“உலகப் படைப்பாளிகள் பூராவுமே, தன்னையும் தன் சமூகத்தையும் கடைந்து கடைந்து, அமுதத்தையும் விஷத்தையும் காட்டி, ஏதோ ஒரு வகையில சமூகத்தை முன்னெடுத்துத்தான் கொண்டுபோயிருக்கான். வால்மீகி படைப்பாளி ஆகலைனா, அவர் வேற ஒன்னா இருப்பார். நானும் கூட அப்படித்தான். ஆனால் அந்தப் படைப்பு மானுட சமூகத்துக்கு எப்போதுமே ஒரு கனிவு, அல்லது ஒரு தாய்மையைச் சுரந்து கொடுத்துகிட்டேதான் இருக்கும். அதை நோக்கத்தான் எல்லா படைப்பாளியும் எழுதுறான். மணிமேகலைல, அந்த படைப்புல எத்தனைகுறைபாடுகள் இருந்தால்கூட, அதுல அமுதசுரபி என்கிற ஒரு கற்பனை வடிவம் இருக்கில்லீங்களா, அது நாம எங்க பசியைப் பார்த்தாலும், நாம ஒரு ரூபாய் எடுத்துப் போடுறோமில்ல, அது அமுதசுரபிதான்.
எனவே, இந்த உலகத்தினுடைய பெரும்கனவுகள், இந்த சமூகத்தின் மீதான மாபெரும் அக்கறையினால்தான் முந்தைய படைப்பாளிகளெல்லாம் இன்னிக்கு முன்னாடி நிற்கறாங்க. அந்தக் கனவுகளோட ஒரு படைப்பாளி எண்ணும்போதுதான், இன்னிக்கு இல்லைனாலும் ஒரு ஐம்பது வருஷம் கழித்து அவன் பேசப்படுவான். அப்படித்தான் புதுமைப்பித்தனைப் பேசிட்டிருக்கோம். அப்போ, அந்த தார்மீக உணர்விருக்கில்லீங்களா, அதோட எந்த படைப்பாளியும் செயல்படணும். சில அற்ப சந்தோசங்கள் வரும் போகும். அவன் அங்கீகரிக்கலை, இவன் அங்கீகரிக்கலை, இவன் பப்ளிஷ் பண்ணலை, இதைப் பற்றிக் கவலைப்படாம, அதை நோக்கிப் போயிட்டே இருக்கவேண்டியதுதான். படிக்கிறவன் படிக்கட்டும். படிக்காதவன் போகட்டும். ஆனால், மாபெரும் அந்த இடத்தை தரிசிக்கணும்கிறதுதான் என்னோட கனவு”
எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் பதாகை இதழுக்குத் தந்த நேர்காணலில் உரைத்த வார்த்தைகள் இவை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகளால் மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்பைத் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார் சு.வேணுகோபால் அவர்கள். அவ்வகையில் இவரை புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன் என நீளும் நவீனத்துவ சிறுகதைப் படைப்பாளிகள் வரிசையின் சமகாலத்திய முன்னோடி ஆளுமை எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். இவர், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் தூண்டப்பெற்று எழுதத் தொடங்கியவர்; எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களால் தாக்கம்பெற்றுத் தன்னுடைய இலக்கியப் பார்வையை வகுத்துக்கொண்டவர்.
தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இவ்விருது, படைப்பாளுமை சு.வேணுகோபால் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
வருகிற ஜனவரி 8ம் தேதி சென்னையிலுள்ள கவிக்கோ அரங்கில் இதற்கான நிகழ்வு நிகழவுள்ளது. இவ்விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் விருதாளருக்கு வழங்கப்படுகிறது. மேலும், சமகால இளம் வாசிப்புமனங்கள் ஆயிரம் பேருக்கு சு.வேணுகோபால் அவர்களின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ தொகுக்கப்பட்ட புத்தகமும் விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தையும் முன்னெடுக்கிறோம். மேலும், சு.வேணுகோபால் அவர்களின் தன்னுபவப்பகிர்வு நேர்காணலும் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகிறது.
காணொளி இணைப்பு:
அசாத்தியமான தன்னுடைய இலக்கியப் பங்களிப்பின் காரணமாக சமகாலத்தில் இன்றியமையாத இலக்கிய ஆளுமையாக உயர்ந்துநிற்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும், உயிர்ப்புமிகு தனது படைப்புகளாலும் மொழிபெயர்ப்புகளாலும் நல்லதிர்வின் நீட்சியைப் பரப்பிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும், சமகால முதன்மைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவரும் ‘தமிழினி’ இதழின் ஆசிரியருமான கோகுல் பிரசாத் அவர்களும் இவ்விருதளிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கிறார்கள். இலக்கியத் தோழமைகள் மற்றும் நண்பர்கள் பங்கேற்கும் ஓர் நற்தினமாக அந்நாள் தன்னளவில் முழுமைகொள்ளும் என்று நம்புகிறோம்.
மனித அகத்தின் ஆழங்களையும் சலனங்களையும் மண்ணுயிர்ப்புடன் இலக்கியத்தில் பதியமிட்ட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளுமையை மனமேந்திக் கொண்டாடும் இந்நிகழ்வுக்கு தோழமைகள் அனைவரையும் நிறைமகிழ்வுடன் அழைக்கிறோம். நம் எல்லோரின் நல்லிருப்பும் இந்நிகழ்வுக்கான நிறையாசியாக அமையும். எப்பொழுதும் துணையருளும் எல்லாம்வல்ல இறையும் இயற்கையும் இப்பொழுதும் உடனமைக!
~
நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in