அச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா ?

இந்தியாவைப் போற்றும் ஆசிரியருக்கு,

கோவையில் சிக்னலுக்குக் காத்திருக்கும் ஏராளமான பொது மக்கள் முன் நடந்த பட்டப்பகல் கொடூரப் படுகொலையைப் பார்த்திருப்பீர்கள்.

ஓராண்டுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் காவலர் வெற்றிவேல் படுகொலையும், அன்றாடம் சாலை விபத்துகளில் வட்டமாக நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் நமது மனோபவமும், அதேசமயம் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரோ , அகப்பட்ட திருடனோ கிடைக்கும் போது எளிதில் திரண்டு மிருகத்தனமாகத் தாக்கும் துணிவும் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது.

நான் அங்கிருந்தால் என்ன செய்திருப்பேன்.( நண்பர்களுடன் இருந்தால் மட்டும் தடுக்க முயன்றிருப்பேன்) ஒரு ஆட்டோ ஓட்டுனர் மட்டும் முயன்றதாக செய்தி.

1. இந்த மெத்தனமும் , அச்சமும் , கும்பல் வன்முறையும் நமது இந்திய சாதி குணமா ?

2. நமது தேசத்தின் ஆன்ம பலம் எனக் கூறிக் கொண்டிருப்பது எப்பொழுதும் தோற்கும் அறமா , வெறும் பிரமையா ?பொருளற்ற சுய போற்றுதலா?

3. உண்மையில் ஒரு மரபின் பண்பாடும்,ஆன்ம ஞானமும் நெருக்கடி நிலையில் எங்கும் செயல்படாதா ? அவ்வாறு செயல்படாத பண்புக்கு என்ன மதிப்பு ? இதுவரை எங்கும் செயல்பட்டதில்லையா ?

4. நம்மைவிட உயர் பண்பாடு ஏதேனும் உள்ளதா ? நமதை உதறி அதை ஏன் நாம் பின்பற்றக் கூடாது ?

நேரடி பதிலுக்காகக் காத்திருக்கும் ,
கிருஷ்ணன்.

கோவை நிகழ்ச்சியை நாம் இப்போது ஊடகங்கள் முன்னால் பார்ப்பதனால் பெரிதுபடுத்தி உணர்ச்சிவசப்படுகிறோம். கிராமத்தில் பிறந்தவர்கள், ஒருகாலகட்ட வரலாற்றை அறிந்தவர்கள் இதில் ஆச்சரியப்படமாட்டார்கள்.

ஒருவரை சிலர் நடுத்தெருவில் தாக்கும்போது எப்போதும் எங்கும் உடனே மக்கள் எதிர்வினை வந்துவிடுமா என்ன? இல்லை. அதில் கூட்டாக ஒரு நீதியுணர்வு செயல்படுகிறது. அந்த நீதியுணர்வு சீண்டப்படவேண்டும். அப்போதே மக்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது கள்ளச்சாராய கோஷ்டியைச்சேர்ந்த சிலர் வெட்டிக்கொன்றார்கள். ஊரே ஒதுங்கித்தான் நின்றது. செத்தவனும்கொன்றவனும் அடங்கிய அந்த உலகின்மேல் ஒட்டுமொத்த சமூகத்துக்கே இருந்த விலகல் அதற்குக் காரணம்.

இன்றைய நகரங்களில் பலசமயம் இத்தகைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நிழலுலக மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்றன. பொது இடங்களில் கொலைகள் என்பவை தென்தமிழ்நாட்டில் சாதாரணம். மக்கள் விலகித்தான் செல்கிறார்கள். அது அவர்களின் நீதியுணர்ச்சியைப் பாதிப்பதில்லை. அந்த உலகில் அவர்கள் சம்பந்தப்பட முடியாதென அவர்கள் அறிவார்கள். ஆனால் ஒருமுறை ஒரு பெண் தாக்கப்பட்டபோது மக்கள் எதிர்வினையாற்றினார்கள்.

நானே இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் என்ன செய்திருப்பேன்? நான்கு குடிகாரர்கள் ஒரு குடிகாரனை அடிக்கும்போது ஒருகுடிகாரனுக்காகப் பிற குடிகாரர்களிடம் சண்டைக்கா செல்வேன்?  கண்டிப்பாக மாட்டேன். அது குடிகாரர்களின் உலகம். அடிபட்ட குடிகாரன் செய்தது என்ன என்றுயாருக்குத்தெரியும்? நம் நாட்டில் குடிகாரர்கள் தெருச்சண்டையிடுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அது கொலையில் முடிவதைப் பெரும்பாலும் எதிர்பார்ப்பதில்லை.

தமிழகத்தில் எப்போதாவது கூடக் குடிக்காதவர்களின் எண்ணிக்கை குறைவு, ஆனால் குடிமீது ஆழமான அவமதிப்பு உள்ளது. குடிகாரர் ஒருவர் தெருவில் விழுந்து கிடந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை நம் மக்கள்.

இதே மனநிலை உலகமெங்கும் உள்ளது. மேலைநாடுகளில் பொது இடங்களில் போதை அடிமைகள் விழுந்துகிடப்பதை, வலிப்பு வந்து சாகக்கிடப்பதை, அடிதடிகளில் ஈடுபட்டு ரத்தம் வழியக் கிடப்பதை எவருமே பொருட்படுத்துவதில்லை என்பதைக் கண்டிருக்கிறேன். நியூயார்க்கில் நடுத்தெருவில் கறுப்பினப்பெண் ஒருத்தி ரத்தத்துடன் ஓடக் கறுப்பினப் பையன்கள் துரத்தும்போது வண்டிகளை நிறுத்தி நிதானமாக வழிவிட்டபின் செல்வதை கவனித்திருக்கிறேன். கேட்டபோது அவர்கள் வாழ்க்கையில் வன்முறை ஒரு பகுதி என்றார்கள்

என் நீதியுணர்ச்சி சிவில்சமூகத்திடம் தான். வம்புதும்புக்குப் போகாத எளிய மனிதர்களிடம் மோதுபவர்களையே நான் பொருட்டாகக் கொள்வேன். இதே தமிழ்நாட்டில் வங்கியில் திருடிவிட்டு ஓடிய நக்சலைட்டை மக்கள் எறிந்தே கொன்றிருக்கிறார்கள். முன்பு நாகர்கோயில் அருகே நடுத்தெருவில் பெண்ணைத் தாக்கியவர்களை மக்கள் கல்லெறிந்து வீழ்த்தியிருக்கிறார்கள்.

அத்துடன் இந்த வகையான குடிமை உணர்ச்சி கிராமியசமூகத்தில் இருக்குமளவுக்கு நகரில் இருக்காது. கிராமத்தில் மக்கள் திரளாக உணர்கிறார்கள்.நகரம் அவர்களைத் தனிமனிதர்களாகவே உணரச்செய்கிறது. அவர்கள் அரசையும் ஊடகங்களையுமே நம்புவார்கள். நீதி நிலைநாட்டப்படவேண்டுமென விரும்புவார்கள். ஆனால் அதைத் தாங்களே செய்யமாட்டார்கள்.  அதற்கான தைரியமும் உடனடியாகத் திரளக்கூடிய மனநிலையும் அவர்களிடம் இருக்காது

இன்னும் இரண்டு நிகழ்சிகள் இதேபோல கோவையில் நிகழ்தால் அங்கே அரசுக்கெதிரான மக்கள் வெறுப்பு பெருகும். அதை அரசும் அறியும். அந்தக் கூட்டு உணர்ச்சியும்  குடிமைப்பண்பு சார்ந்ததே.

நான் இந்தியாவைப் போற்றுவது இங்குள்ள மக்கள் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்பதனாலோ, இங்கே பிற எங்கும் இல்லாத நாகரீகம் நிலவுகிறது என்பதனாலோ, இங்கே குடிமைப்பண்பு  ஓங்கி நிற்கிறது என்பதனாலோ அல்ல. நேர் மாறாகவே சொல்லிவந்திருக்கிறேன்

இந்த நாட்டின் மேல் எனக்குள்ள மதிப்பு என்பது  இங்கு இருந்த பண்பாட்டின் ஆழமும் அகலமும் காரணமாகத்தான். அதன் சாரம் இன்றும் இங்கே ஓர் அன்றாட மதிப்பாக இருந்துகொண்டிருப்பதனால்தான் இங்கே இன்னும் ஜனநாயகம் இருந்துகொண்டிருக்கிறது

ஆகவே பொத்தாம்பொதுவாக மிகைப்படுத்தவேண்டியதில்லை

ஜெ

 

[குழும விவாதத்தில் இருந்து]

முந்தைய கட்டுரைஅத்வைதம் – ஒரு படம்
அடுத்த கட்டுரைஒரு பேட்டி