ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
அஜியின் ‘ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’ கதை பிடித்திருந்தது. ஜஸ்டின் வன்முறையை விரும்பாதவன் என்ற சித்திரம், துறையில் இருந்து வரும் ஆட்கள் அவனுடன் பள்ளியில் படித்தவர்களாக இருப்பதால் ஒத்து போவது போன்றவை வாசித்துக் கொண்டிருக்கும் போது அஜியின் இயல்பை கதையில் திணிக்காறானோ என்று தான் முதலில் தோன்றியது. அவனுக்கு குமரித்துறைவி போன்ற முழுவதும் நேர்மறையான படைப்புகள் மீது இருக்கும் ஈடுபாட்டால் அப்படி யோசித்தேன். ஆனால் பரலோகத்தில் ஏசு வந்தவுடன் கதை வேறொரு தளத்திற்கு சென்றது. ஏசு ‘ஜஸ்டின்’ என்ற பேரை கேட்டுவிட்டு ‘ஸ்ஸோ பேர வெக்கானுவ பாரு’ என்று எரிச்சலடைவதும் கடைசியில் கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டு ‘போல உள்ள, அழுகுவாம் பாரு’ என்று சொல்லி ஜஸ்டினை சொர்க்கத்திற்கு அனுப்புவதும் கன்னியாகுமரி ஊர்புறங்களில் கனிவை கொஞ்சம் வன்முறை கலந்து மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த தந்தைகளுக்கே உள்ள இயல்புகள்:) பரலோகத்தில் நாஞ்சில் நாட்டு மொழி பேசும் தந்தை ஏசு’ என்ற கற்பனையே பரவசத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. அஜிக்கு வாழ்த்துக்கள்!
ஜெயராம்
*
அன்புள்ள ஜெ
அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் ஓர் அருமையான கதை. பால் ஸக்கரியாவின் அன்னம்ம டீச்சர் ஓரு நினைவுக்குறிப்பு போன்ற கதைகளின் அந்த உணர்வு உள்ள கதை. அதிலுள்ள இனிமையான விளையாட்டுத்தனமும், அது இயல்பாக ஒரு உயர்ந்த ஆன்மிகதளத்தை எட்டுவதும் இன்றைய கதைகளில் மிகவும் அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றது. பல அழகான விஷயங்கள் உள்ளன. படித்துக்கொண்டிருக்கும் அமெச்சூர் பையன் அவனைப் போட்டிருவோம்ணே என்று ஒன்றுமே தெரியாமல் துடிப்பாக இருப்பது, ஜஸ்டின் பாதி சைவமாக ஆவது எல்லாமே அழகானவை. ’வழிதவறிய குமாரன்’கள் இப்படித்தான் இயேசுவிடம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
ராஜா குமரவேல்
*
அன்புள்ள ஜெ
மதுரைப்பகுதிச் சண்டியர்களில் பெரும்பாலானவர்கள் கொலைசெய்யப்போகும் முன் அந்த ஆளிடம் பேச்சுக்கொடுத்து, அவனைச் சீண்டி, அவன் கெட்டவார்த்தை சொல்லி வசைபாடியபிறகுதான் வெட்டுவார்கள். அப்போதுதான் வெட்டுவதற்கான மனநிலை அவர்களுக்கு வரும். இதை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த நுட்பம் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் கதையில் அழகாக அமைந்துள்ளது. அருமையான ஃபீல்குட் கதை.
ராஜ் கார்த்திக்