யோக முகாம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

யோகா முகாமில் பங்கு கொண்ட அனுபவம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன்.

ஆண்டிறுதி வேலைகள் நேற்று இரவு வரை நீண்டதும் அடுத்ததாக எந்த பயிற்சியையும் தொடர்ச்சியாக செய்யும் மனநிலை அமைந்ததில்லை ஏழு நாட்கள் சீராக பயிற்சி மேற்கொண்டதன் தொடர்ச்சியாக இந்த அனுபவ பகிர்வு.

நவம்பர்  மாத பயிற்சிக்காக விடுமுறைகளை ஈட்டிக் கொண்டு அன்றைய தினம் அத்தனை வேலைகளையும் செய்து முடித்து ஈரோடு வண்டியில் அமர்ந்த பின்னர் ஏதோ நினைவில் மின்னஞ்சலை பரிசோதித்தால் யோகா முகாம் ரத்து செய்யப்பட்டதற்கான மின்னஞ்சல் வந்திருந்தது இந்த முறை பேருந்த்தில் ஏறியவுடன் மின்னஞ்சலை பரிசோதித்தேன் அந்தியூர் மணி அவர்களிடம் தொலைபேசியில் அழைத்து ஒரு குறைந்த பட்ச உறுதியுடன் திருப்பூர் வந்தடைந்தேன்.

அந்தியூரிலிருந்து சென்ற பேருந்து பயணம் மிக இனிய ஒரு நினைவாக நீடிக்கும் என நம்புகிறேன்,ஒரு நீளமான மலர்மாலை தொடுக்கப்படுவதை பார்ப்பது போல் பேருந்து செல்ல செல்ல அடுக்கு  அடுக்காக கண் முன் மலை எழுவதை காணும்  பொற்  கணங்கள் வாய்த்தன.

சௌந்தர் அவர்கள் மிக லகுவாக எங்களை கையாண்டார்,யோகாவை பற்றிய அவரின் அறிமுக உரை  உடல்,ஆற்றல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் அவர் வகைப்படுத்திய விதம்,தொடர்ந்து இந்திய தரிசங்களில் ஒன்றான சாங்கிய மரபு குறித்து அவர் கொடுத்த விளக்கம் புருஷன் ப்ரக்ருதி எனும் பேரியர்க்கை அதன் விளைவாக உருவான மகத் என்னும்  24 தத்துவங்கள் என இந்த இயற்கை தோன்றிய விதம் குறித்த அவருடைய விவரணை,யோக  பயிற்சியின் நோக்கம்  பேரியற்கையிலிருந்து மீண்டும் ஆதி புருஷனை   ஐக்கியம் நோக்கிய பெரும் பயணத்தின் முதல் அடி என அவர் சொல்லி முடித்த போது நான் யாரிடம் கற்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது.

தொடர்ச்சியாக உடல் சார்ந்த பயிற்சிகள், யோகா மரபில் வயிறு மற்றும் முதுகு பகுதிகளின் முக்கியத்துவம்  அவற்றின் இறுக்கத்தை தளர்த்தும் பயிற்சிகள்,வாதம் கபம் பித்தம் என மூன்று வகைகளில் ஆயுர்வேதம் வழியாக ஒருவரை வகைப்படுத்தி அவருக்கான பயிற்சிகளை பரிந்துரைத்தது,பின்னர்  பிராணன் என்னும் ஆற்றலை நெறிப்படுத்தும் மூச்சு  பயிற்சிகள் அவற்றை முறையாக அவதானிப்பதன் முறைகள் ,மூன்றாவதாக மனதின் இறுக்கத்தை தளர்த்தும் யோகா நித்ரா மற்றும் அந்தர் த்யானம் என மூன்று நாட்களும் குருஜி எங்களுக்கு அளித்துக்  கொண்டே இருந்தார்.

ஒன்று கவனித்தேன் எதிர்மறையாக ஒரு சொல்லும் அவர் பேசவில்லை என் பக்கத்தில் இருந்த நண்பர் யோகாவின் கலை சொற்களை அறிந்தவர் என நினைக்கிறேன் குருஜியிடம்  கேள்வி கேட்டு அவர் பதில் சொல்வதற்குள் இவரே பதில் சொன்னதையும் கவனித்தேன் அப்போதும் குருஜி புன்னகையோடு அதை எதிர் கொண்டு   கடந்து சென்றார்.

ஒரு வாரம் கடந்த நிலையிலும் நான் தங்கிய அறையின் முன் எழுந்தோங்கி நின்ற மலை முகடு,பின்பகலின் வெயில்,குறுகி நிற்க வைத்த குளிர், உணவு மற்றும் தேநீர் இடைவேளைகள் ,உடனிருந்த நண்பர்களின் முகங்கள்  என நினைவுகள் வந்து நிறைக்கிறது, எனக்கான ஒரு துண்டு வானத்தை,சில மழை நீர் துளிகளை,இறுதி வகுப்பில் குருஜி சௌந்தர் அவர்கள்  சொன்ன சொற்களையும்  என்னோடு சேர்த்து எடுத்து கொண்டு ஊர் திரும்பினேன்.

ஒரு நேர்மறையான  ஆளுமை அதற்கு இணையான பல ஆளுமைகளை உருவாக்குவது பெரும் மகிழ்வை அளிக்கிறது.

உங்களுக்கும் குருஜி சௌந்தருக்கும் உடனிருக்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள்.

அன்புடன்

சந்தோஷ்

*

அன்புள்ள சந்தோஷ்

உண்மையில் எந்த ஒரு மெய்யான கல்விக்கும், ஒரு பயணம் தேவை. ஒன்றின்பொருட்டு ’கிளம்பிச்செல்லுதல்’ என்பது ஓர் அரிய அனுபவம். நாம் வாழுமிடம் நம் அன்றாடத்தால் நிறைந்துள்ளது, பழகிப்போயிருக்கிறது. அதிலிருந்து விடுவித்துக்கொண்டு ஒரு பறந்தெழல் தேவையாகிறது. புதியசூழல் மனதை புதியதாக்குகிறது. அதன்பின் நிகழும் கற்றல் மிக ஆழமானது. நான் அவ்வண்ணம் கிளம்பிச்சென்ற பொழுதுகள் எல்லாமே இன்று எண்ணும்போது அக்கல்வி அளவுக்கே முக்கியமானவையாக உள்ளன. அதைத்தான் இந்த முகாம்கள் வழியாக உத்தேசிக்கிறேன்.

முந்தைய கட்டுரைமக்கள், பாமரர்- இன்று
அடுத்த கட்டுரைமறுமை, கடிதம்