நண்பர் பாலமுருகனை முதன்முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் வலைதளத்தின் வாயிலாகத்தான் அறிந்துகொண்டேன். அவரது ‘பேபிக்குட்டி’ என்ற கதையின் சுட்டியை அளித்து, மிகச்சிறந்த கதை என்று தனது அபிப்ராயத்தையும் பகிர்ந்திருந்தார். ‘பேபிக்குட்டி’ சிறுகதை என்னையும் வெகுவாகக் கவர்ந்தது. அதன் தாக்கத்தால், நான் அவரது பிற கதைகளையும் தேடி வாசிக்க விரும்பினேன். ஆனால், அவரது நூல்கள் சிங்கப்பூரில் கிடைக்கவில்லை. சிங்கை நூலகத்திலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், வாசிப்பின் அழகிய விதியொன்று உண்டு. ஒரு நூலை உண்மையில் நம் ஆழ்மனம் விரும்பும்போது, அந்த நூல் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். இந்த அழகிய விதியின்படி அவரது நூல் மட்டுமின்றி, அடுத்த சில வருடங்களில் பாலமுருகனது நட்பும் கிடைத்தது. அதனூடாக அவரது பல சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. அவ்வப்போது அவரது சிறுகதைகளைக் குறித்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இயன்றது.
பாலமுருகனின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் அவரது மொழி. பல படைப்பாளிகளும் சந்திக்கும் முதன்மையான சவால், தங்கள் படைப்பில், மொழி அடர்த்தியாகும்போது அதன் அழகு குறைவதும், அழகு கூடிவரும்போது அடர்த்தி குறைந்து தட்டையாகக் காட்சியளிப்பதுமே ஆகும். படைப்புத் தராசின் இந்த இருதட்டுகளின் சமநிலையைப் பேணுவது சற்றுச் சிக்கலானது. ஆனால், பாலமுருகனுக்கு இது ஒரு சவாலாக இல்லை என்பதை அவரது கதைகளை வாசிக்கையில் உணரமுடியும். கவித்துவம், அடர்த்தி, செறிவு இவையாவும் இவரது மொழியில் நிரம்பியிருந்தாலும் அதற்கு நிகராக வசீகரமும் கலந்திருப்பதால், மொழியில் சமநிலையும் துல்லியமும் துலங்கி வருகின்றன. அதனாலேயே கதை வெகு சுலபமாக வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. அதே சமயம், தனது ஆழத்தால் மிரட்டவும் செய்கிறது இவரது மொழி.
இத்தொகுப்பின் கதைகள் வெகு இயல்பாகத் துவங்கி, சிறிது சிறிதாக வெப்பம் கூடி, முடிவில் வாசகன் மனத்தில் வெடிக்கின்றன. வெவ்வேறு கதைமாந்தர்கள், வெவ்வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், வெவ்வேறு நிலவெளி என இத்தொகுப்பின் கதைகள் காட்டும் உலகம் வியப்பும், விரிவும் நிரம்பியது. கதைகள் மட்டுமல்ல, கதைகூறல் முறையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் பாலமுருகன். நவீனத்துவம், பின்நவீனத்துவம், மாய யதார்த்தவாதம் எனப் பல்வேறு வகைகளில் கதைகளை வார்த்தெடுத்துள்ளார். இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மற்றொரு கதையை வெல்ல முயல்கின்றன. ஒவ்வொரு கதையும் அதனதன் வழியில் முக்கியமானவை.
“ஒரே நிலவுதான் உலகில் உள்ள எல்லாக் குளங்களிலும் தனித்தனியாக மிதந்து கொண்டிருக்கிறது…” என்ற கவிதை ஒன்று உள்ளது. அதே போல, பாலமுருகனின் இத்தொகுப்பிலுள்ள வெவ்வேறு கதைகளிலும், நிரம்பியிருப்பது, கைவிடப்பட்ட மனிதர்களின் துயரமும், மனவலியுமே. தனிமை என்பது பொருண்மையானதல்ல. அது மீப்பொருண்மைத் தளத்தில் பேருருக்கொள்வது என்பதைத் தனது கதைகளில் உணர்த்த முயல்கிறார் பாலமுருகன். ‘அப்பாவின் 10ஆம் எண் மலக்கூடம்’ கதையில் வரும் பெரியவர், ‘ஓர் அரேபியப் பாடல்’ கதையில் வரும் விரோனிக்கா, ‘எச்சில் குவளை’ கதையில் வரும் காயத்ரி, ‘துள்ளல்’ கதையில் வரும் பாட்டிகள் என இத்தொகுப்பின் கதாமாந்தர்கள் தனிமையின் அடியற்ற பள்ளத்தில் விழுந்தபடியிருக்கிறார்கள்.
முற்றிலும் புதிய களங்களிலும் இவரது கதைகள் தோன்றியபடியிருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள ‘அப்பாவின் 10ஆம் எண் மலக்கூடம்’ என்கிற சிறுகதை வாசகர் முன்னறியாத களத்தில் தகைவு கொண்டிருக்கிறது. நவீன வாழ்வுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள ஒரு மனிதன் எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது? காலமாற்றத்தில் மனிதர்களைப் போலவே மலக்கூடங்களும் மாறிவிட்டன. நவீன மலக்கூடங்களுக்குப் பழகாத ஒரு முதியவரின் நினைவில் விரியும் இக்கதை சிறந்ததொரு வாசிப்பனுவத்தை அளிக்கும் கதை. உண்மையில் மலக்கூடம் என்பது என்ன, மலமும் அழுக்கும் கீழ்மையும் எங்கு இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை இது.
பாலமுருகனின் இத்தொகுப்பில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், சிறுவர்களின் உலகை அது விரித்தெடுக்கும் விதம். இத்தொகுப்பின் பல கதைகளிலும் சிறுவர்கள் வந்தபடியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கேயுரிய பிரத்யேகமான உலகமும் அவர்களின் எண்ணவோட்டங்களும் தங்கள் குடும்பத்தை, தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவர்கள் புரிந்துகொள்ளத் தவிப்பதும் வெகு யதார்த்தமாகப் பதிவாகியிருக்கிறது. ‘நீர்ப்பாசி, தேவதைகளற்ற வீடு, நெருப்பு, எச்சில் குவளை, துள்ளல்’ போன்ற கதைகளில் பாலமுருகன் காட்டும் சிறுவர் உலகம் வெகு சுவாரஸ்யமானது. நெருப்பு கதையில் சிறுவன் வினோத் கடைக்கார கிழவியின் கன்னங்களைப் பார்க்கும்போது அவனுக்கு இவ்விதம் தோன்றுகிறது: ‘இருளடைந்த இரண்டு குண்டு விளக்குகள் அவளுடைய இரு கன்னங்களாகத் தொங்கிக் கொண்டிருந்ததையும் வினோத் கவனித்தான். அதை ஓங்கி அடித்தால் சட்டென எரியும் என்றும் யூகித்துக் கொண்டான்’. மொழிக்குச் சிறகு முளைப்பது இதுபோன்ற வரிகளில்தான்.
சிறுவர்களுக்கு அடுத்த படியாக, பாலமுருகனின் கதைகளில் பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். சிறுமியான காயத்ரி முதல் கிழவிகள் வரை எல்லா வயதுப் பெண்களும் இதில் அடக்கம். வாழ்வைத் தொலைத்த கோமதி (மீட்பு), அதனோடு போராடும் சுராயா (நெருப்பு), வாழ்விலிருந்து முற்றிலும் அகன்று செல்லும் காளி (காளி), எனப் பெண்களின் துயரங்களைக் கலாபூர்வமாகக் கையாண்டிருக்கிறார் பாலமுருகன்.
பாலமுருகனின் மொழி உச்சம் கொள்வது அவரது ‘காளி’ என்ற சிறுகதையில்தான். காலங்காலமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள கடக்கப்படாத அல்லது கடக்க முடியாத அகழியை இக்கதையில் கவனப்படுத்துகிறார். இந்தக் கதையில் வரும் காடு உண்மையில் காடல்ல, அது இருண்டு போன மனத்தின் குறியீடு என்று வாசகர் உணர்கையில் கதையின் கனம் கூடிக்கொண்டே போகிறது. இப்படித்தான் அவரவர் மனங்களின் இருண்ட காடுகளில் நம் துணையை ஒவ்வொருவரும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
‘நெருப்பு’ கதையில் நாம் வைக்கம் முகமது பஷீரின் புன்னகையைக் காண முடிகிறது. இக்கதையின் மேற்புறத்தில் உள்ள எளிமையும் பகடியும் அதன் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை மேலும் உக்கிரமாகக் காண்பிக்கின்றன. ஒரு வரியை வாசித்ததும் இயல்பாக சிரித்துவிடுவோம். ஆனால், அடுத்த கணம் அப்படிச் சிரித்ததற்காக வெட்கமும் வருத்தமும் நமக்குள் ஏற்படும். ஒரு சிதைந்த குடும்பத்தின் துக்கத்தையும், வீழ்ச்சியையும், உள்ளோடிய துயரையும், சரிசெய்ய முடியாத வாழ்வின் நெருக்கடியையும், பகடி கலந்த மொழியில் பதிவு செய்கிறது இக்கதை.
விமானம் ஒன்று தரையில் ஊர்ந்து சென்று சட்டென வானில் பறப்பது போலத்தான் இவரது கதைகள், இயல்பான வேகத்தில் பயணித்து, முடிவில் சட்டெனப் பறந்து விடுகின்றன. ‘தேவதைகளற்ற வீடு’, ‘நாவலின் முதல் அத்தியாயம்’ போன்ற கதைகளில் இத்தன்மை வெகு துலக்கமாகத் தெரிகிறது. யதார்த்த நடையில் துவங்கும் இக்கதைகள் முடிவில் மாய யதார்த்தத்தின் மடியில் புதைந்துவிடுகின்றன. ‘நாவலின் முதல் அத்தியாயம்’ கதையில் வடிவேலுவின் அந்த ரகசிய அறைக்குள் மாட்டிக்கொள்ளும் மனிதனைப் போலத்தான் பாலமுருகனின் மொழிக்குள் நாமும் மாட்டிக்கொள்கிறோம். பின்நவீனத்துவக் கூறுகள் கொண்ட ‘நாவலின் முதல் அத்தியாயம்’ என்ற இக்கதை இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று.
ஒவ்வொரு கதையுமே அதனதன் உச்சத்தில் நிலைகொள்வது ஒரு வரம். இக்கதைகளை வாசிக்கும்போது பாலமுருகன் அவரது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் என உணரமுடிகிறது. இந்த உச்ச நிலையிலேயே அவர் எப்போதும் சஞ்சரித்து மேலும் பல காத்திரமும் ஆழமும் நிறைந்த படைப்புகளை அளிப்பார் என்று ஒரு வாசகனாக நான் முழுமனத்துடன் நம்புகிறேன்.
மிக்க அன்புடன்
கணேஷ் பாபு
28.08.2022