“நாடற்றவர்களின் கடவுச்சீட்டு” நூல் வெளியீடு இனிதாய் நடந்து முடிந்தது. எட்டாம் திகதி மாலை இரண்டு பெரும் நிகழ்வுகளுக்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டு, மெல்பேர்னிலிருந்து புறப்பட்டு 15 மணி நேரம் பயணம் செய்து வந்து, இந்த அரங்குகளில் கலந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை எங்கிருந்து எனக்குள் உதித்தது என்று இன்றுவரை புரியவில்லை.
மெல்பேர்ன் – கொழும்பு பயணத்தைவிட, கொழும்பிலிருந்து இந்தியா வருவதென்பது, முன்பொரு காலத்தில் ஓமந்தை – முகமாலை சோதனைச் சாவடியில் வரிசையில் நின்று வன்னிக்குள் பயணிக்கின்ற பெரும் உளைச்சலையும் எரிச்சலையும் தந்தது. ஐயப்பன் பக்தர்களால் நிரம்பிக்கிடக்கும் விமானங்களில், எங்களைப் போன்ற நாத்திக பயணிகள் படும் பாட்டை எந்தக் கடவுளிடம் ஒப்பாரி செய்து அழுவது என்றே தெரியவில்லை. இந்திய விமானத்துக்குள் நுழைவதற்கு முன்னர், விமானத்தின் வாசலில் வைத்தும் கடைசியாக ஒரு சோதனை போடுகிறார்கள். அதிகாரிகளின் உத்தரவுகளில் பிறந்த ஒவ்வொரு சொல்லையும் தவறாமல் கடைப்பிடித்து, ‘ஸ்டப்‘ போட்டு கைகளை விரித்து – கால்களை அகட்டி டான்ஸ் எல்லாம் அடிக்காண்பித்து, சென்னை அண்ணா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போது, நவத்தூவரங்களினாலும் பெருமூச்சு போனது.
மதியம், அண்ணா ஞாபகார்த்த நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய திருவிழா நிகழ்வில், புலம்பெயர் இலக்கிய அமர்வில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்த காரணத்தினால், சென்னையில் முதல் தூக்கம் நான்கு மணி நேரம் மாத்திரமே என்று மட்டுப்படுத்தப்பட்டது. அங்கு சென்றபோது, முதன் முதலாக இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதில் ஏற்படுகின்ற சம்பிரதாயமான எந்தப் பிசுறுகளும் இல்லாமல், நேர்த்தியாக ஒழுங்காகியிருந்தது. போய் இறங்கியதும் என்னைப் பார்த்தவுடனேயே, அடையாளம் கண்டுகொண்டார்கள் கெட்டிக்கார அரசு அதிகார்கள். நேரடியாக உணவு பரிமாறும் இடத்துக்கு அழைத்துச் சென்று, வரிசையில் சேர்த்துவிட்டார்கள். செல்வேந்திரன் அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். அதன்பின்னர், அழகியபெரியவன், பேரறிவாளன், சுகிர்தராணி, தமயந்தி, தென்றல் சிவகுமார், ஆதவன் தீட்சண்யா, லோகமாதேவி என்று ஏகப்பட்டவர்கள் அடுத்தடுத்து எதிர்ப்பட்டார்கள். முகநூலில் மாத்திரம் நண்பர்களாக அளவளாவிக்கொண்ட நாம், முதல்முறையாக நேரடியாக சந்தித்து ஆளுக்காள் “லைக்” போட்டுக்கொண்டோம்.
மாநாட்டு மண்டபத்தில், பல நூற்றுக்கணக்கானவர்களின் முன்னிலையில் கொண்டுபோய், பேச்சாளர் என்று இருத்தியபோது, அண்ணா விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, தாழப்பறந்த விமானமொன்று வயிற்றுக்குள் வட்டமடித்ததுபோலிருந்தது. ஷோபா மற்றும் செல்வத்துடன் அரங்கைப் பரிமாறிக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி இனிதாய் நிறைவுபெற்றது.
மாலையில், “நாடற்றவர்களின் கடவுச்சீட்டு“.
கவிக்கோ அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு ஏற்பாடாகியிருந்தபோதும், அண்ணா நூலகத்தில் இடம்பெற்ற இலக்கியத் திருவிழாவிலிருந்து, இலக்கியம் வழிவிடுவதற்கு சற்றுத் தாமதமாகிவிட்டது. ஷோபா, கருணாகரன், சாம்ராஜ், கறுப்பி சுமதி, வாசு முருகவேள் எனப்பலரும் ஐந்து முப்பதிற்கே அரங்கிற்கு வந்துவிட்டிருந்தனர். இப்படியான இலக்கியக் கூட்டங்களுக்கு முன்னராக நடைபெறுகின்ற, வழக்கமான பகடிகளால், அரங்கு பம்பலாடிக்கொண்டிருந்தது. ஆறு மணியளவில் ஜெயமோகன் வந்தார். ஷோபாவைச் சென்று ஆரத்தழுவினார். சுருதி தொலைக்காட்சி உட்பட அரங்கிலிருந்து பல கமராக்கள் வெறித்தனமாக வெளிச்சத்தைப் பாய்ச்சின. வரலாற்றுச் சம்பவத்தை பதிவுசெய்துகொண்டன. அங்கு கருணாகரன் வந்திருப்பது ஜெயமோகனுக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. ஒரு மூலையிலிருந்து அவர் எழுந்தபோது, ஜெயமோகனின் கைகள், அவரை அறியாமலேயே கருணாகரனை பாய்ந்து கட்டிக்கொண்டன. காலம் செல்வமும் அங்கு வந்தவுடன் “ஓ…..இலங்கையின் எல்லா இயக்கங்களும் இங்குதான் நிக்குதா” – என்று தன் எல்லா நண்பர்களையும் ஒரே இடத்தில் கண்டுகொண்ட பெருமகிழ்வில் நெகிழ்ந்தார். பல நிமிடங்கள் ஜெயமோகன் அங்கேயே நின்று அளவளாவினார். அப்போது அங்கு வந்து வெற்றிமாறனுக்கு ஜெயமோகன் ஈழத்தவர்களை அறிமுகம் செய்தார். பின்னர், தமிழ்பிரபாவின் நாவல் உட்பட அவரது அனைத்து திறன்களையும் மேற்கோள்காட்டி, ஈழத்தவர்களுக்கு அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பாளர் லதா, லக்ஷ்மி சரவணகுமார் என்று அனைவருடனும் பேசி, ஆறரை மணிக்கு நிகழ்வு ஆரம்பித்தது.
இலக்கிய விழாக்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமமாக பொறுப்புக்களுடன் ஓடித்திரிகின்ற அகரமுதல்வன், எந்த குழப்பமும் இல்லாமல் நிதானமாக நிகழ்வினை தொகுத்தளித்தார். நிகழ்வின் முதல் அம்ஸமாக, நூலை வெற்றிமாறன் வெளியிட்டு வைக்க, தமிழ்பிரபா பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, தமிழ்பிரபா வாழ்த்துரை வழங்கினார். அடுத்து, லக்ஷ்மி சரவணகுமார் நாடற்றவர்களின் கடவுச்சீட்டினை முழுமையாகப் படித்து, கிட்டத்தட்ட ஒரு மதிப்புரையாகவே தனது பார்வையை முன்வைத்தார். தமிழ்பிரபா, லக்ஷ்மி ஆகியோர் இருவரும் மேடைப் பேச்சுக்கு புதிதானவர்கள் அல்ல. கூடவே, சினிமா துறையில் இயங்குபவர்கள். ஆக, தமக்கு ஒதுக்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள், இவ்வளவு வேகமாக, தாங்கள் நினைப்பவற்றை ஒரு கோர்வையாக பேசமுடியும் என்பதை நிகழ்த்தியே காண்பித்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.
அடுத்து, வெற்றிமாறனின் வாழ்த்துரை. மேடைப் பேச்சுக்கு மிகுந்த கூச்சமும் அச்சமும்கொண்டவர் வெற்றி. அவர் திரையில்தான் நிகழ்த்திக்காட்டுபவர். மேடைகள் ஏறும்போது அவருக்குள் ஏற்படுகின்ற பதற்றத்தை நான் பலதடவைகள் காணொலிகளிலும் பார்த்திருக்கிறேன். அத்துடன், இது இலக்கிய மேடை; தனக்கானது அல்ல என்று அவர் எண்ணக்கூடிய விலகலும் அவருக்குள் இருந்துகொண்டிருக்கும். ஆனால், நேற்று அவர் உற்சாகத்துடனேயே பேசினார். பேசி முடித்துச் சென்று கதிரையில் அமரும்போது, “உங்களுக்கு இது பேருரைதான்” – என்று ஜெயமோகன் சொல்ல, அதற்கு அரங்கமே க்ளப் போட்டது. வெற்றியின் வழக்கமான வெட்கச் சிரிப்பு அவரது தாடியின் மீது தழும்பி வழிந்தது.
நேற்யை அரங்கு, ஒரு இறுக்கமான இலக்கிய நிகழ்வு என்றதுபோல் அல்லாமல், ஜெயமோகனும் வெற்றியும் மேடையிலிருந்து அவ்வப்போது அடித்து கடவுண்டர்களினால், கலகலத்தபடியே இருந்தது. அது பார்வையாளர்களையும் நிகழ்வுடன் நெருக்கமாக உணரவைத்தது. மேடையிலிருந்தவர்கள் மீதான பெரு விம்பங்களைத் தாண்டி, அவர்களுடனான நெருக்கமான ஊடாட்டத்தை ஏற்படுத்தியது.
“நாடற்றவர்களின் கடவுச்சீட்டு” நூலை வாய்ப்பு கிடைத்தால் வாய்ப்பு கிடைத்தால் படமாக்குவதற்கு விரும்புகிறேன் என்று லக்ஷ்மி கூற, அப்போதிருந்தே அந்தப் பேச்சு, ஒவ்வொருவரின் பேச்சிலும் உருளத்தொடங்கியது. வெற்றி பேசும்போது, தான் இந்தப் புத்தகத்தைப் படித்தபோதும் அதனை உணர்ந்ததாகக் கூறி, லக்ஷ்மியை வாழ்த்தினார். இறுதியாப் பேசிய ஜெயமோகனும் மிகுந்த நெருக்கமாக அதனை வழிமொழிந்தார்.
ஜெயமோகனின் பேச்சு வழக்கம்போல ஆழமாக – பல அரசியல் கூறுகளுடனும் – நுட்பமான அவதானங்களினாலும் – சில அழுத்தமான கோரிக்கைகளாலும் – இனிமையாகவும் – அமைந்தது.
நிகழ்வு ஆரம்பிக்கும்போதிருந்த அதே உணர்வு, முடியும்போதுமிருந்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது என்று பெருமையோடு சொல்லக்கூடியதாயிருந்தது. நிகழ்வில், “உன் கடவுளிடம் போ” நூலையும் பலர் வாங்கிச் சென்றார்கள். புதிய வாசகர்களின் அன்பினால் நிறைந்தேன். ஒரு எழுத்தாளனுக்கு அவன் வாழ்வில் வேறென்ற பேறு தேவையாகிவிடப்போகிறது.
நிகழ்வினை அச்சொட்டாகப் பதிவு செய்த சுருதி தொலைக்காட்சியினருக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்த ஆகுதி பதிப்பகத்தினருக்கும் அகரமுதல்வனுக்கும் மனம் கனிந்த நன்றிகள்
தெய்வீகன்