இவான் கார்த்திக் எழுதிய ‘பவதுக்கம்’

இவான் கார்த்திக் எழுதிய ‘பவதுக்கம்’ நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அச்சில் வருவதற்கு முன்பே இதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அளித்த பரவசத்தை, ஜெயமோகன் உள்ளிட்ட இலக்கிய உலக நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

புத்தகம் வெளிவந்ததும் முறையான விமர்சனக் குறிப்பொன்றை எழுதலாம் என ஆரம்பித்ததும் பெரும் தயக்கம் எழுந்தது. இறுக்கமாக பின்னப்பட்ட நிகழ்வுகள், அன்றாடத்தில் எதிர்கொள்ள அரிதான கதாபாத்திரங்கள், உறவுகள் சார்ந்தும் உணர்வுகள் சார்ந்தும் மிக நுட்பமான விவரணைகள் போன்றவற்றால் ஆக்கப்பட்ட இப்படைப்புக்கான விமர்சனம் சுவாரஸ்யச் சிதைவாக (spoiler) மட்டுமே எஞ்சிவிடுமோ என்று தோன்றியது. பாவனைகள் ஏதுமின்றி இயல்பாக, அதே சமயம் கச்சிதமான வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைக்கு விமர்சன வழிகாட்டுதல் ஏதும் தேவை இல்லை என்பதே உண்மை. படிக்கத் தொடங்கியதுமே வாசகனை அணுக்கமாக உணரச்செய்யும் கதையாடல் நிகழ்ந்துள்ளது.

நார்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் முன்சின் நோயறையில் மரணம்’ என்ற ஓவியம் ஒன்றைக் கண்டபோது இந்த நாவலுக்கான கரு முளைவிட்டு அதனை தன் கனவுகள் வழியே விரித்தெடுத்ததாகக் கூறுகிறார் இவான் கார்த்திக். தமிழ்ச் சூழலுக்கு அந்நியமானதென்று சொல்லத்தக்க ஐரோப்பியப் பின்னணி கொண்ட ஒரு ஓவியத்தால் உந்தப்பட்டு கற்பனை மூலமாக நிகர்வாழ்வொன்றையும், அவ்வாழ்வெனும் நாடகத்தின் கதாபாத்திரங்களையும் அச்சு அசலாக படைத்து நம் முன் நிகழ வைத்துள்ளார்.

மரணத்தோடும் அதற்குக் காரணமான நோயோடும் துவங்குகிறது ‘பவதுக்கம்’. வஞ்சமும், துரோகமும், ஏமாற்றமும்,  முறைமீறிய உறவும் வாழ்வெனும் பெருங்கடலை நிறைத்திருக்கின்றன. அக்கடலில் எழுவதெல்லாம் துன்ப அலைகளே. இனியதென்று ஒன்று கூட இல்லையா என்ற கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது. ஆனால் வாசித்து முடிக்கையில் கிடைக்கும் நிம்மதி அலாதியானது. நாவலில் இடம்பெறும்  எதிர்மறையானவை அனைத்தும் நம்மை பதட்டத்துக்குள்ளாக்காமல், ‘பவதுக்க’த்தில் தள்ளாமல் ஒருவகை ஆறுதலை, அமைதலை, நிறைவை  அளிக்கின்றன.

இவான் கார்த்திக், ஆனந்த் ஸ்ரீனிவாசனுடன்

மரணத்தைச் சொல்வதன் மூலம் வாழ்வை, நோயின் விவரிப்பு வழியே நல்வாழ்வை, வாழ்வின் பொருளின்மையைச் சுட்டுவதன் மூலம் வாழ்வின் பொருளை நம் முன் படைக்கிறது பவதுக்கம். இந்த முரணே, புனைவுலகில் இப்படைப்பிற்கு தனி இடம் பெற்றுத் தருகிறது.

இவான் கார்த்திக் புதுயுகப் புனைவுலகில் ஒரு இனிய வரவு.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

பவதுக்கம் – இவான் கார்த்திக் வாங்க

முந்தைய கட்டுரைபனிநிலங்களில்.. கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா,கடிதம்