நீலி மின்னிதழ்
அன்பு ஜெ,
“அன்பு” பற்றிய ஒரு உரையால் இந்த வருட விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தியின் பதில்களில் அது தெரிந்தது. கமலதேவியின் அமர்வில் அது நேரடியாக பேசப்பட்டது. ஏன் அன்பை எழுதுகிறீர்கள், ஒளி நோக்கி, மனிதர்களின் மேலான நம்பிக்கையை நோக்கி எழுதுகிறீர்களே என்ற கேள்விக்கு, “நான் இருளிலிருந்து தான் ஆரம்பிக்கிறேன் அது ஒளியை நோக்கி சென்று முடிகிறது” என்றார். ஆம் அன்பின் பக்கம் நின்று கொண்டிருப்பவர்கள் முதலில் கண்டு திகைப்பது அன்பின்மையால் நிகழ்த்தப்படும் வன்முறையைத்தான். அதில் பிறக்கும் கேள்விகள் வழியாகவே அவர்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள். இவான் கார்த்திக் கமலதேவியிடம் “அன்பு என்பது மனிதனுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று தானே” என்று கேட்டபோது “இல்ல. நான் அப்படி நினைக்கல. அது இயல்பாகவே நமக்கு இருக்குது” என்றார் சுருக்கமாக.
விஷால்ராஜா கமலதேவியின் கதைகள் பற்றிய தன் விமர்சனக்கட்டுரையில் //பரிவுணர்ச்சிக்கும் அன்புக்கும் நடுவே இருக்கக்கூடிய வேறுபாடு துலக்கம் பெறாதபோது வாகர் ஏமாற்றப்பட்டதாகவே உணர்வார். ஏனென்றால் துயர் கண்டு பரிவு கொள்வது அசாத்தியமான செயல் அல்ல. மேலும் அது அறிவுரை மட்டுமே. சாலையில் யாசகம் கோருபவர்களை காணும் பல கண்கள் பரிவுணர்ச்சி கொள்கின்றன. ஆனால் அன்பு செய்வது பரிவுணர்ச்சி போல எளிமையாக நிகழ்வதன்று. அன்பை தரவும் பெறவும் பயிற்சி தேவைப்படுகிறது. அதில் நீடித்து தரிக்க வேண்டியுள்ளது. நம்மில் ஒரு பகுதியை இழக்க வேண்டிவருகிறது. அதற்கான துணிச்சலை கமலதேவியின் சிறுகதைகள் வெளிப்படுத்தவில்லை.// என குறிப்பிட்டிருந்தார். இதை முன்வைத்து சுனில் கிருஷ்ணன் கமலதேவியிடம் “நீங்க அன்பு என்று சொல்வதை விஷால் ராஜா பரிவு என்று சொல்கிறாரே. நீங்க என்ன சொல்றீங்க இதைப்பற்றி” என்று கேட்டார். கமலதேவி எல்லாக் கேள்விகளுக்கும் சட்டென எதிர்வினையாற்றுவதைப் போல “ஓ.. அவர் அப்படி பரிவுன்னு சொல்றாரா. நான் இரண்டையும் பிரிச்சுப்பாக்கல. ஒன்னு இன்னொன்னோட வடிவம் தான. பரிவு தொடக்கம்ன்னா அன்பு முடிவு. அப்படி வசதிக்காக பிரிச்சுக்கிட்டாலும் ஒன்னு தான்” என்றார் இயல்பாக. அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் அறிவார்ந்த தளத்தில் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டெஃபனிஷன் உள்ளது. ஒரு திட்டவட்டமான வரையறை உள்ளது. போட்டித்தேர்வுகளுக்காக அவற்றை பட்டியலிட்டு உதாரணங்களை விளக்கி கோட்பாடுகளை தத்துவாதிகளை துணைக்கு அழைத்து என அவற்றை மயிர் பிளக்கும் விவாதம் செய்திருக்கிறோம். நேர்காணலிலும் இத்தகைய உணர்வுகளுக்கான வரையறையை ஒருவன் உணர்ந்து வைத்திருக்கிறானா என்று அறிவதற்கான கேள்வி ஒன்று கேட்கப்படும். காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூட புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். காதலும், காமமும் ஒன்றையொன்று முயங்கும் என்று தான் நினைத்திருக்கிறேன். அதில் இருக்கும் வேறுபாடு கூட எனக்கு முதலில் ஒவ்வாததாக இருந்தது. எதை அறிவார்ந்து அணுகினாலும் ஏதேனும் கோட்பாட்டைக் கொண்டு நிறுவிவிடலாம் என்ற கருத்துக்கு ஏற்ப அதையும் நிறுவிக் கொண்டேன். ஆனால் காமத்திற்கும் ஒன் நைட் ஸ்டாண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்ற சிந்தனை ஒன்று என் முன் வந்து ஒரு நாள் நின்ற போது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கலாச்சார அதிர்ச்சி என்று சொல்லமாட்டேன் மாறாக உணர்வுகளின் முன்னான அதிர்ச்சி என்பேன். காதலின் உச்சபட்ச வெளிப்பாடு தானே காமம். அப்படியெல்லாம் அறிவார்ந்து பிரித்துக்கொள்ளாத ஒருவன்/ஒருத்தி பாதிக்கப்படும்போது அதை அறிவார்ந்து மதிப்பிட்டு கடந்து போகலாம், அதுவல்லாமல் அதை பரிகசித்து, எதிரில் அப்படியெல்லாம் சிந்தனை செய்யாமல் அவன்/ளுக்கு துன்பம் விளைவித்தவனை கடக்கலாம்.
தொடாதவளை, வெறுமே பார்த்துக் கொண்டவளை மட்டுமே நினைத்து காலம் முழுமைக்கும் தீற்றலாக வைத்து வாழ்வை நசித்துக் கொண்ட ராஜமார்த்தாண்டன்களை, மாற்றான் மனைவியின் மேல் வந்த காதல்/காமத்திற்காக தன் சொந்தங்களை இழந்து, தன் நாட்டை, தன் பத்து தலையை இழந்த காதலனை அது ஏளனம் செய்வதாகப் பட்டது. அவனை நோக்கி “ஏண்டா சீதா ஆச்சி தான் இந்த ஒலகத்துலயே பொண்ணா?” என ஒரு இருபத்தியொராம் நூற்றாண்டு ஆள் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கலாம். அன்பை எந்த ஒளிவு மறைவுமின்றி கண்பிப்பவர்களை, ஏங்குபவர்களை, கரைந்து அழுபவர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கை இந்த காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரையும், ஒவ்வொரு உரையாடலையும் அறிவார்ந்து மதிப்பிடும் மனிதர்கள் எனக்கு விலக்கமே அளிக்கிறார்கள். அத்தனை அலர்ட்டாக ஏமாறாமல் இந்த உலகத்திலிருந்து, மனிதர்களிடமிருந்து தப்பித்து அவர்கள் அடைவது என்ன? மிகப்பெரிய ஏமாற்றம் தரும் வலியை, அந்த மத்துறு தயிர் தரும் வலியை அனுபவிக்காமல் வாழ்க்கையில் என்ன?
நான் ஒளரங்கசிப் தவிர சாருவின் அனைத்து நாவலகளையும் வாசித்தேன். அன்பின் மேலான ஒவ்வாமையும், சந்தேகப்பார்வையும் கொண்டு பார்க்கும் ஒரு பார்வையை அது அளித்தது. இது வரை நான் அடைந்த அத்தனை அன்பின் வாசல்களிலும் நின்று அது ஏளனப்பார்வையை வீசியது. இது அன்பல்ல இது காமம், இது அன்பல்ல பரிவு, இது அன்பல்ல பச்சாதாபம், இது அன்பல்ல பயன்படுத்திக் கொள்ளல் என ஒரு குரல் சிரித்துக் கொண்டே சொன்னது போல இருந்தது. இத்தனை சளிப்புகளுக்கு அப்பால் ஒரு அன்பு நிற்க முடியுமா? சாரு ஒரு தளத்தில் நின்று கொண்டு கலைத்துப் போட்டுச் சொல்வதைத் தான் விஷால் ராஜா அதற்கு எதிரான தளத்தில் நின்று சொல்வதாகப் படுகிறது.
பற்று, கருணை, பரிவு, பாசம், அன்பு, காதல், காமம், பிரேமை, பக்தி என தமிழில் இருக்கும் பிரிவுகளை விட ஆங்கிலத்தில் இந்த உணர்வுகளுக்கான பெயர்கள் அதிகம். ஒரு மொழி நவீனமாவதற்கு சான்றாக இந்த உணர்வுக்கான நுண்வரையறை தரும் பெயர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் அமைகிறது. “அறம்” என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகராக பல ஆங்கில வார்த்தைகளை துலாத்தட்டில் வைத்தால் மட்டுமே அது சமன் கொள்ளும். ”அன்பு” என்ற வார்த்தை கூட அப்படித்தான்.
கமலதேவி ஆழமான கேள்விகளை அல்லது மிகவும் சிக்கலான உறவுப் பிரச்சனைகளைப் பேசவில்லை எனினும் அவர் கதைகளில் மனிதர்களுக்கிடையே அன்பு நிகழவில்லை வெறும் பரிவு தான் நிகழ்ந்துள்ளது என்பதை எதைக் கொண்டு வரையறுக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு கல்வியை அளிக்க அனைத்தையும் துறந்து வாழும் நெடுஞ்சாலைப்பறவை சிறுகதையில் வரும் ஜென்ஸி டீச்சரின் செயல்கள் வழி எனக்குத் தெரிவது அன்பு தான்.
ஆணல்ல பெண்ணல்ல, இரு வேறு உயிர்கள், இருவேறு உயிர்களல்ல பிரம்மம் என்ற சிந்தனையை உங்கள் எழுத்துக்களின் வழி வந்தடைந்திருக்கிறேன். அதை உணர்கிறேன். யாவருக்குள்ளும் உறையும் குழந்தைமையை, தெய்வத்தை தான் அதன் பின் தேட ஆரம்பித்தேன். அறிவார்ந்தவர்கள் பல திரைகளை, பாவனைகளைக் கை கொண்டிருக்கிறார்கள். எப்போதும் தரிசித்துவிட முடியாத தெய்வத்தை தன்னுள் பூட்டி வைத்திருக்கிறார்கள். பரிவும், அன்பும் ஒன்று என நான் வாதிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. துயர் கண்டு பரிவு காணும் பாத்திரங்களை மட்டும் தான் கமலதேவி படைத்திருக்கிறாரா என்பதற்கு அவர் படைப்புகளின் வழியே மறுக்கலாம். Pathy, sympathy, empathy என ஒரு வரிசை உள்ளது. யாவும் ஊறி வரும் ஊற்று அன்பாகத்தான் இருக்க முடியும். “உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க” என்று சொன்ன கமலதேவி பேசுவது பரிவல்ல. அன்பு தான்.
*
“மகிழ்ந்து களி கூறு, இன்றிருத்தல் இப்போதிருத்தல்” போன்றவற்றின் மேல் விலக்கம் உள்ளது. அது உணர்வுகளை துச்சமாக மதிக்கிறது. அன்றைய கணத்திற்குப் பின்னான நினைவுகளை என்ன செய்ய என்று தவிப்பவனின் முன் அது வைக்கும் தீர்வு என்ன? அடிப்படை உணர்வுகளை அது புறந்தள்ளுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது. மமங் தாய் அமர்வில் ”ட்ரான்ஸ்” என்பதை இலக்கியத்தின் கூறாக பயன்படுத்துவதைப் பற்றி சுனில் கேட்டார். கார்த்திக் புகழேந்தியிடம் இக்கூறு சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் எழுத வந்த காலத்தில் மரபை வேரை நோக்கி எழுதுவது புதுப் பாதையாக இருந்தது. அவற்றையெல்லாம் முழுவதுமாக நிராகரிக்கும் காலத்தில் உங்கள் பயணத்தை ஆரம்பித்து அந்த சிந்தனையை மிகவும் ஆழமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கொணர்ந்து வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சிக்கலாக உணர்வுப் பூர்வமாக இருப்பவர்களை பித்தர்களாக, அறிவின் படியில் சற்றே கீழ் வைத்து பார்க்கக் கூடிய தன்மையைச் சொல்லலாம். அன்பை வன்முறை என்று சாரு சொல்லும் போதும், இது அன்பல்ல பரிவு என்று விஷால் சொல்லும் போதும் அதை நோக்கி சொல்லப்படுபவர்களுக்கு இணையாகவே இந்த இரு அறிவுத்தரப்பிலும் இல்லாமல் குறைகுடமாக, அலைக்கழிதலுடன் உணர்வுப்பூர்வாக போராட்டத்துடன் இருப்பவர்களும் காயமடைகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் சம நிலையற்றவர்களால் காண்பிக்கப்படுவது தான் அன்பாக மாறிவிடுமா என்ற ஐயம் எழுகிறது. அன்பும் “ட்ரான்ஸ் ஸ்டேட்டாக” பார்க்கும் நிலைமை வந்து விடுமா என்ற ஐயம் எழுகிறது.
ஒருவேளை இன்றிருக்கும் இந்த ட்ராஸ் ஸ்டேட்கள் யாவும் இப்படி அறிவார்ந்து மதிப்பிட்டவர்களால் தான் ஒளிந்து கொண்டுவிட்டதா என்ற எண்ணம் வருகிறது. மதுமஞ்சரியின் நேர்காணலுக்கு வந்த எதிர்வினையில் அது தெரிந்தது. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது குக்கூ தன்மை என்று கிண்டல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இந்த இந்தியப் பண்பாட்டில் தங்களை ஒளித்துக் கொண்டவை யாவும் இவ்வாறு ஏளனம் செய்யப்பட்டதாலோ, அறிவார்ந்து மதிப்பிட்டதாலோ இருக்கலாம். திராவிடச் சிந்தனைகள் வழி நாத்திகம் அறிவார்ந்து நின்று ஆத்திகம் சார்ந்த அனைத்தையும் மறுத்ததிலிருந்து இன்று மரபை வேரை நோக்கி சமூகத்தை முடுக்க பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. உணர்வுகளை அறிவார்ந்த உணர்வுகளற்ற தளத்திலிருந்து மதிப்பிடுவது இக்காலகட்டத்தின் சிக்கலாக உள்ளது.
சாரு அன்பை வன்முறையாகச் சொல்வதும், அதைக் கேட்டு அரங்கமே சிரிப்பதும், அன்பை இத்தனை வரையறைகளுக்கு விஷால் உட்படுத்துவதும் அறிவார்ந்த தளத்தில் நின்று கொண்டுதான். காந்தாரா படத்தைப் பார்த்து புலங்காகிதம் அடைந்து “இது என் கலாச்சாரம்” என்று சொல்பவர்கள் தான் அதை அறிவீனம் என்று மதிப்பிட்டவர்கள். கார்த்திக் புகழேந்தியிடம், மமங் தாயிடம் ட்ரான்ஸ் ஸ்டேட் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது போல இனி ஒரு தலைமுறை கழித்து அன்பின் வெளிப்பாடு பற்றிய கேள்வி கேட்கப்படும். இந்த உளப்பொங்கள்கள், உணர்ச்சிக் கொந்தாளிப்புகள் எங்கோ அறிதாக நிகழும்போது இது என் ஆதிஉணர்வு என்று சுட்டிக் காட்டும்படி நிகழுமோ என்று தோன்றுகிறது. அத்தனை குரூரமாக நிலமை மோசமாகிவிடவில்லையெனினும் இந்த அறிவார்ந்த தளத்தில் குழந்தைமையை தக்க வைத்துக் கொள்வது சிரமாக உள்ளது.
*
நீலி பதிப்பகம்: நவீன எழுத்தாளர் நிரையில் பெண்களின் பங்கு பற்றிய தேடலில் பல பெண் எழுத்தாளர்களை தமிழ் விக்கி வழியாகக் அறிமுகப்படுத்தினீர்கள். தீவிர மைய இலக்கியத்தில் இருந்தும் கூட ஏன் இவர்கள் பெயரெல்லாம் விடுபட்டன என்ற கேள்விக்கான பதிலை ஒரு கடிதத்தில் சொல்லியிருந்தீர்கள். கி.வா.ஜ -வுடன் இருந்த பிணக்கு காரணமாக புதுமைப்பித்தனோ, சு.ரா வோ அவர் உருவாக்கிய ஒரு பெண் நிரையை கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். இலக்கியத்தில் நிகழும் இந்த அரசியல் காரணமாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பை மறுதளிக்கிறது. ஒன்று இன்னொன்று இந்த உலகத்தில் இல்லாதத்து போலவே தனித்து செயல்படுகிறது. எந்த அரசியலுக்கும் ஆளாகாமல் வெறுமே எழுதிக்கொண்டும், வாசித்துக் கொண்டும் இந்த வம்புகளுக்கு பதிலளிக்காமல் வெறுமே எழுதிச் செல்லும் பெண் எழுத்தாளர்கள் கால நீரோட்டத்தில் மறக்கப்பட்டுவிட்டனர். இன்றைய சூழலில் வம்புகளால் மட்டுமே அறியப்படும் பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து சென்று அவர்கள் எழுத்திற்குள் உள் நுழைந்தால் வாசகனாக ஏமாற்றத்தை அளிக்கிறார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டும், விருதுகள் பெற்றுக் கொண்டும், புகழின் வெளிச்சத்தில், சிறு குழுத்தொடர்புடன் இருக்கும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதுவல்லாதவர்களும் இருக்கிறார்கள். எழுதிச் சென்றவர்களில், எழுதுபவர்களில் பெண்ணெழுத்து என்ற தன்மை உள்ளதா என்ற கேள்வி வருகிறது.
எழுத்தாளர் அ. வெண்ணிலாவுடன் விஷ்ணுபுரம் விழாவுக்காக அறையைப் பகிர்ந்து கொண்டேன். காலையில் டீ குடிக்கச் சென்றபோது, அடுத்தடுத்து அவர் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்வுகளை, மனிதர்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். ஆய்வுகளுக்காக நான்கு வருடங்கள் அனைத்திலிருந்தும் விலகி அமைந்திருந்ததன் மன நிறைவைச் சொன்னார். ஓயாமல் செயலில் இருக்க முடிந்த வாழ்வு என்று நினைத்துக் கொண்டேன். அறையில் அணுக்கமாக்கிக் கொண்டபின் தாயும், குடும்பப் பொறுப்புமுள்ள பெண்ணை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “எத்தனை வேலைகளுக்கும் மத்தியில் பிள்ளைகள் சாப்பிட்டார்களா, வாகனம் அவர்களுக்கு சரியாக வந்ததா, பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற எண்ணங்களை மட்டும் விட முடியவில்லை. இயற்கையின் தகவமைப்பு போல. ஆனா முருகேஷ் அப்படியில்லை அவரால் இயல்பாக இருக்க முடியும். நான் தான் எல்லாத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பேன்” என்றார். உண்மையில் அது வேறு ஒரு வெண்ணிலா தான். ஆய்வாளர், அறிவார்ந்தவருக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணுக்கான இயல்புத்தன்மை அது. இந்த நவீனம் அதை கேலி செய்கிறது. இயல்பாக ஊறிவரும் ஒன்றின் மேல் அறிவார்ந்த மதிப்பீட்டை வைத்து நீர்த்துப் போகச் செய்கிறது. அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்காகவென ஒரு பெண் பெண்தன்மையை இழக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தான் திரும்பத்திரும்ப எங்களுக்கு சொல்லிவருகிறீர்கள். பெண்ணுக்குரியதை எழுதுவதற்காக அவள் அவமானப்பட வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. இங்கிருந்து சென்ற வருட ஜா. தீபா அமர்வை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு அங்கு சொல்ல வேண்டியது உள்ளதால் எழுதுகிறேன் என்றார். அதை மட்டும் தான் எழுத வேண்டுமா என்ற கேள்விக்கு “ஆம், இல்லை” என்ற இரு பதிகளும் இருக்கலாம் தான். ஜா. தீபா, கமலதேவி வழியாக இருமுனைப்பட்ட சிந்தனைகளை அடைந்தேன். அ. வெண்ணிலாவிடம் “அப்ப பெண் மட்டுமே சொல்லிவிட முடியும் ஒன்று இருக்கிறது தான் இல்லயா” என்று கேட்டேன். அவர் அதை ஆமோதித்தார்.
இந்த ஒரு வருட காலமாக தமிழ்விக்கி வழியாக எழுந்த கேள்விகளை நீலி மின்னிதழ் வழியாக தேடிப் பார்க்கிறோம் ஜெ. சமீபத்தில் சைதன்யா சொல்லும்போது ”இந்த தமிழ்விக்கி வழியாக, நீலி மின்னிதழ் வழியாக நான் கண்டு கொண்டது பெண்ணுக்கான பிரச்சனைகளை நான் ஐரோப்பிய தன்மையோடே பார்க்கிறேனோ? என்ற சந்தேகத்தை தான். தமிழ் இலக்கிய வரலாறு, குறிப்பாக பெண்ணெழுத்து பற்றிய வரலாறு எழுதப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக இவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளைத் தாண்டி, இவர்களின் சமூகப் பின்புலம், பிரச்சனைகள், எழுதுபொருள், களம் சார்ந்து வரலாற்றுத் தன்மையுடன் கூடிய தொடர் கட்டுரையை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். மகிழ்வாக இருந்தது. இதை மேலும் விரிப்பார் என்றே தோன்றுகிறது. உண்மையில் இந்தச் சித்திரம் தான் தேவைப்படுகிறது. உலக இலக்கியத்தில் புனைவில் பெண்ணெழுத்து என சுசித்ராவும், அபுனைவில் பெண்ணெழுத்து பற்றி சைதன்யாவும், தனி ஆளுமைகள் பற்றி விக்னேஷ், இசை மற்றும் நண்பர்கள் எழுதும் தொடர் கட்டுரைகளுக்கான கோட்டை இங்கு நவீனத்தில் விடுதலைக்கு முந்தைய பெண்ணெழுத்து வரை நீட்டிக் கொள்ளலாம். சங்ககாலத்தில் பெண்பாற்கவிஞர்கள் என எடுத்துப் பிரித்து படித்துப் பார்த்தால் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சங்ககாலத்திற்கென திட்டவட்டமான தன்மை ஒன்றுள்ளது. அங்கு ஆண், பெண் என்ற பேதமில்லாமல் அகவுலகம் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தி இலக்கிய காலத்தில் ஆண் பெண் பேதம் சற்று புலப்படுகிறது. பக்தியில் பெண்ணாக தங்களை உருவகிக்கும் முறையையே உயர்வாகக் கருதியுள்ளனர். ஆழ்வார்களில் ஆண்டாளுக்கு மட்டுமே இறைவனைச் சென்று சேரும் பாக்கியம் கிடைக்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு மட்டுமே இறைவனின் அருகில் அமையும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நுண்ணிய வேறுபாட்டை அவர்களின் கவிதைகள் வழி ஆராய வேண்டும். ஆனால் விடுதலைக்கு முன் ஆரம்பித்த நவீனச் சிக்கல்களை உலக இலக்கியத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. பெண் விடுதலை, சுதந்திரம், அடிமைத்தனம் பற்றி பேசுவதற்கான தேவை வரலாற்று ரீதியாகத்தான் எடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மறுமலர்ச்சி மேற்கத்திய கல்வியின் உந்துதலால் விளைந்தது தான். பெண் விடுதலைச் சிந்தனையும் கூட அவ்வாறே. இவை பற்றிய ஒரு சித்திரத்தை சைதன்யா தொடராக எழுதுவது முக்கியமானது. இந்த செறிவான கட்டுரைகளை தொகுக்கும் முயற்சியாக நீலி பதிப்பகம் அமையும். இது தவிரவும் புழக்கத்தில் இல்லாத பெண் படைப்பாளர்களின் தொகுப்புகள் கொணர வேண்டும். மேலும் இந்த கனவுகள் விரிவடையும். நண்பர்களின் தேடலின் இன்னொரு முயற்சியாகவே நீலி பதிப்பகத்தைப் பார்க்கிறேன். தூரன் விழாவில் நடை செல்லும் போது நீலி மின்னிதழின் கட்டுரையின் செறிவுத்தன்மையின் அவசியத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது “நீலி பதிப்பகம்” என்ற சொல் உங்கள் வார்த்தைகளின் வழி எடுத்துக் கொண்டது தான். இந்த வருடத்தின் மிக முக்கியமான ஒன்றாக தமிழ்விக்கியைப் பார்க்கிறேன். ஆசிரியரின் அருகமைந்து கற்றுக் கொள்வது போன்ற நிறைவை அளித்தது தமிழ்விக்கி. மேலும் அந்தக் கற்றலை செறிவாக்கும் வழிமுறையை இந்த விஷ்ணுபுரம் விழாவில் சொல்லியிருக்கிறீர்கள். அதைக் கட்டாயம் அடுத்த வருடத்திற்கான செயலாக மாற்றிக் கொள்வேன். இந்த வருடம் முழுவதும் செயலால் நிறைத்துக் கொள்வதற்கானதை கொடுத்தீர்கள். நான் என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தளத்தை, செயலைக் காண்பித்ததற்காகவும் மேலும் கனவுகளை நோக்கி முடுக்கிக் கொண்டிருப்பதற்காக நன்றி ஜெ.
*
கேள்விகள் பெருகிக் கொண்டே இருக்கிறது ஜெ. பதில் காண முற்படும்போது இருமுனை அறிவுத்தரப்புக்கும் செல்ல முடியாமல் அலைக்கழிதலாக உள்ளது. ஆணவத்துடன் அறிவார்ந்த தளத்தில் நின்று கொண்டு முதல் முறையாக ”அறிந்தவை, அறிபவை அறியப்படப் போகிறவை என காலம் மூன்றெனில், அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்கக் காலம் ஒடுங்குமா? அறிதல் என்பது என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது எது?” என விஷ்ணுபுரத்தில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டபோது தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை அடைந்தேன். மீண்டும் வெறுமே அறிவார்ந்த மதிப்பீடுகளுக்குள் செல்ல என்னால் முடியாது. ஒரு குறைகுடம்போல உணர்வுப் பெருக்கால் அலைக்கழிக்கப்பட்டு அனைத்துக் கேள்வியையும் எதிர்கொள்கிறேன். முனைகளுக்குச் செல்ல முடியாதெனினும் அறிவின் துணை கொண்டுதான் இவ்வுணர்வுகளையும் புரிய வேண்டியுள்ளது. பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. நீங்களும் குரூரமாக திட்டவட்டமான பதிலேதும் சொல்லாமல் கேள்வியோடு வந்து நிற்கும் போது மேலும் கேள்விகளையே அளிக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களின் வழி நுழைந்த நாள் முதற்கொண்டு கேள்விகளால் தான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். இந்த வாசிப்பு, இலக்கியச் செயல்பாடுகள், எழுத்து என யாவும் பதிலைப் பெறுவதற்காக என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை மேலும் சரியான நல்ல கேள்விகளைப் பெறுவதற்காகத்தான் என்பதை உணர்கிறேன். ஒரு போதும் பதில் கண்டடையவியலாத புதிய கேள்விகளை நோக்கி முடுக்கும் ஆசிரியருக்கு நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ.
பிரேமையுடன்
ரம்யா