கும் நீரில் நுண்வடிவில் இருப்பதுபோல பிற்பாடு பல்வேறு பிரிவுகளாகவும் பொருள் வேற்றுமைகளுடனும் தோன்றுவதை தன்னுள் தானே ஒடுக்கிக்கொண்டு பஸ்யந்தி (பைசந்தி) அமைந்துள்ளது. ஆனால் தன்னைத்தானே வெளிப்படுத்தும் சுயம்பிரகாசத்தன்மை கொண்டது அது. செயல்வடிவாக எழும் ஆற்றலும் கொண்டது. 

ழாக் தெரிதா சில உவமைகள் வழியாகவே தன் மொழிக்கொள்கையை முன்வைக்கிறார். அதிலொன்று பழங்காலத்து பாப்பிரஸ் சுவடியில் எழுதியவற்றின்மேல் வெண்மை தேய்த்து மேலும் மேலும் எழுதும் முறையை மொழியின்மேல் அர்த்தங்கள் மேலும் மேலும் ஏற்றப்ப்படுவதற்கு உதாரணமாக அவர் சொல்வது. அதாவது மொழிக்கு அடியிலுள்ள மொழிகள். நூலுக்கு அடியிலுள்ள நூல்கள். மொழியைப் பற்றிய சிவஞானசித்தியாரின் இந்த உவமை தெரிதாவோ, பார்த்தோ சொல்லும் எந்த உவமையைவிடவும் மகத்தானது என எனக்குத் தோன்றியது.

சைவம் சமயங்களை அணுக்கத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்கிறது. உலோகாயதம் (உலகியல்வாதம்), மாத்யமிகம், யோகாசாரம், சௌத்ராந்திகம், வைபாஷிகம் (பௌத்தப்பிரிவுகள்) ,ஆருகதம் (சமணம்) ஆகியவை சைவத்திற்கு மிக அயலான புறப்புறச்சமயங்கள். தார்க்கிகர் (நியாயம், வைசேஷிகம்) , மீமாம்சகர்(பூர்வமீமாம்சம்), ஏகான்மவாதிகள் (வேதாந்திகள், சாங்கியர், யோகமதத்தவர், பஞ்சராத்ரிகர் (வைணவர்) ஆகியோர் புறச்சமயத்தவர்.

பாசுபதம், காபாலம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் ஆகியவை சைவத்திற்கு அணுக்கமான அகப்புறச்சமயங்கள். அவை சைவங்கள், ஆனால் சைவத்தின் உள்வட்டத்திற்குள் அமைவன அல்ல. பாஷாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்தவாதம், ஈசுவர அவிகாரவாதம், சிந்தாந்தவாதம்  ஆகியவை சைவ அகச்சமயங்கள். அவையே சைவத்தின் மையப்போக்குகள். அவற்றில் தலையாயது சித்தாந்த சைவம். சைவப்பிரிவுகளுக்குள் மிக அண்மைக்காலத்தையதும், ஆகவே அறுதியானதும் அதுவே என சொல்லப்படுகிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மெய்கண்டார் சைவ ஆகமநூல்களில் முதன்மையானதான ரௌரவ ஆகமத்தின் முதல் துணைப்பகுதியை தழுவி உருவாக்கிய சிவஞானபோதம் என்னும் நூலே சைவசித்தாந்தத்தின் அடிப்படை. அந்நூலை ஒட்டி உருவான பலநூல்கள் சைவசித்தாந்தத்தின் அடிப்படைகளை விரிவாக்கம் செய்கின்றன. இவை ஒரு மையத்தரிசனத்தை தர்க்கபூர்வமாக விரித்தெடுப்பவை.

சைவ சித்தாந்தம்  என்பது ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவங்கள் மற்றும் அவற்றின் வேதாந்த விரிவுகளான அத்வைதம் , விசிஷ்டாத்வைதம், துவைதம், சுத்தாத்வைதம், துவைதாத்வைதம் உள்ளிட்ட தத்துவப்பிரிவுகள் அனைத்துக்கும் காலத்தால் பிந்தியது என்பதனால் அவற்றுடன் எல்லாம் முழுமையான விவாதமொன்றை நிகழ்த்தவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது.  அது ஒரு நல்வாய்ப்பாகவும் சைவசித்தாந்தத்திற்கு அமைந்தது. சைவசித்தாந்தம் மிகவிரிவான தர்க்கமுறையை ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தொடரும் நூல்கள் வழியாகவும், அந்நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் வழியாகவும் உருவாக்கிக் கொண்டது.

சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய ஒரு தத்துவசிந்தனை மரபு. தமிழகத்தில் தோன்றிய பிற தத்துவ மரபுகள் அத்வைதம் , விசிஷ்டாத்வைதம் சைவசித்தாந்தம் ஆகியவை. சங்கரர் (அத்வைதம்) பழைய சேரநாட்டில் காலடியில் பிறந்தவர். ராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) பழைய பல்லவநாடான ஶ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். பிற தத்துவஞானியரில்கூட வல்லபர் ( சுத்தாத்வைதம்) நிம்பார்க்கர் (துவைதாத்வைதம்) ஆகியவர்கள் காஞ்சியில் கல்விகற்றவர்கள். பௌத்த சமையப்பிரிவுகளில் யோகாசார மரபின் விக்ஞானவாதக் கொள்கை கொண்ட திக்நாகர், தர்மகீர்த்தி, தர்மபாலர் ஆகியோர் காஞ்சியை ஒட்டிய ஊர்களில் பிறந்தவர்களே. ஆனால் பிற கொள்கைகள் இங்கு பிறந்து இந்தியாவெங்கும் கிளைவிரித்தன. அதன் பிற்கால ஆசிரியர்களில் பலர் தமிழர்களுமல்ல. சைவசித்தாந்தத்தின் விரிவு முழுமையாகவே தமிழகத்தில் நிகழ்ந்தது. அவ்வகையில் முழுமையான தமிழ்த்தத்துவ சிந்தனை என்பது சித்தாந்த சைவமே ஆகும்.

சைவமரபுக்கு வேர்நிலம் காஷ்மீர், காஷ்மீர சைவமே தொன்மையானது. அதன் பல விரிவாக்கங்கள் இந்தியாவெங்கும் படர்ந்து சைவத்தின் எல்லா குறியீடுகளையும் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. ஒரு வழிபாடாக சைவம் சங்ககாலத்திற்கு முன்னரே தமிழகம் வந்து வேரூன்றிவிட்டது. சிலப்பதிகாரத்தில் பெருமதமாக நிலைகொண்டு சோழர்காலத்தில் தன் முழுவளர்ச்சியை எட்டியும் விட்டது. சித்தாந்த சைவம் அந்த தொன்மையான குறியீட்டுக்களம், பெருமத அடித்தளம் ஆகியவற்றின்மேல் எழுந்த ஒன்றே.

அதுவும் சைவசித்தாந்தத்தின் பெரிய நல்வாய்ப்புகளில் ஒன்று. பிற தத்துவப்பிரிவுகள் தத்துவம் மூலம் அவற்றின் மையத்தரிசனத்தை  கவித்துவமாக விரித்தெடுத்து,  குறியீடுகளாக ஆக்கி, ஆசார அனுஷ்டானங்களாக நிறுவி, அன்றாடவழியாக ஆக்கவேண்டியிருக்கிறது. சைவசித்தாந்தத்திற்கு அவையெல்லாம் முன்னரே அமைந்துவிட்டிருந்தன. 

சைவசித்தாந்த நூல வரிசையின் பதினான்கு மூலநூல்களில்  சிவஞானபோதத்திற்கு அடுத்த இடம் கொண்டது சிவஞானசித்தியார். அருள்நந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. சைவ ஞானாசிரியர் மரபு சைவச் சந்தான மரபு எனப்படுகிறது (சந்தானம், வாரிசு). அதில் அகச்சந்தானங்கள் நந்திதேவரில் தொடங்கி பரஞ்சோதி முனிவர் வரையிலானவர்களால் ஆனது. அவர்கள் கைலாயத்தில் உறைபவர்கள். மெய்கண்டாரில் தொடங்கி நீள்வது புறச்சந்தான மரபு. அது இன்றுவரை நீளும் திருக்கைலாயபரம்பரை மடாதிபதிகளால் ஆனது. புறச்சந்தான மரபில் மெய்கண்டசிவாச்சாரியாரின் நேர்மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். பொயு 13 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் அருணந்தி சிவாச்சாரியார் தோன்றினார் எனப்படுகிறது.

சிவஞானசித்தியாரை புரிந்துகொள்ள உதவும்பொருட்டு அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பேருரைகளில் ஒன்று அருணை வடிவேலு முதலியார் 1899ல் எழுதிய சிவஞான சித்தியார் சுபக்கம், தெளிவுரை. இது மாதவசிவஞான யோகியார் சிவஞான சித்தியார் நூலுக்கு எழுதிய சுபக்கம் என்னும் தெளிவுரையின் விளக்கவுரை. மெய்கண்டாரின் சிவஞானபோதத்தின் விளக்கம் சிவஞானசித்தியார். அதன் விளக்கம் சிவஞானசித்தியார் சுபக்கம். அதன் விளக்கமே இந்நூல். 

அருணை வடிவேலு முதலியார் புகழ்பெற்ற சைவப்பேரறிஞராகக் கருதப்பட்டவர். இந்நூலை அருணை வடிவேலு முதலியாரின் மகன் அருணை பாலறாவாயன் முன்னுரையுடன் அருண் சீனிவாசன் (கவின் பதிப்பகம் கோவை) வெளியிட்டுள்ளார். 

இந்நூலை ஒருவர்வாசிக்கமுடியாது. சைவப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிலருடன் அமர்ந்து கூட்டாகப் பயில்வதே முறை. சிவஞானபோதம் உள்ளிட்ட மற்றநூல்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். சைவசித்தாந்த அறிமுகநூல்களை பயில்வதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 

ஆனால் இந்நூலை நூலகத்தில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து கைபோன போக்கில் பிரித்து அதில் ஒரு பாடலை மட்டும் படித்து அதையொட்டிய உரையை பயின்று உள்வாங்கிக்கொள்ள முயலலாம். அது ஒரு வகையான தெளிவை அளிப்பதைக் காணலாம். அன்று முழுக்க சிந்தையில் தொடரும் ஓர் இனிமையாக அது நீடிக்கும். அழகிய கவித்துவம் ஒன்று இனிய தென்றல் என நம்மைச் சுற்றி வீசிக்கொண்டிருக்கும். இன்று என்னை மயில்முட்டையின் தோகை அவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது.

——————————————————————————————————

தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்

73958 666 99 / 94864 22641…

வங்கி விபரம் :

KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,

( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..

UPI ID : Kavin2021@uboi…

phonepe & Gpay 73958 666 99

முந்தைய கட்டுரைஉமா சந்திரன்
அடுத்த கட்டுரைபிரியம்வதாவுக்கு அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது