விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
“விஷ்ணுபுரம் விருது விழா 2022” – இனிமை ததும்பும் வருடாந்திர இலக்கிய நிகழ்வு. இரு நாட்களையும் எண்ணிப் பார்க்கையில் இனிமைப் பனுவல் – “மதுராஷ்டகம்” பாடிய கவியின் மனநிலை எதுவாக இருந்திருக்கும் என்று எட்டிப் பார்த்த உணர்வு. மலரை மெல்லத் தொட்டுப் பார்த்து கை விலகிய பின்னும் விரலில் எஞ்சி இருக்கும் பூவின் மகரந்தம் போல ஒரு தித்திப்பு. நன்றிகள் பலப்பல.
இலக்கிய அமர்வுகள் அனைத்தும் அருமை. மிகு உணர்திறன் கொண்டவர்கள் (Highly Sensitive Persons) எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் எனினும் அந்த மிகு உணர்திறனே அவர்களை படைப்பூக்கம் கொண்டு செயல்பட தூண்டுகோலாகிறது என்பதற்கு எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களின் அனுபவப்பகிர்வுகள் சான்று. ஐ டி துறையின் பணிச்சூழல் பற்றிய பொது பிம்பத்தில் உள்ள பிழைகளைக் கண்டு சரியானதைச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பே எழுத வந்ததன் காரணம் என்றார். மேலும், இலக்கிய செயல்பாடு, ஒரு விலகல் தன்மையுடன் “ஒரு சாரி சொல்லிவிட்டால் போதுமே! ஏனிந்த சிக்கல்?” என்ற பார்வையுடன் சில சூழல்களை கவனிக்கும் தன்மையை தந்திருப்பதையும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கமலதேவி அவர்களின் அமர்வு அன்பே அனைத்துயிரையும் இணைக்கும் சரடு என்பதை மீண்டும் மீண்டும் கண்முன் நிறுத்தியது. “உணர்வுகள் ஒன்றே போல் தானே இருக்கின்றன. இதில் ஆணியம் என்ன? பெண்ணியம் என்ன?” என்பதே அவருடனான உரையாடலின் அடிநாதமாக இருந்தது. பெண் எழுத்தாளர் என்று வரையறைக்குள் வைத்து மதிப்பிட வேண்டாம்; வேண்டுமானால் பெண் என்பதனால் சற்று கூடுதல் கறார்தனத்துடன் தன் எழுத்துக்களை அணுகலாம், மதிப்பீடு செய்யலாம் என்று குறிப்பிட்டார். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று தாத்தன் சொன்னதை, பற்பல நூற்றாண்டுகள் கடந்தும் மாறா அகதரிசனமாக, வலிமையுடனும் அதே சமயம் மென்மையாகவும் அவர் உரையாடல் வெளிப்படுத்தியது. ‘அன்பு’ என்ற ஒன்றின் வேறுவேறு வண்ண வெளிப்பாடுகளே / சிறு சிறு சாயல் மாற்றங்களே பற்று, கோபம், வன்மம், வெறுப்பு முதலான பல்வேறு உணர்வுகளும் என்று மிக அன்புடனே அவையில் முன்வைத்தார்.
விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களின் அமர்வு அவரது நீண்ட அனுபவம் மற்றும் தீரா தொடர் வாசிப்பு ஆகியவற்றின் செழுமையைக் காட்டியது. அவரது குன்றா ஊக்கத்தையும் தளரா இலக்கிய ஈடுபாட்டையும் கண்டு ஊக்கமும் வியப்பும் மேலிட்டது. திறன் வாய்ந்த சமையற்கலைஞர்களின் குழாமில் தானொரு சுவைஞன் என்று வெகு அழகாக தனது உரையாடலைத் துவக்கினார். பதிப்புத்துறையின் இடர்பாடுகளையும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளையும் சவால்களையும் முன்வைத்ததோடு, வாசிப்பை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மனிதனைப் பண்படுத்தும் இலக்கியம் மேலும் விரிவான வாசகர் தளத்தைச் சென்றடைய விற்பனையிலும் மொழிபெயர்ப்பிலும் எடுக்கப்பட வேண்டிய முன்முயற்சிகள் பற்றிய அவரது ஆலோசனைகள் வாசிப்பின் மீதான நேசத்தையும் மனிதர்கள் மீதான பாசத்தையும் கோடிட்டு காட்டின.
எழுத்தாளர் அகர முதல்வன் அவர்களின் அமர்வு சற்றே கனத்த மனவுணர்வுகள் சூழ தொடங்கியது என்றாலும், அன்பின் வலிமையையும் அதன் வெளிப்பாடாக நேர்மறை நிலைப்பாட்டையும் நிகழ் அனுபவமாகத் தந்தது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும், கடலில் எறியப்பட்ட போதும் உடலில் கட்டப்பட்ட கல்லே தெப்பமாகும் என்றும் சொல்லித்தந்த மூத்த தாதையின் மொழி, எத்தகைய கடுமையான இடர்ப்பாடு மிக்க சூழலிலும் நேர்மறை அணுகுமுறையையும் நன்னம்பிக்கையையுமே தர வல்லது என்றும்; பாலுக்கு அழுத பாலகனுக்கு இரங்கி, இறை அளித்த பாலின் மிச்சமாய் குழந்தையின் கடைவாயில் சொட்டி நின்ற துளிப்பாலின் எச்சமே தனது வெளிப்பாட்டின் ஊற்றுமுகமாய் இருப்பது என்றும் – மரபின் தொடர்ச்சியையும், அதன் மீட்டெடுக்கும் வலிமையையும் அகர முதல்வன் சுட்டிக் காட்டினார். தனது தீவிர வாசகத் தன்மையே சில சமயம் படைப்பாளராகத் தன்னுள் தயக்கத்தையும் மலைப்பையும் தருவதை வெளிப்படுத்தினார்.
மொழிபெயர்ப்பாளர் குளச்சல் யூசுப் அவர்களின் அமர்வு மிகு சுவாரசியம் கொண்டதாக இருந்தது. அவரது சூழல் தாண்டி இலக்கியத்தில் செயல்பட மொழியாக்க களத்தைத் தேர்ந்தெடுத்ததின் காரணத்தை அவர் மீண்டும் மீண்டும் சொன்ன விதம் அரங்கத்தைப் புன்னகைக்க வைத்தது. பஷீர் அவர்களின் எழுத்தை தமிழுக்கு கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் மொழியாக்கம் என்று வரும்போது எழும் பொதுவான சிக்கல்களையும் (கதைக்களம் சார்ந்த பண்பாடு, பிரத்யேக வட்டார வழக்கு, மலையாள-சமஸ்க்ருத-அரபுச் சொற்களை கையாளுதல்) குறிப்பிட்டார். தானே முதல் வாசகனாய் நின்று தனது மொழியாக்க தரத்தில் கவனம் கொள்வதையும், சீர் செய்து திருப்தி கொள்ளுந்தோறும் இருக்கையில் இருந்து எழுந்து சில அடிகள் நடந்து தானே அகம் மகிழ்ந்த பின் வந்தமர்ந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுவதையும் சுவைபடக் கூறினார். மலையாள இலக்கியங்களை அம்மொழியிலேயே வாசித்துணர வேண்டும் என்று முயன்று மொழி கற்றதையும் மொழியாக்கம் செய்யும் போது இணையான தமிழ் சொற்களைக் கண்டடைய மேற்கொள்ளும் முயற்சிகளையும் விவரித்தார். சங்கப்பாடல்களை மலையாளத்திற்கு கொண்டு சென்றதையும் இஸ்லாமிய நூல் தொகுப்பிற்கு எடிட்டராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அமர்வு மரபு அவருக்கு கையளித்ததையும், மரபுத்தொடர்ச்சியில் பின்னுள்ள கண்ணிகளைத் தொடர்ந்து செல்லுந்தோறும் நிகழும் கண்டடைதல்களையும் விளக்குவதாக அமைந்தது. வாசிப்பு மற்றும் படைப்பிக்கச் செயல்பாட்டினால் தன வாழ்வில் நிகழ்ந்த முன்நகர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பணிக்கு சேர்ந்த இடத்தில இருந்த நூலகமும், கி.ரா. அவர்களுடனான உறவும் தன்னை செழுமைப்படுத்தியதை க் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் வெண்ணிலா அவர்களின் அமர்வு ஒரு காலகட்டத்தையே கண் முன் கொண்டு வந்தது. திராவிட இயக்கத்தில் பற்று கொண்டிருந்த தனது தந்தையினால் தனக்கு கிடைத்த வாசிப்புவெளி, சுதந்திரம் மற்றும் அறிவுச்சூழலுடனான தொடர்பு ஆகியன தனது ஆளுமையை வடிவமைத்ததை, தனது இலக்கிய செயல்பாட்டை விரிவடைய வைத்ததைக் குறிப்பிட்டார். புனைவு – அபுனைவு எதுவாயினும் வரலாற்று செய்திகளை/தரவுகளை சேகரிக்க மேற்கொள்ளும் களப்பணிகள் கோரும் உழைப்பை, அதில் உள்ள சவால்களை தன அனுபவங்களைக் கொண்டு விளக்கினார். வரலாற்றுத் தொடர்புடைய தரவுகளைக் கண்டடையுந்தோறும் அடையும் புதிய திறப்புகளையும் அதனால் எழும் நிறைவையும் சுட்டிக் காட்டினார்.
கண்முன்னே இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்ந்த இந்த அமர்வுகளுக்குப் பிறகு திரு. செந்தில் அவர்களின் ‘வினாடி-வினா’ நிகழ்ச்சி காலம் கடந்தும் கலை ஆளுமைகளை நினைவுகளின் ஊடே கண்டெடுக்கும் களிப்பினைத் தந்தது. உற்சாகமும் பரபரப்பும் கொப்பளிக்க அனைவரும் ஆவலுடன் பங்கெடுத்தனர்.
கற்றதும் பெற்றதும் என அகம் நிறைத்த முதல் நாள் நிகழ்வுகள்!
எண்ண எண்ண மகிழ்ச்சி தரும் நினைவுகள்!
நன்றி.
அன்புடன்
அமுதா பாலசுப்ரமணியம்