மைத்ரிபாவம் – பி.ராமன்

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க


பி.ராமன் தமிழ் விக்கி 

(மலையாளக் கவிஞர் பி.ராமன் 7 டிசம்பர் 2022 அன்று சென்னையில் நிகழ்ந்த மைத்ரி விவாத அரங்கில் முன்வைத்த உரையின் எழுத்துவடிவம்) 

அன்புடையீர்

வணக்கம்.

அஜிதன் எழுதிய மைத்ரி எனும் இந்த முதல் நாவலின் விமர்சன நிகழ்வில் பேச என்னை அழைத்தமைக்கு மகிழ்ச்சியும் வியப்பும் தோன்றுகிறது. காரணம் தமிழிலக்கியத்தை முன்வைத்து விரிவாகப் பேசுவதற்குரிய பின்னணி அறிவு எனக்கு இல்லை என்பது அஜிதனுக்கும் தெரியும் என்பதுதான். கவிதைகளும் கதைகளும் வாசிப்பவன் என்றாலும் பெரிய நாவல்களை வாசித்த அனுபவம் கூட எனக்கில்லை. இருந்தும் என்னை அழைத்தமைக்கு எனக்கு தோன்றும் ஒரு காரணம் உண்டு. அது இதுதான்.

அஜிதன் குழந்தையாக இருக்கையில் அவனை நான் முதலில் கண்ட நிகழ்வுடன் இணைத்துப்பார்க்கத்தக்கது என் வாசிப்பு. அது குற்றாலத்தில் தமிழ் மலையாளக் கவிஞர்களின் ஓர் உரையாடல் அரங்கில், இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அன்று அஜிதனுக்கு ஆறோ ஏழோ வயது. திடீரென்று அஜிதன் காணாமலானான். அனைவரும் திகைப்புடன் எல்லா இடங்களிலும் தேடினோம். இறுதியில் ஒரு சந்துக்குள் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கிராமத்து தேர் பார்த்து வியந்து நின்றிருந்த அஜிதனை கண்டுபிடித்தோம். பின்னர் அஜிதனை எப்போது பார்த்தாலும் அந்த தேருடன் இணைத்தே அஜிதனை நான் நினைவுகூர்கிறேன் என்று அண்மையில் ஜெயமோகன் பற்றி எழுதிய சியமந்தகம் என்னும் நூலில் இடம்பெற்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஏழாம் வயதில் அஜிதனுடன் சேர்ந்து நான் கண்ட அந்த அற்புதமான தேர்தான் இப்போது மைத்ரி என்னும் நாவலாக உருக்கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அறுபதம் நிறைந்த இமையமலைக்கு என்னை அழைத்துச்செல்லும் தேர் இந்த மைத்ரி. இதன் வாசிப்பனுபவம் தமிழர்களுக்கு கிடைக்குமளவுக்கு மலையாளியான எனக்கு அமையுமா என்பது எனக்கு சந்தேகம் உண்டு. ஆகவே ஒரு மலையாளியின் வாசிப்பனுபவத்தை அந்த எல்லைக்குள் நின்றபடி முன்வைக்கவே நான் முயல்கிறேன்.

இமையமலைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கேரளத்தில் அண்மையில் மிகவும் அதிகரித்துள்ளது. மதநம்பிக்கை சார்ந்த சார்-தாம் பயணங்களை விட இன்று அதிகரித்திருப்பது சுற்றுலாப்பண்பாட்டுடன் இணைந்த   இமையப் பயணங்கள். கூட்டம்கூட்டமாக இமையம் ஏறியிறங்குகிறார்கள். செல்பவர்கள் அங்கே இங்கிருந்து கொண்டுசெல்லும் குப்பைகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொழியில் அங்கிருந்துகொண்டுவரும் பயண இலக்கிய குப்பைகளை கொட்டுகிறர்கள். இமையமலையின் மகத்துவத்தையும் உன்னதத்தையும் மிகமிக குறைத்து அதை அருகிலிருக்கும் குன்றாக மாற்ற அவர்களால் இயன்றிருக்கிறது. மேலும் அதேபோன்றவர்களை அந்த மலைநோக்கி செலுத்தும் பயணவழிகாட்டிகளாக மாறியிருக்கின்றன ஒவ்வொரு நூலும்

இந்தப்பின்னணியில் இமையமலைக்கு நீங்கள் செல்லவேண்டாம், இங்கிருந்து நீங்கள் வாசிக்கும் இந்த கதையே இமையம்தான் என்று காட்டும் நூல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அஜிதனின் மைத்ரி அத்தகையது. தன் புனைவு வழியாக அஜிதன் உருவாக்கும் இமையத்தில் வாழ்வதற்குத்தான் வாசகனுக்கு தோன்றும். மொழியில் உருவாகும் இமையத்தில் இருந்து இறங்கி பருவடிவ இமைய மலையை ஆக்ரமிப்பதற்கான நம்முடைய துடிப்பை மிக அழகாக தடுக்கிறது என்பதுதான் மைத்ரியின் மிக முக்கியமான சிறப்பு என நான் கருதுகிறேன்

கலைஞன் காட்டும் இமையம் போதும், நேரில் சென்று பார்த்தால் அக்கனவு உடைந்துவிடும் என்று நான் முதலில் உணர்ந்தது என் இளமையில் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் போன்ற கதகளி நடிகர்கள் அரங்கில் ராவணன் கைலாய மலையை தூக்கி விளையாடும் கைலாசோத்தாராணம் ஆட்டத்தைக் கண்டபோதுதான். பலமணி நேரம் அந்த காட்சியை ஆடுவார்கள். அதை பார்த்தபடி அமர்ந்திருக்கையில் கற்பனையில் இமையமலை அடுக்குகள் நம்முள் விரிகின்றன. நேரில் காண்பதைவிட பேரழகு கொண்டவை அக்கற்பனையில் விரியும் மலைகள் என்று நம்மை நினைக்கவைக்க மாபெரும் கதகளிக் கலைஞர்களால் இயன்றது.

சற்று வளர்ந்தபின் தபோவன சுவாமிகள் எழுதிய இமையமலைப் பயணக்கட்டுரையான ஹிமகிரிவிஹாரம் வாசித்தபோது இமையத்திற்கு போகவேண்டிய அவசியமே இல்லை என்ற எண்ணமே வந்தது. அது ஒரு பயணக்கட்டுரை நூலாக இருந்தபோதிலும் இமையமலையின் மானுடத்திற்கு அதீதமான ஓர் அம்சத்தை எனக்கு உணர்த்தியது அந்நூல்.

அஜிதனின் மைத்ரி வாசித்தபோது ஹிமகிரி விஹாரத்தில் இருந்த பழைய ஒரு சிறுகுறிப்பு  எனக்கு உதவியாக இருந்தது. தபோவன சுவாமிகள் அந்நூலில் மிக அதிகமாகப் பயன்படுத்திய சொல் சிரத்தாதேவி என்பது. இன்றுபோல பயண வசதிகளேதும் இல்லாத 1920 களில் இமையத்தில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைத்துத்தான் செல்லவேண்டும். கவனத்தை , சிரத்தையை, தபோவன சுவாமிகள் ஒரு தெய்வமாக கண்டார். அந்த சிரத்தா தேவியின் மேலும் கச்சிதமான கவித்துவ வடிவம் இந்நாவலில் வரும் மைத்ரி என்னும் இளம்பெண் என்று எனக்கு வாசிப்பில் தோன்றிக்கொண்டே இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மிகக்கூர்ந்து கவனிக்கும்போது அஜிதனின் அழுத்தம் மைத்ரிபாவத்தில் (ஒருமையுணர்வில்)தான் அமைகிறது என்பது என்னை வியப்பிலாழ்த்தியது.

காளிதாசனின் குமாரசம்பவம் வாசித்தபோதும். ரோரிச்சின் இமையமலை ஓவியங்கள் பார்க்கும்போதும் இமையமலை மிக தொலைவிலுள்ள தொன்மையின் மர்மத்துடனேயே என்னுள் நீடித்தது. இதுதான் இமையம், இனி நான் அந்த மலையைச் சென்று பார்க்கவேண்டியதில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகின்றவைதான் பெரிய கலைப்படைப்புகள். கலையைவிட யதார்த்தம் பெரியது என்ற எண்ணத்தை உருவாக்குபவை  ‘மைனர்’ படைப்புகள். இத்தனை சுற்றுலாக் கட்டுரைகளுக்கு பின்னரும் அஜிதனின் மைத்ரி, இதோ இதுதான் இமையம், அங்கிருப்பதல்ல என்று என்னை நிறைவடையச்செய்தது. அந்த ஒரே காரணத்தாலேயே மைத்ரி என் பார்வையில் ஒரு ‘மேஜர்’ கலைப்படைப்பு.

ஒரு கலைப்படைப்பில் என்னென்ன இல்லை என்று எண்ணிப் பட்டியலிடும் செயலாக கேரளத்தில் இன்று வாசிப்பு மாறியிருக்கிறது. இந்தப்படைப்பில் அரசியல்சார்பில்லை, இதில் சமூகப்பொறுப்பு இல்லை, இதில் பெண்ணியம் இல்லை, இதில் தலித் சார்புகள் இல்லை, இதில் பின்நவீனத்துவ வடிவம் இல்லை  என்றெல்லாம். ஒருபடைப்பை நிராகரிப்பதற்கு இப்படி சில குறைபாடுகளை அதில் கண்டடைவது மலையாளத்தில் வழக்கம். தமிழிலும் அண்மையில் இந்த முதிர்ச்சியின்மை ஓங்கி வருகிறதா என ஐயப்படுகிறேன். எனக்கு கலைப்படைப்பில் இருப்பது என்ன என்பதே முக்கியம். அதைத்தேடி ஆழ்ந்து வாசிக்கையில் மைத்ரி எனக்கு முக்கியமான நூலாகிறது.ஏனென்றால் இது எனக்கு தீவிரமான ஓர் அனுபவமாக ஆகிறது.

இளமையை மிக இயல்பாக எழுதிச்செல்கிறது என்பதுதான் இந்த நாவலின் முதன்மையான சிறப்பு. இளமையின் பொறுமையின்மை மிகுந்த ஏற்புணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவலில். மைத்ரியின் கலைச்சிறப்பை மற்றொருவருக்கு சொல்லிபுரியவைப்பது கடினம். அவர்களுக்கு அந்த அம்சம் சற்று செயற்கையானதாகத் தெரியலாம். ரிஷிகேசில் இருந்து சோனாபிரயாகைக்குச் செல்லும் பேருந்தில் ஹரன் என்னும் தமிழ் இளைஞன் மைத்ரி என்னும் கட்வாலி இளம்பெண்ணை சந்திக்கிறான். சட்டென்று அவளுடன் நெருக்கமாகிறான். அவள் அவனை தன் வீட்டுக்கு கூட்டிச்செல்கிறாள். அங்கிருந்து அவர்கள் அவளுடைய பூர்விக ஊருக்குச் செல்கிறார்கள்.  இதுதான் கதையின் அடிப்படைச் சட்டகம். பஸ்ஸில் தற்செயலாகச் சந்திக்கும் ஓர் இளம்பெண் இத்தனை எளிதாக இத்தகைய ஒரு பயணத்திற்கு தயாராகும் அளவுக்கு நெருக்கமாவதன் இயற்கைத்தன்மையின்மை இன்னொருவருக்கு நாம் இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது தோன்றக்கூடும்.

ஆனால் நாவலை வாசிக்கையில் மிகமிக இயல்பான ஓர் அழைப்பாகவே அது நமக்கு அனுபவம் ஆகிறது. இமையமலையின் இயற்கையின் ஆழம் நோக்கி காதலின் அழைப்பு அன்றி வேறு எது இட்டுச்செல்ல முடியும்? அந்த அழைப்பை ஏற்று அங்கே இறங்கி அமிழ்ந்துசெல்லும் ஓர் இளைஞனின் தன்னறிதலின் (போத உதயத்தின்) கதையாக மைத்ரி மாறுகிறது. காதலின் இன்னொரு சொல்லே மாயை என்று கண்டடையும் இளமையைப் பற்றியது இந்நாவல். இமையமலைமுடிகள் காதலின் உச்சிவளைவுகள் அல்லவா, காளிதாசனின் குமாரசம்பவம் எழுதப்பட்ட காலம் முதலே?

நிலத்தை, இயற்கையை, இடத்தை எழுதுவதற்கு மலையாள இலக்கிய எழுத்துமரபில் அதிக இடமில்லை என்பது ஓர் உண்மை. நிலத்தில் இருந்து தொடங்கும் புனைவெழுத்துக்கள் மிக விரைவிலேயே மனிதகதையை சொல்வனமாக ஆவதை பல மலையாள நாவல்களில் காணலாம். இதற்கு மாறாக நிலத்தை உயிர்ப்புடன் கதையில் நிகழ்த்திய இரு படைப்பாளிகள் சி.வி.ராமன்பிள்ளையும் எஸ்.கே.பொற்றேக்காடும்தான். வைக்கம் முகமது பஷீர், தகழி, உறூப், எம்.டி. உட்பட மற்ற புனைவெழுத்தாளர்களின் படைப்புகளில் நிலம் ஒரு கதைமாந்தராக உருவெடுப்பதாகக் காணமுடிவதில்லை. மார்க்ஸிய சமூகவியல்-அழகியல் பார்வைகள் கேரள இலக்கியத்தில் செலுத்திய செல்வாக்கின் விளைவாக இவ்வாறு நிலச்சித்திரங்கள் மனிகதைகளாக மாறுகிறது என்று தோன்றுகிறது.

அஜிதனின் மைத்ரி என்னை கவர்வதற்கான காரணம் நிலம் அதன் அத்தனை நுண்விவரணைகளுடனும் கதாபாத்திரமாகவே இந்நாவலில் வருகிறது என்பதுதான். இதில் மைத்ரியுடன் ஒப்பிடத்தக்க முன்னோடி உதாரணமான படைப்பு பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் ஆரண்யக் நாவல் (தமிழில் வனவாசி) ஆரண்யக் நாவலும் சரி, மைத்ரியும் சரி மனிதனை மையமாக்கிய புனைவெழுத்துமுறையில் இருந்து விலகிச்சென்று இயற்கையை மையமாக்கிய புனைவெழுத்துமுறை கொண்டவை. அந்த வேறுபாடே மலையாளியாகிய எனக்கு ஆர்வமூட்டும் வாசிப்பாக அமைந்தது

இந்நாவலில் முக்கியமானது என நான் கருதும் ஒன்றைச் சொல்லி இப்பேச்சை நிறைவுறச்செய்கிறேன். இமையம் எப்படி பண்பாட்டுரீதியாக இந்தியாவையும், உலகையேகூட ஒன்றாக்குகிறது என்று ஏராளமான நுண்குறிப்புகள் வழியாக அஜிதன் இந்நாவலில் காட்டுகிறார். நாலாவது அத்தியாயத்தின் இறுதியில் சௌந்தரிய லஹரியும் சங்கரரும் புனைவின் ஓட்டத்தில் இயல்பாக தோன்றுகிறார்கள். மைத்ரி சொன்னதன்படி சோனா பிரயாகில் நாகேந்தர் தாதாவின் குதிரைலாயத்திற்கு ஜீப்பில் சென்று இறங்கி ஹரன் செல்லும் இடம். ஜீப்பில் இருந்து இறங்கிய பயணியாகிய கட்வாளி பெண்ணிடம் ஜீப் ஓட்டுநர் ஏதோ சொன்னபோது அவள் சிரித்து புருவத்தை வில்போல வளைத்து ஏதோ பதில் சொன்னாள். உடனே சௌந்தரிய லகரியின் மன்மதனின் வில் போன்ற புருவங்கள் என்னும் வர்ணனை ஹரனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆதிசங்கரர் கேதார்நாத்துக்கு செல்லும்போது தன் வயதுதான் அவருக்கும் என்று ஹரன் எண்ணிக்கொள்கிறான். புருவம் வளைத்து சிரிக்கும் இந்த கட்வாலி பெண்ணின் மூதன்னையரில் எவரையாவது ஆதிசங்கரர் பார்த்திருக்கலாம். மலையாளியாகிய ஆதிசங்கரும் தமிழ்நாட்டு இளைஞனாகிய ஹரனும் கட்வாலி பெண்ணின் புருவங்களுக்கு கீழே ஒருவரை ஒருவர் கண்டடைகிறார்கள். இருவருக்கும் அவர்களுக்குரிய அழகியல் பரவசங்கள் உருவாகின்றன.

ஐந்தாம் அத்தியாயத்தில் கட்வாலி கிராமத்தில் கேட்ட மசக்பின் என்னும் குழல்வாத்தியத்தைப் பற்றிச் சொல்லும்போது ஸ்காட்லாந்தில் இருந்து வந்த அந்த இசைக்கருவி உத்தரகண்ட் பண்பாட்டின் பகுதியாக மாறியது எப்படி என்று ஹரனின் உள்ளம் தேடிச்செல்கிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து கட்வாலிகள் அந்த இசைக்கருவியை கற்று அதை கட்வாலி நாட்டாரிசைக்கு பழக்கப்படுத்துகிறார்கள்.   மனிதன் இந்த மலையில் வாழவேண்டுமென்றால் இந்த இசை இருந்தாகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

இமையமலையின் தேவதாரு மரங்களைப் பற்றி விவரிக்கும்போது ஆறாம் அத்தியாயத்தில் ஓங்கி வளர்ந்து நின்றிருக்கும் அவற்றை பற்றிய வர்ணனையில் கேரளத்தின் பூரத்திருவிழாக்களில் அடுக்கடுக்காக விரியும் குடைகளைப் பற்றி ஹரன் எண்ணிக்கொள்கிறான். உத்தரகண்டின் மலையடுக்குகளில் வரும் ஃபுல் டேயி என்னும் வசந்தவிழாவை கதாசிரியர் விவரிக்கையில் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் பூக்கோலம் அமைக்கும் ஓணத்தைப் பற்றி மலையாளி வாசகன் எண்ணாமலிருக்க மாட்டான். வனதேவதைகளின் பின்னால் சென்ற ஜிது பட்வலின் கதையை வாசிக்கையில் இடைசேரியின் பூதப்பாட்டும் டபிள்யூ.பி.யேட்ஸின் அலையும் ஈஞ்சஸ் தேவனின் பாடல் வரை (Song of wandering Aengus) நினைவிலெழுகிறது. கட்வாலி தனித்தன்மையை தொட்டு காட்டும்போது இப்படி உலகநாகரீங்களின் சங்கமம் ஆக இமையத்தை வாசகன் உணரும்படிச் செய்ய ஆசிரியரால் இயன்றுள்ளது இந்நாவலில்.

மைத்ரியின் இந்த வாசிப்பனுபவத்தை வாசகர்களிடம் நேரில் மலையாளத்தில் சொல்லவேண்டும் என எண்ணி பயணத்திற்கு நான் தயாரான நேரத்தில் எதிர்பாராதபடி என் அம்மா மறைந்தார். அம்மாவுக்கு 85 வயது, ஆனால் குறிப்பிடத்தக்க நோய் எதுவும் இருக்கவில்லை. சட்டென்று வந்த மரணம். தாராசங்கர் பானர்ஜியின் பிங்கலகேசினி அம்மாவை வந்து அழைத்துச்சென்றார். ஆகவே என்னால் சென்னைக்கு வர இயலவில்லை, இந்த தருணத்தில் மைத்ரி வாசிப்பனுபவத்தை முன்வைத்தேயாகவேண்டும் என்பதனால் சுருக்கமாக எழுதி அனுப்பியிருக்கிறேன்.

மரணத்தினுடையதானாலும் வாழ்வினுடையதானாலும் வாசல்களெல்லாம் திறப்பது நாம் எண்ணியிராத கணங்களில்தான். ஸோனாபிரயாகிற்குச் செல்லும் பஸ்ஸில் அஜிதனின் கதைநாயகன் ஹரன் அமர்ந்திருப்பதுபோல அடுத்த கணத்தை எதிர்நோக்கி நாமனைவரும் சென்றுகொண்டிருக்கிறோம்

 

முந்தைய கட்டுரைஇலக்கிய உரையாடல்கள் -சுரேஷ் பிரதீப்.
அடுத்த கட்டுரைசு.வேணுகோபால், தன்னறம் விருது