அன்புள்ள ஜெ
முதலில் இத்தனை தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இந்த வகுப்பு சென்னையில் நடக்கின்றது என்று தவறாகப் தொடர்புகொண்டேன்.
வேலையில்லாத நிலையில் இது பெரிய செலவாகத்தோன்றும் அதே நேரம் sponsorship பெற்று பங்கேற்கும் அளவுக்குத் தீவிரத்தேடல் கொண்டுள்ளேமா நாங்கள் என்பதில் கொஞ்சம் சந்தேகம் கொண்டுள்ளேன். இந்த வாய்ப்பு சரியானவர்க்கு பயன்பட வேண்டும் என எண்ணுகின்றேன்.
எனவே காத்திருக்க முடிவெடுத்துவிட்டேன். இந்த வகுப்பு உங்களுக்கும் பங்கேற்போர்க்கும் எல்லா நலன்களையும் பயக்க என் வாழ்த்துக்கள். தங்களுக்கும், தங்கள் மனைவிக்கும், மகன் மற்றும் மகளுக்கும், தங்கள் நலனை வேண்டும் அனைவர்க்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல உடல்நலமும் மனநலமும் அனைத்து வளங்களும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகிறன்.
நன்றி
கௌரி.
***
அன்புள்ள கௌரி
தத்துவ வகுப்புகள் உண்மையிலேயே தேடலும் உழைப்பும் கொண்டுள்ளவர்களுக்குச் செல்லவேண்டும் என்னும் எண்ணம் என்னிடமுள்ளது. ஆகவேதான் இந்த வகுப்புகளை கட்டணத்துடன், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்துகிறேன்.
தத்துவக் கல்வி என்பது உண்மையில் தத்துவம் என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கான கல்வி அல்ல. எல்லா அறிதல்களையும் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் நிகழ்த்திக் கொள்வதற்கான பயிற்சி. அது சிந்தனைப் பயிற்சியேதான். அதற்கு வெறுமே ‘தெரிந்துகொள்வது’ மட்டும் உதவாது. அதற்குமேல் பல செயல்முறைகள் தேவை. வழிகாட்டுதல்களும் தேவை. ஆகவேதான் இதை நேரிலன்றி செய்யமுடியாது என்னும் நிலை உலகமெங்கும் உள்ளது.
அத்துடன் இந்தப் பயிற்சி மெய்யியலையும் உள்ளடக்கியது. தோராயமாகவும் உதிரிக்கருத்துக்களாகவும்தான் நாம் இதுவரை மெய்யியல், ஆன்மிகத்தை அறிந்துகொண்டிருக்கிறோம். அதை முறையாக அறிந்துகொள்வதற்கும், நாமாகவே அதி முன்னகர்வதற்குமான பயிற்சி இது. அதை எவரும் அதற்கான நேரம், உள்ளம் ஒதுக்காமல் கற்றுக்கொள்ள முடியாது.
கடுமையான உளச்சோர்வில் உள்ளவர்கள், நோய்கள் கொண்டவர்கள், கடுமையான எதிர்மனநிலைகளோ கடுமையான பற்றுகளோ கொண்டவர்கள் தத்துவக்கல்வியை அடையமுடியாது. தத்துவக் கல்விமேல் நம்பிக்கை இல்லையென்றாலும் அதை கற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே சென்னையிலேயே வகுப்புகள் நடைபெற்றாலும் நீங்கள் மேலோட்டமான மனநிலையில் அங்கே செல்லாமலிருப்பதே நல்லது. அது உங்களுக்கு பயனளிக்காது.
ஜெ