Stories of the True வாங்க
ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு பெருகியதுபோல இருந்தது. அள்ளி சோபாவில் பரப்பியபோது உண்மையாகவே பெரிய நண்டு குட்டிக்குட்டி நண்டுகளுடன் தோன்றுவதுபோலவே தெரிந்தது.
Stories of the True முதல்பதிப்பு விற்றுவிட்டது, விரைவாக விற்பதனால் மலிவுப்பதிப்பு வரவிருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் அது இப்படி சுருக்கவுருவில் இருக்கும் என நான் நினைக்கவில்லை. பொதுவாகவே உலகமெங்கும் ஒரு நூல் விரைவாக விற்றுத்தீருமென்றால்தான் தாளட்டைப் பதிப்புகள் வெளியிடுவது வழக்கம். மகிழ்ச்சியடையவேண்டிய செய்திதான்.
ஆனால் என் வாழ்க்கையிலிருந்து தாளட்டை நூல்கள் விலகிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் பெரும் உழைப்பில் சேர்த்த ஏராளமான நூல்களை கடந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிகழ்வுகளில் வருகையாளர்களுக்குப் பரிசாக அள்ளிக்கொடுத்து நூலகத்தைக் காலிசெய்துவிட்டேன். இப்போதும் நூல்கள் எஞ்சியிருக்கின்றன.
ஒன்று, பொடி எழுத்தை வாசிக்க முடியவில்லை. இரண்டு, சற்றுப்பழைய நூல்களில் தாளின் வண்ணம் மாறியிருப்பதனால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிகின்றன. இதேதான் தமிழிலும். தமிழில் நமக்கு 90 சத நூல்கள் தாளட்டைப் பதிப்புகள். நான் இன்று அச்சு பெரியதாக, தெளிவாக உள்ளதா என்று பார்க்கிறேன். வரிகளுக்கிடையே இடைவெளி போதிய அளவு உண்டா என்று பார்க்கிறேன். என் நூலகத்தில் இருந்த காலச்சுவடு வெளியீடுகளான ஜி.நாகராஜன் படைப்புகள் போன்றவை வாசிக்கவே முடியாமலாகிவிட்டன.
விஷ்ணுபுரம் பதிப்பகம் விஷ்ணுபுரம் நாவலை 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாப் பதிப்பாகக் கொண்டுவந்தபோது நான் சொன்ன ஒரே ஒரு நிபந்தனை எழுத்துரு அளவுதான். பழைய பதிப்புகளைவிட 100 பக்கம் கூடுதலாக இருக்கிறது, காரணம் பெரிய எழுத்துக்கள். வரிகளுக்கிடையேயான இடைவெளி மிகுதி. வெண்முரசு நூல்களும் அப்படித்தான். பரவாயில்லை.
ஆனால் என் மகளுக்கு கெட்டியட்டை நூலகப்பதிப்பு பிடிக்கவில்லை. “என்ன இது அவ்ளவு தடிமனா… ஹேண்ட்பேகிலே எப்டி கொண்டு போறது?” என புகார் சொன்னாள். தாளட்டை வந்ததுமே “ஆ, அழகா கியூட்டா இருக்கு” என மகிழ்ந்தாள். கெட்டியட்டை பதிப்பை கண்களை ஓட்டி ஓட்டி படிக்கவேண்டியிருக்கிறதாம். இது சின்ன பக்க அளவுக்குள் எளிதாகப் படிக்க முடிகிறதாம். ஆச்சரியமாக இருந்தது.
கெட்டியட்டை எல்லாம் ஒரு சம்பிரதாயம்தான். உண்மையான விற்பனை தாளட்டையில்தான் நிகழும். அதுவே விரும்பப்படுகிறது என்கிறார்கள். நூலகங்களில் நூல்களை சேமிக்கவேண்டும் என்னும் கருத்து மறைந்துவருகிறது. வாசித்துவிட்டு தூக்கி வீசிவிடவேண்டும். தேவையென்றால் மீண்டும் வாங்கலாம். நிரந்தரமாக இருப்பது மின்வடிவில் மின்நூலகத்தில்தான். எதிர்காலத்தில் கெட்டியட்டைப் பதிப்புகள் ஒரு கலைப்பொருளாக மட்டுமே வெளிவரலாம்.
கெட்டியட்டை பதிப்பு செலவேறியது. அதை கையால்தான் கட்டவேண்டும். மானுட உழைப்பே பணச்செலவுதான். அதிலும் விஷ்ணுபுரம் 25 ஆண்டுப் பதிப்பு, பின்தொடரும் நிழலின் குரல் புதிய பதிப்பு போன்றவற்றில் விளிம்பில் ஒரு பிறைவடிவ வளைவு அமையும்படி கட்டப்பட்டுள்ளது. அது இன்னும் செலவேறியது. ஆனால் காட்சிக்கு அது ஒரு கம்பீரத்தை அளிக்கிறது. எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த எந்த உணர்வும் அடுத்த தலைமுறையிடம் இருப்பதில்லை.
Stories of the True கெட்டியட்டை பதிப்புகளை எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள அருண்மொழி சொன்னாள். ஓராண்டுக்குள் அவை கிடைக்காமலேயே ஆகிவிடும். இனி வருவன எல்லாமே தாளட்டைப் பதிப்புகளாகவே இருக்கக்கூடும். வேறொரு வாசிப்புலகம் உருவாகியிருக்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் எல்லா கெட்டியட்டை நூல்களையும் வாங்கி அடுக்கிவிடவேண்டும் என்னும் வெறி எழுகிறது.