படைப்பாளிகளின் மேற்கோள்கள்

அன்புள்ள ஜெ.

உலக இலக்கியங்கள் – மேற்கோள் குறித்து ஒரு கேள்வி.

பல விவாதங்களில், திரிகளில் மேற்கத்திய , உலகப்படைப்பாளிகளையும், படைப்புகளையும் மேற்கோள் காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன.  உதாரணத்திற்கு – தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் மற்றும் பலர்.

தற்சமயம் உங்கள் தளத்தில் “இலியட்டும் நாமும்” படித்துக்கொண்டிருக்கிறேன்.

அவை உலக அளவில் பிரபலமைடைந்ததற்கு அதன் தரமும், பரவலாக்கப்பட்ட முயற்சியும் காரணம்.
ஒரு அற சிந்தனையின், தத்துவ விவாதத்தின், இலக்கிய அறிவின் தேடலில் நமது (நம் படைப்புகளும், தத்துவவாதிகளும்) ஞானமும் , அனுபவமும், முதிர்ச்சியும் எந்த அளவிலும் குறைந்ததல்ல. ஒரு பண்பாடும், சமூகமும் தழைத்தோங்க அது பலரால் அறியப்படுவதும், விவாதித்து உள்வாங்கப்படுவதும் நல்ல அடித்தளமாய் அமையும்.

என் கேள்வி:

• இதுபோல் நம் படைப்பாளிகளும் / ஆக்கங்களும் அங்கு மேற்கோள் காட்டப்படுகின்றனவா?
• நம்மிடையே உள்ள படைப்புகள் are better than some the world’s acclaimed creations. அவை அந்த இடத்தை அடைந்து நாம் பெருமிதம் கொள்ள சமூகமாய் என்ன செய்ய வேண்டும்? (என் கேள்விக்கு அடிப்படையே இந்த ஏக்கம் தான்.)
• உலக இலக்கியங்களின் பரிச்சயம், புலமை, நம் கண்ணோட்டத்தில் அதை ஆராயும் திறன் கொண்ட உங்களைப்போல் ஒருவரின் கருத்தென்ன?
• நம் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் highlight செய்யப்படுவதல்லாமல், அச்சமூகத்தின் integral part ஆக மாறும் வாய்ப்புகள் உண்டா??

(இந்தக் கேள்வி / சிந்தனை எத்தனை sensible என்று தெரியவில்லை, ஆனால் ரொம்ப நாட்களாய் ஒரு குடைச்சலாய் இருந்தது. கொட்டிவிட்டேன்!!!!)

தெளிவுபடுத்துங்கள்

சதீஷ் (மும்பை)

***

அன்புள்ள சதீஷ்

இது முக்கியமான விஷயம். ஒரு படைப்பாளி மிகப்பரவலாக அறியப்படுவதும், படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் திறப்பதும் அந்த ஆக்கங்கள்மேற்கோள்களாகக் காட்டப்படும்போதே. சிந்தனையில் சட்டென்று அவை மின்னி வெடிக்கும்போதே அவற்றின் புதிய சாத்தியங்கள் திறக்கின்றன. எப்போது ஓர் அன்றாடப் பேச்சில்கூட சகஜமாக ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்.

[எலியட்]

தமிழில் திருக்குறள் சார்ந்து அப்படி பல திறப்புகள் இருப்பதைக் காணலாம்.  திருக்குறள் இங்கே பலரால் பேசப்படுகிறது, மேடையில் மேற்கோள்காட்டப்படுகிறது. ஆகவே அது சார்ந்து ஒரு திறப்பு சட்டென்று உருவாகிறது. உதாரணமாகச் சிலநாட்கள் முன்னால் ஒரு பேருந்தில் ஒரு கிழவர் சொன்னார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப- ன்னு குறள் சொல்லுது. எழுத்து இல்லாட்டிக்கூட வாழ்ந்திடலாம். எண் இல்லாம இருக்க முடியுமா?. எழுத்து தெரியாத லட்சம்பேரு இருப்பாங்க. எண்ணத்தெரியாதவன் மெண்டல் ஆஸ்பத்திரியிலே இல்லா இருப்பான்?’

[எமர்சன்]

ஆனால் இங்கே பிற எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை மேற்கோளாகக் காட்டும் வழக்கம் மிகமிகக் குறைவு. இங்கே பேரரறிஞராகச் சொல்லப்படும் அண்ணாத்துரை அவர்களை,  மகா புரட்சியாளராக சொல்லப்படும் ஈ.வே.ராமசாமி அவர்களை  சாதாரணமாக மேற்கோள்காட்டிப்பேசும் ஒருவரைக்கூட  நான் கண்டதில்லை. காரணம் சுவரில் எழுதப்பட்ட சில்லறை வரிகள் வழியாகவே அவர்களை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அவை சிந்தனையைத் தூண்டுவன அல்ல.

எழுத்தாளர்களின் நூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும்.

மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள். தமிழில் மேற்கோள் மூலமே அதிக பாதிப்பைச் செலுத்திய இரு மூலச்சிந்தனையாளர்கள் எஸ்.என்.நாகராஜனும் மு.தளையசிங்கமும். அவர்களின் பாதிப்பு சகசிந்தனையாளர்களிடம்தான்.

[மு. தளையசிங்கம்]

அதேபோல செவ்விலக்கியங்களை மீள்வாசிப்பு செய்வதும் பலகோணங்களில் அவற்றை மறு ஆக்கம் செய்வதும் விவாதிப்பதும் அவற்றை சமூக மனத்தில் விரியச்செய்யும். அதற்கு மேற்கோள்கள் இன்றியமையாதவை.  பேசும்தோறும் இலக்கிய ஆக்கங்கள் நம் மனத்தில் குறியீடுகளாக ஆகி வளர்கின்றன.  இலக்கிய அரட்டை இல்லாத இடத்தில் இலக்கியம் வளராது.

ஒப்பீட்டு நோக்கில் மேலை நாட்டுக் காப்பியங்கள் தொடர் மீள்வாசிப்புகள்,விவாதங்கள் வழியாக நம் பேரிலக்கியங்களை விடப் பல மடங்கு பிரம்மாண்டமாக  வளர்ந்துள்ளன. அதனூடாகச் சமகாலத்தைச் சேர்ந்தவையாக அவை  ஆக்கப்பட்டுள்ளன. பண்பாட்டின் அடித்தளமாக நிறுவப்பட்டுள்ளன. இலியட்டுக்கும் கம்பராமாயணத்துக்கும் உள்ள தூரம் இதுதான்.

[எஸ்.என்.நாகராஜன்]

மேலும் செவ்வியலக்கியங்களை ஓவியங்களாக, நாடகங்களாக, பாடல்களாக ஆக்கும்போது அவை இன்னும் பிரம்மாண்டமாகின்றன. சமீபத்தில் நான் இலியட் வாசித்தபோது எனக்கு இணையத்தில் கிடைத்த ஓவியங்கள் பெரும் கிளர்ச்சியை அளித்து அக்காவியத்தை ஒரு கனவாக மாற்றின.

நான் எழுதிய ‘சு ரா நினைவின் நதியில்’ சுந்தர ராமசாமியை நூற்றுக்கணக்கான மேற்கோள்கள், குட்டிநிகழ்ச்சிகள், தருணங்கள் வழியாக அறிமுகம் செய்யும் ஒரு நூல். அதில் வரக்கூடிய ராமசாமி அவரது புனைவுகள் அளிக்கும் ராமசாமியின் செறிவான வடிவம் என நினைக்கிறேன். அஞ்சலிக்கட்டுரையாக ஆரம்பித்த அந்நூல் இன்றுவாசிக்கும்போது பக்கம் பக்கமாகச் சிரிக்கவைக்கும் வரிகளுடன் கவித்துவ தருணங்களுடன் இருக்கிறது.

நவீன இலக்கியங்களை வாசிப்பவர்கள் ஆசிரியர்களின்பெயர்களைச் சொல்வதே குறைவு. மேற்கோள்களைச் சொல்வது அதைவிடக் குறைவு. இது நமது அலட்சியத்தைக் குறிக்கிறதென்பதே உண்மை. சிலசமயம் தாழ்வுணர்ச்சியையும் குறிக்கிறது. சுந்தர ராமசாமி பெயரைச் சொன்னால் நம்மைக் குறைவாக மதிப்பிடுவார்களோ என்ற அபத்தமான உணர்ச்சியால் தெரிதாவைத் தப்பாக மேற்கோள்காட்டுவதே நம்மிடையே அதிகம்

சரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள். நம் அன்றாடப்பேச்சில் இலக்கியம் இல்லை என்பதே நம் இலக்கியத்தின் தேக்கநிலைக்கு முதல் காரணம்.

ஜெ

[குழும விவாதங்கள்]

முந்தைய கட்டுரைஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி
அடுத்த கட்டுரைஆயிரம்கரங்கள்