சரஸ்வதி ராம்நாத்

பெங்களூரில் பாவண்ணனுடன் சென்று சரஸ்வதி ராம்நாத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். அன்று பிரேம்சந்தின் கோதான் நாவலை மொழியாக்கம் செய்துவிட்டு அதை சாகித்ய அக்காதமி வெளியிட நீண்டநாட்கள் எடுத்துக்கொள்வதைப் பற்றி கவலைப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். உடல்நிலையும் நலிந்திருந்தது. நாவல் பின்னர் வெளிவந்தது. அவர் அதன்பின் அதிகநாள் உயிர்வாழவில்லை.

பழைய மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவகை தவவாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை பொதுவாசிப்பில் ஈடுபட்ட பெரும்பான்மை அறிந்திருப்பதில்லை. தீவிரவாசிப்பு என அன்று சொல்லப்பட்ட சிற்றிதழ்ச்சூழலில் ஒரு சிறுஎண்ணிக்கையிலான நூல்களே வாசிக்கப்பட்டன. பெரும்பாலும் தமிழ் நவீனத்துவ நூல்கள். அதன்பின் அதையே பன்னிப்பன்னிப் பேசுவது, பூசலிடுவது.

நடுவே கிளாஸிக் என சொல்லத்தக்க படைப்புகள் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டன. அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள் அவை அச்சில் வரவே பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சில் வந்த நூல்கள் எவருமே கவனிக்காமல் மட்கி மறைந்தன. மறுபதிப்பு வருவதே இல்லை. தமிழின் முக்கியமான விமர்சகர்கள் எனப்பட்ட க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பிரமிள், வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் எவரும் மொழியாக்க நாவல்களைப் பற்றிப் பேசியதில்லை.

(அந்த நிலையை பெருமளவு மாற்ற என்னுடைய பங்களிப்பு முதன்மையானது என்னும் பெருமிதம் எனக்குண்டு. தமிழுக்கு வந்த பெரும்படைப்புகளான அக்னிநதி, ஆரோக்ய நிகேதனம், மண்ணும் மனிதரும், ஊமைப்பெண்ணின் கனவுகள், நீலகண்ட பறவையைத் தேடி, வாழ்க்கை ஒரு நாடகம், தர்பாரி ராகம், சிக்கவீரராஜேந்திரன், சாந்தலா, சதுரங்கக்குதிரை, கயிறு, ஏணிப்படிகள்  போன்ற நாவல்களைப் பற்றிய முதல்கட்டுரைகளை பெரும்பாலும் நான் எழுதினேன். அவற்றைப் பற்றிய உரையாடலை தொடர்ச்சியாக நிலைநிறுத்தினேன். அவை பயனும் அளித்தன.ஒரு வாசகத் தலைமுறை உருவாகி வந்தது)

சரஸ்வதி ராம்நாத் தன் நூல் அச்சில் வருவதைக் காணும் இன்பம் அன்றி மொழியாக்கத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொண்டதில்லை. அன்று எழுதப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று மறைந்துவிட்டன. ஆனால் பெரும்படைப்புகளின் மொழியாக்கங்கள் நீடிக்கின்றன.

சரஸ்வதி ராம்நாத்

சரஸ்வதி ராம்நாத்
சரஸ்வதி ராம்நாத் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா பதிப்பு ,கடிதம்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியும் ஐயங்களும்