இந்தப் புத்தகக் கண்காட்சியில் – சுனில் கிருஷ்ணன்

கவிஞர் பெருந்தேவியின் ‘கவிதை பொருள்கொள்ளும் கலை’ இந்த கண்காட்சியில் வெளியாகும் மிக முக்கியமான நூல்களில் ஒன்று என கருதுகிறேன். அவரது முந்தைய கட்டுரை நூல்களான ‘உடல் பால் பொருள்’ ‘தேசம் சாதி சமயம்’ ஆகியவை எனக்கு அவரது கவிதைகள் அளவிற்கே முக்கியமானவை. ‘உடல் பால் பொருள்’ பெண்ணியம் குறித்த வரையறைகளும் புரிதல்களும் ஆண் – பெண் எனும் இருமைக்கு அப்பால் எந்த அளவிற்கு பரிணாமம் அடைந்துள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. படைப்பு மனதிற்கு பொதுவாக கோட்பாடுகளின் மீது ஒரு வித மனவிலக்கம் இருக்கும். ரசனையில் உவக்காத படைப்புகளை கோட்பாட்டாளர்கள் தங்களது சட்டகத்திற்கு பொருந்துகிறது என்பதால் கொண்டாடுகிறார்களோ எனும் ஐயம் அது.  இந்த  தொகுப்பில் அத்தகைய கற்பிதங்களை பெருந்தேவியின் கட்டுரைகள் தகர்த்தன.

நல்ல கவிதைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நெருக்கமாக புரிந்து கொள்ளவும் கோட்பாடுகள் எப்படி உதவும் என்பதை இக்கட்டுரைகளில் காட்டுகிறார். குறிப்பாக பிரம்மராஜன், ஆத்மாநாம், நகுலன், ஞானக்கூத்தன் ஆகியோரது கவிதைகளின் சில கூருகளை கவனப்படுத்தி எழுதிய கட்டுரைகள் எனக்கு புதிய திறப்புகளை  அளித்தன. அவர்களின் கவிதைகளுக்கான வாயிலை திறந்து விட்டன. சேரனின் கவிதைகளை முன்வைத்து போர் திணை பற்றிய உரையாடலாகட்டும், பாரதி மகாகவியா எனும் உரையாடலையொட்டி எழுதிய  கட்டுரை   ஆகட்டும், ரசனையையும் கோட்பாட்டு புரிதலையும் ஒருங்கிணைத்து சில திறப்புகளை அளிப்பதாக  உள்ளன.

‘கவிதை பொருள் கொள்ளும் கலை’ , கட்டுரைகள்- பெருந்தேவி
எழுத்து பிரசுரம்

எழுத்தாளர் தமிழ் பிரபாவின் இரண்டாவது நாவல் ‘கோசலை.’  இந்த புத்தக கண்காட்சியில் பரவலாக கவனிக்கப்படும் என நம்புகிறேன். சிந்தாதிரிப்பேட்டை தான் களம். கூன் முதுகும், குள்ள உருவமும் கொண்ட கோசலை எனும் நூலகர்தான் நாயகி. புறக்கணிப்புகளும், அவமானங்களும், பச்சாதாபங்களும் நிறைந்த கோசலையின் வாழ்க்கை போராட்டம் தான் கதை. அவளுக்கு இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. காதலை வென்றெடுக்கிறாள், பிள்ளை பெறுகிறாள். அத்தனை இக்கட்டுக்களையும் மீறி தனக்குள்ளாக ஆற்றலை கண்டுகொள்கிறாள். அந்த ஆற்றலை தான் சரியென நம்பும் பொது நன்மைக்காக செலவிடுகிறாள்.
எளிய இலட்சியவாதியாக  கோசலையின் ஆளுமையை சுருக்காமல் அவளை அவளது ஏற்ற இறக்கத்தோடு முழு ஆளுமையாக கட்டமைத்ததில் பிரபா வெற்றி கண்டுள்ளார். நான் வாசித்த சமீபத்திய நாவல்களில் ஒரு கதை மாந்தரோடு இந்த அளவிற்கு ஒன்றியதில்லை.

‘கோசலை’ – நாவல்- தமிழ்ப்பிரபா
நீலம் வெளியீடு 
முந்தைய கட்டுரைஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனசாட்சியும் வரலாறும்- கடிதம்